செவ்வாய், 30 டிசம்பர், 2014

பிகே


எனக்கு இந்தி தெரியாததால் அவ்வளவாக இந்தி படம் பார்ப்பது இல்லை. இந்த படத்தை நண்பர்கள் அனைவரும் ஆக ஓகோ என புகழ்ந்தாலும். ஏதோ ஒரு நல்ல கருத்தை அமீர்கான் சொல்ல முயன்றிறுப்பதாகவும் கேள்விபட்டே பார்க்க வந்தேன். கண்டிப்பாக ஏமாற்றம் இல்லை நல்ல படமே சொல்ல வந்த கருத்தையும் ஓரளவு எந்த பிசிறும் இல்லாமல் சொல்லி இருக்கிறார்.

நாம் மற்ற கிரகங்களை ஆராய்ச்சி பண்ணுவது போல் வேற்று கிரகங்களில் வாழும் நம்மை போன்ற மனித இனம் நம் புவியை ஆராய்ச்சி செய்கிறார்கள். அந்த ஆராய்ச்சிக்காக அமீர்கான் புவிக்கு வருகிறார். வந்த உடனே தன் கழுத்தில் அணிந்திருக்கும் ரிமோட்டை பறிகொடுக்கிறார். இந்த முதல் காட்சியிலேயே புவி எவ்வளவு ஆபத்தான திருடர்கள் வாழும் இடம் என்பதை நமக்கும் அமீர்கானுக்கும் உணர்த்திவிடுகிறது. அதன் பிறகு அந்த ரிமோட்டை எப்படி கண்டுபிடித்து அவர் கிரகம் செல்கிறார் என்பதே மீதி கதை. அமீர்கானின் அப்பாவி தனமான பார்வையும் அதில் வரும் சோகமும் எப்படி பட்ட கல்நெஞ்ச காராக இருந்தாலும் கரைத்து அழவைத்துவிடும் அவ்வளவு சிறப்பான நடிப்பு.

ஒரு மனிதன் புவியில் பிறக்கும் போது எந்த மதத்தையும் சாராமல் மனிதனாக பிறக்கிறான் ஆனால் அவன் பெற்றோர்கள் மற்றும் அவனை சுற்றியுள்ள உலகம் அவனுக்கு மதச்சாயம் பூசிவிடுகிறது. ஆனால் அப்படி பெற்றோர்கள் சுற்றம் அற்று இருக்கும் ஒருவர் எந்த மதத்தை தழுவுவார்? அப்படி ஒரு குழப்ப நிலையில் எல்லா மதத்தையும் எல்லா கடவுளையும் வணங்கி தன்னுடைய ரிமோட்டை பெற முயற்ச்சிக்கிறார் அமீர்கான். இதில் அனைத்து மதங்களையும் அதன் மூட பழக்கவழங்களையும் சாடி இருக்கிறார். கடவுளை அடைய வழிகாமிக்கிறேன் என்று திரியும் அனைத்து சாமியார்களும் பித்தலாட்டகாரர்கள் என்பதை ஆணித்தரமாக கூற ஒரு சாமியாரின் வேஷத்தை கலைத்து அவரிடம் இருக்கும் தன் ரிமோட்டை மீட்கிறார். தேவையற்ற எந்த சண்டைகாட்சிகளோ வன்முறை காட்சிகளோ இல்லாமல் சொல்ல வந்த மிக கடினமான விசயத்தை நகைசுவையாக சொல்லி இருக்கிறார்.

அமீர்கான் புவிக்கு வரும் அதே நேரம் பெல்ஜியத்தில் கதாநாயகி ஒரு பாகிஸ்தானியை சந்திக்கிறார். ஆரம்பத்தில் அழகாக பெசிகொண்டிருந்த நாயகி அவன் பாகிஸ்தானி என்று தெரிந்தவுடன் விலக முயல்கிறார். அப்போது அந்த பாகிஸ்தானி பெயரை கேட்டு பழகு நாட்டை கேட்டு பழகாதே என்ற அர்த்தத்தில் ஒரு பாடல் பாடுகிறார். இது இந்தியர் பாகிஸ்தானியருக்கு மட்டுமல்ல எல்லா நாட்டினர்க்கும் பொருந்தும் பாடல் ஏன் நம் இந்திய தேசத்தில் உள்ள எல்லா மாநிலத்திறுக்குமே பொருந்தும். பாடல் முடிவில் இருவரும் காதலர்கள் ஆகிறார்கள். இதை நாயகியின் பெற்றோர் எதிர்கிறார்கள் அவர்கள் குருவாக வணங்கும் ஒரு சாமியார் மூலம் அறிவுரை வழங்க வைக்கிறார்கள். அந்த சாமியார் அவன் உன்னை ஏமாற்றி ஓடி விடுவான் என்கிறார். அதே போல் நடந்துவிடுகிறது. விரக்த்தியில் வெறுத்து இந்திய திரும்புகிறாள் கதாநாயகி. பின் இவர்கள் இருவர் காதல் எப்படி பிரிந்தது உண்மையிலையே அந்த பாகிஸ்தானி விட்டு ஓடிவிட்டானா இல்லை வேறு எதுவும் நிகழ்ந்ததா? இறுதியல் அவர்கள் ஒன்னு சேர்வார்கள்? அது எப்படி என்பதே இவர்கள் கதை.

என்னடா ரெண்டு கதையா இருக்கேன்னு பார்க்கிறீர்களா. நான் சொல்லிய விதம் அப்படி ஆனால் படம் பார்க்கும்போது அப்படி ஒரு உணர்வு இருக்காது. நான் சொல்ல ஆரமித்தால் முழு கதையும் சொல்லி உங்கள் படம் பார்க்கும் ஆர்வத்தை கேடுத்துவிடுவேன் என்பதாலே அங்க இங்க என கொஞ்சம் கொஞ்சமாக கொதறி வைத்துள்ளேன். மிக அழகான திரைக்கதை எந்த இடத்திலும் இழுவை இல்லை. இசை எல்லா இந்திபட பாடல்கள் போல அதே டண்டணக்கா பாடல் அப்பறம் காதல் பாடல் இருந்தது. எனக்கு இந்தி தெரியாதாலும் இதுவே இந்த பாடல்களை கேட்பது முதல் முறை என்பதாலும் அதிகமாக ரசிக்க முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக பாடல்கள் மொக்கையில்லை.

நிறைய பெரிய விசயங்களை சின்ன சின்னதாக சொல்லியிருக்கிறார்கள் இதே போன்ற பல விசயங்களை நம்ம விவேக் அவர்கள் நிறைய படத்தில் சொல்லியிருக்கிறார். இது உண்மையில் பார்த்து அனுபவிக்க வேண்டிய படம் தான். அதனால் நீங்களே பார்த்து தெரிஞ்சுகோங்க. நான் சொல்ல வந்தது படம் நல்லா இருக்கு அவளோ தான்.

மொத்தத்தில் பிகே ஓகே ஓகே.......



வியாழன், 25 டிசம்பர், 2014

பாஞ்சாலி ஏன் 5 கணவர்களை மணந்தார்?

 

நளாயினி எனும் பெண் தனுக்கு வரும் கணவன் இந்திரனை போன்றவனாக இருக்க வேண்டும் மேலும் அவன் மாபெரும் வீரனாக இருக்க வேண்டும் பலசாலியாக இருக்க வேண்டும் தர்மம் மாராதவனாக இருக்க வேண்டும் முற்றும் உணர்ந்தவன் வருங்காலம் அறிந்தவன் என 14 அம்சங்கள் கொண்டவனாக இருக்க வேண்டும் என்று சிவனை நோக்கி கடும் தவம் புரிகிறாள்... சிவன் வரம் தர வருகிறார் அவரிடம் தன் வேண்டுதலை கேட்க்கிறாள்... இத்தனை அம்சங்கள் உள்ள ஒருவனை படைப்பது என்பது கடினம் மேலும் அவன் இந்த உலகத்துக்கு அச்சுறத்தலாக மாறும் வாய்ப்பும் உண்டு என்று அறிவுறுத்துகிறார்... மேலும் இத்தனை அம்சங்களும் உள்ள கணவனை உன்னால் சமாளிப்பது மிக கடினம் நீ பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடலாம் உன் தேவைகளை அதாவது எதிர்பார்ப்புகளை குறைத்துகொள் என்று மேலும் அறிவுறுத்துகிறார்... ஆனால் நளாயினியோ முடியவே முடியாது என தன் வரத்தை ஐந்து முறை கேட்டார்... சிவனும் தந்துவிட்டேன் போ என்றார்.... அதனாலே நளாயினி அடுத்த ஜென்மத்தில் ஐந்து கணவர்களை மணக்க நேரிட்டது... பல துன்பங்களை அனுபவிக்கவும் நேரிட்டது...  இதில் நீதி என்ன வென்றால் இந்த கதையை அப்படியே இப்போது உள்ள சூழ்நிலைக்கு எடுத்துகொண்டோம் என்றால் இப்போது உள்ள பெண்கள் எப்படி பட்ட கணவர் தனக்கு எதிர்பார்க்கிறார்கள்?? சொல்லி தெரியவேண்டியதில்லை எனக்கு உலக உத்தமன் பணக்காரன் கார் வைத்திருக்க வேண்டும் இப்படி பல பல கண்டிசன்களை போடுகிறார்களா இது பேரழகி வேண்டும் நகை வேண்டும் கார் வேண்டும் என கேட்க்கும் ஆண்களுக்கும் பொருந்தும்... இப்படி இவர்கள் எதிர்பார்ப்பை அதிகபடுத்தி கொண்டே இருப்பதால் இவர்கள் அனைவரும் அந்த பாஞ்சாலியை போல துன்பத்துக்கே ஆளாவார்கள்...... மேலும் பாரதகதை படி அர்ஜுனன் பாஞ்சாலியை வென்று வருகிறான் அப்போது தருமன் தன் தாயிடம் தம்பி பரிசு ஒன்று கொண்டு வந்திருக்கிறான் என்கிறான் அப்போது குந்தி அதை ஐவரும் சமமாக பங்கிட்டுகொள்ளுங்கள் என்கிறார்... அது என்ன பரிசு என்றே தெரியாமல் இது என் ஆணை இதை மீறக்கூடாது என்றும் கூறி விடுகிறார்.... இதற்ப்பறம் பல மன போராட்டங்கள் ஒருவர் மட்டும் மனந்துகொள்ளட்டும் மற்றவர் துறவறம் மேற்கொள்ளலாம் என்று முடிவு எடுக்கிறார்கள்.... காரணம் தாய் தன் ஆணை என்று ஒன்றை சொல்லிவிட்டால் அதை யாரும் மீர கூடாது என்பது அந்த கால வழக்கம் நம்மை போல இல்லை....   அப்பறம் அப்படி இப்படி கலந்து பேசி ஐவரும் மணக்க முடிவெடுக்கிறார்கள்... சில நிபந்தனைகளுடன்..... இதில் நீதி என்னவென்றால் ஆணையிடும் அதிகாரம் உள்ள ஒருவர் அது என்ன என்றே தெரியாமல் அதன் பின்விளைவுகளை ஆராயாமல் ஆணையிட்டால் விளைவு எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதே.... நம்மூரில் ஒரு முதல்வர் பின் விளைவுகளை ஆராயாமல் அரசு அதிகாரிகளை கைது செய்யுங்கள் என்று ஆணையிட்டதன் விளைவு நமக்கு தெரியும்... அதே போல ஒரு தலைவன் இவனை கொலைசெய்து விடு... இந்த ஜாதிகாரர்களை அந்த மதத்தை சேர்ந்தவர்களை கொல்லுங்கள் என்று கொஞ்சமும் யோசிக்காமல் ஆணையிட்டால்  விளைவு என்ன ஆகும்???  இதே போல இன்னமும் பல பல விஷயங்கள் புதைந்து கிடக்கிறது.... பாஞ்சாலி ஒரு தனி பெண் அல்லஅவர் ஒட்டுமொத்த பெண்களின் ரூபம்... அவரின் துகில் அன்று உரியபட்டது இனி இந்த உலகத்தில் எந்த ஒரு பெண்ணுக்கும் அவமானம் நேர்ந்து விட கூடாது என்பதை சொல்லவே.... ஒரு பெண்ணின் மானத்தை பறிக்க நினைத்தால் குலமே அழியும் என்பதற்கு சான்றே துரியோதனனும் குரு வம்சமும்....  மேலும் நீங்கள் பாரத கதையை அனுபவித்து படிப்பீர்கள் ஆனால் இன்னமும் பல விடயங்கள் கிடைக்கும்...... என்னால் முடிந்த அளவு விளக்கம் கொடுத்திருக்கிறேன்... இன்னமும் இதில் பல உள் அர்த்தங்கள் இருக்கலாம் அதை ஆராயும் அளவுக்கு என் ஞானம் வளரவில்லை என்பதே உண்மை... ஆதால் நீங்களே படித்து உணர்வது சிறந்தது.... :)

திங்கள், 15 டிசம்பர், 2014

லிங்கா


லிங்கேஸ்வரன் என்ற லிங்கா - பழைய ஸ்டைலில் ரஜினியை பார்த்திருக்கிறோம் புதுசா சிவாஜி எந்திரன் போன்ற படங்கள்ல பார்த்தோம். இப்போ இந்த படத்துல கே.எஸ். ரவிக்குமார் பழைய ரஜினியை மனதில் வைத்து புதுசாக எடுக்க முயற்ச்சித்திருக்கிறார். இதில் வெற்றி பெற்று இருக்கிறாரா என்றால் ஓரளவு வெற்றி என்றே சொல்லலாம். சரி இப்போ படத்துக்கு வருவோம். 

முல்லை பெரியார் அணையை பென்னி குயிக் என்ற ஒரு ஆங்கிலேயர் அவர் சொத்துகளை எல்லாம் விற்று மக்களின் பஞ்சம் தீர்க்க கட்டி கொடுத்தார் என்பது வரலாறு. அப்படி ஒருவர் இந்தியாராக இந்தியாவின் ஒரு ராஜாவாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கற்பனையே இந்த கதை. அந்த கதையை நேரடியாக சொல்லாமல் இப்போது இருக்கும் கால சூழலில் ஆரமித்து ப்ளாஸ் பேக்கில் சொல்லி இருக்கிறார்கள்.

ரஜினிக்கு வயசாகி விட்டது என்பது தெளிவாக தெரியும் அளவுக்கு மேக்அப் மிகவும் பொருந்தாமல் இருந்தது. மற்ற படி அவரின் நடிப்பில் எந்த குறையும் சொல்ல முடியாது. முதலில் பேரன் லிங்காவாக அறிமுகமாகிறார் அதிரடியான ஆரம்ப பாடலுக்கு பிறகு திருடன் என்று தெரியவருகிறது. திருடுவதில் ஜகஜால கில்லாடியாக இருக்கிறார். இவருடன் சேர்ந்து சந்தானம் பாலாஜி காருணாகரன் போன்ற நண்பர்கள் சுவாரசியமான திருட்டுக்கு நடுவே காமெடிகள் செய்கிறார்கள். சந்தானம் அவரின் இயல்பான அடுத்தவர்களை நக்கல் அடித்து செய்யும் காமெடியை தான் செய்திருக்கிறார் என்றாலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இயன்ற அளவு நன்றாகவே செய்திருக்கிறார். இந்த திருடர்கள் ஒரு பெரிய திருட்டாக செய்தால் நல்ல வருமானம் வரும் என்று சேட்டு மதன் பாபு சொன்னவுடன் அப்படி ஒரு பெரிய திருட்டை செய்து எக்குத்தப்பாக மாட்டிகொள்கிறார்கள். இந்த சூழ்நிலையில் போலிஸ் கையில் மாட்டாமல் இருக்க கதாநாயகி அனுஷ்காவின் உதவியுடன் சோலையூர் என்ற கிராமத்துக்கு ஓடுகிறார்கள். 

இவர்களை அந்த ஊருக்கு அழைத்து போக வேண்டும் என்பதற்காக போலீசிடம் இவர்களை மாட்டி விட்டதே அனுஷ்கா தான். அனுஷ்காவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் வர வர யோகா டீச்சர் சரியாக பயிற்சி செய்வது இல்லை போல. கொஞ்சம் எடை கூடிட்டார். சில பாடல் காட்சிகளில் ரஜினியின் அருகே சில மார்டன் உடைகளை அணிந்து ஆடும் போது ஒரு மல்யுத்த வீராங்கனை போலவே காட்சியளித்தார். இவருக்கும் மேக்கப் சொதப்பலாகவே இருந்தது. இவர் ரஜினியை அழைத்துக்கொண்டு சோலையூர் வருகிறார். அங்கே ரஜினி வந்து தான் அதாவது ராஜா லிங்கேஸ்வரன் வாரிசு வந்து தான் கோவிலை திறக்க வேண்டும் ஒரு பெரியவருடன் ஒரு ஊரே எழுபது வருடங்களாக காத்துகொண்டு இருக்கிறது.  இப்போது அந்த கோவிலை திறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதற்கான காரணம், அந்த ஊரில் ராஜா லிங்கேஸ்வரன் கட்டிய அணை ஒன்று இருந்தது அதை பரிசோதனை செய்ய வந்த அதிகாரி மர்மமான முறையில் கொல்லபடுகிறார் இறப்பதற்கு முன் கோவிலை திறந்தால் தான் உங்களால் ஊரை காப்பாற்ற முடியும் என்று பெரியவரிடம் சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார்.

தன்னுடைய தாத்தா ராஜா லிங்கேஸ்வரனின் பெருமை அறியாத பேரன் லிங்கா அவர் திறக்க வந்திருக்கும் கோவிலில் இருக்கும் லிங்கம் விலையுயர்ந்த மரகத லிங்கம் என்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார். அப்போது எக்குதப்பாக மாட்டிகொள்ள அப்போது கோவிலில் பூஜை செய்வது போல் பாவுல செய்து தப்பிக்க முயல்கிறார் ஆனால் ஊரில் சிலருக்கு இவர் மீது சந்தேகம் எழ அதை தீர்க்க இவர் எப்பேர்ப்பட்ட பரம்பரையை சேர்ந்தவர் என்று சொல்ல தொடங்கி ராஜா லிங்கேஸ்வரரின் கதை சொல்கிறார் அந்த ஊர் பெரியவர். 

அதில் ராஜா லிங்கேஸ்வரர் எவ்வளவு பெரிய கொடை வள்ளல் என்றும் அவர் மக்களுக்காக இந்த அணையை எவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் வெள்ளைகாரர்களின் அடக்குமுறைகளுக்கு மத்தியில் கட்டி முடித்தார் என்பதே அந்த கதை. ராஜாவாக வரும் ரஜினி தன்னுடைய அட்டகாசமான ஸ்டைல் மூலம் ஒரு ராஜாவாகவே நம் மனதில் பதிந்துவிடுகிறார். நடிப்பும் அட்டகாசம். ராஜா ஏழ்மையாக மாறும் போது தனக்கு இந்த வாழ்க்கை தான் ஆனந்தம் தருகிறது  பணம் புகழ் அதிகம் தரும் வேலையை விட எனக்கு மன நிம்மதி தரும் வேலையை செய்வதே ஆனந்தம் எனும் பொது மெய் சிலிர்க்கிறது அருமை. ஆனால் ஏனோ பெரியவர் இந்த ராஜாவின் கதையை சொல்லி முடித்த போது தியட்டரில் நமக்கு நான்கு இரவு மூன்று பகல் முடிந்தது போல் இருந்தது. சொல்ல வேண்டியதை இன்னுமும் நறுகென்று சொல்லி இருக்கலாம். ராஜாவுக்கு ஜோடியாக வரும் சொனாக்க்ஷி ஒரு கிராமத்து பெண்ணாக மனதில் நிற்கவில்லை மேலே அனுஷ்காவை சொன்னது  போல் அவருக்கு நிகறான ஒரு மல்யுத்த வீராங்கனை போலவே இருந்தார். அநேக படங்களிலும் இடையில் சில சீரியலிலும் கூட நாட்டமையாக வந்த விஜயக்குமார் இந்த படத்திலும் அதே வேடத்தை செய்திருக்கிறார். ராதாரவி பட்டையடித்து கொண்டு பாரதியாரின் பக்கத்தானாக புதுமை பேசியது நன்றாக இருந்தது. சுந்தர்ராஜன் அவருக்கு கொடுத்த குள்ள நரி வேலையை சிறப்பாகவே செய்திருந்தார். அனைவரும் தேர்ந்த நடிகர்கள் அவர் அவர் பங்குக்கு பின்னி எடுக்கும் போது இடை இடையில் பல ஓட்டைகள் இருந்தற்கு இயக்குனரின் ஓட்டையே காரணம் என்று தான் சொல்ல வேண்டும்.

பெரியவர் ப்ளாஸ் சொல்லி முடிக்கும் போது படம் பார்த்துகொண்டிருக்கும் நாம் அனைவரும் ஒரு இரண்டு படம் பார்த்து முடித்த களைப்போடு அமர்ந்திருப்போம். அப்போது மூன்றாவது படம் ஆரமிக்கும். அதாவது கோவிலை திறக்க சொல்லிவிட்டு ஒரு அதிகாரி இறந்தாரே அவர் இறந்ததற்கு காரணம் அந்த ஊர் எம்.பி வில்லன் அந்த ஊரில் ராஜா லிங்கேஸ்வரன் கட்டிய அணையை வலுவாக இல்லை என்று கூறி வேறு ஆணை கட்டுவதன் மூலம் மிக பெரிய பணம் பார்க்க திட்டம் தீட்டுகிறான். மேலும் அணை வலுவாக இருப்பதை அறிந்து அதை வெடிகுண்டு வைத்து சேத படுத்தவும் துணிகிறான். இந்த வில்லனிடம் இருந்து எப்படி அணையையும் ஊரையும் காப்பாற்றுகிறார் என்பது படத்தின் முடிவு.

இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஒரு மிக பெரிய விசயத்தை சொல்ல முற்பட்டு அதை சரியாக சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். இப்போது தமிழர்களுக்கு இருக்கும் தண்ணீர் பிரச்சனைகளுக்கு நம்மூரில் தண்ணீரை சேமித்து வைக்க போதிய அணைகள் இல்லை என்பதும் ஒரு காரணம். காவிரியில் வெள்ளம் வரும் போதெல்லாம் எவ்வளவோ நீர் விரயமாக போகிறது. அதை சேமிக்க நம்மிடம் ஒரு பெரிய அணை இருந்தால் விரையமாகும் நீரை நாமும் சேமித்து வைத்திருக்கலாம். கர்நாடககாரன் திறந்துவிடாத போது அந்த அணையின் மூலம் நம் தேவைகளை நிறைவு செய்திருக்கலாம். ஒருவேளை அப்படி ஒரு அணை கட்டப்படுமானால் அந்த அணை கட்டப்படும் இடத்தை சுற்றியுள்ள பல கிராமங்கள் பாதிக்கப்படும் அப்படி பாதிக்க படும் போது அரசு அவர்களுக்கு வேறு இடங்களில் நிலங்கள் கொடுத்தால் மக்கள் ஒத்துகொள்வார்களா? சரி அரசு செய்யும் போது அவர்கள் ஒத்துகொண்டு தான் ஆக வேண்டும் அப்படி இருக்க சுகந்திரம் வாங்கி இத்தனை ஆண்டு காலங்களில் இப்படி ஏதாவது அணை கட்ட எந்த ஒரு அரசாங்கமாவது முயற்சி எடுத்திருக்கிறதா? இல்லை என்பது தான் உண்மை. வெள்ளைகாரனை குறை கூறிக்கொண்டே இன்னுமும் அவன் கட்டி கொடுத்த அணைகளை வைத்து தான் ஓட்டிகொண்டிருக்கிறோம் என்பது இன்னும் கேவளமான உண்மை.

இது மட்டுமல்ல நம் அண்டை மாநிலங்கள் அணை பழுதாகிவிட்டது என்று அவ்வப்போது கூப்பாடு போட்டு கொண்டு இருக்கிறார்களே ஏன்? ஒரு அணை கட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விசயமா! எவ்வளவு பொருள் செலவு ஏற்படும். ஒரு தெருவிற்கு சிமென்ட் ரோடு போடும் காண்ட்ரேக்ட் எடுப்பவனே அந்த தெருவிற்கு வேலை முடிக்கும் முன் அதே தெருவில் இரண்டு வீடு கட்டி முடித்து விடுகிறான். என்றால் ஒரு அணை கட்டுவதன் மூலம் எவ்வளவு பணம் அடிக்கலாம் என்று அவர்கள் திட்டம் தீட்டி கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்கள் கணக்கிற்கே விட்டுவிடுகிறேன்.  லிங்கா படத்தை நான் இந்த கோணத்தில் தான் பார்த்தேன் ஆனாலும் இதில் பல சுவாரஸ்யங்கள் சுவையில்லாமல் இருந்ததால் சொல்ல வந்த கருத்துகள் முழுமையாக சென்றடையவில்லை என்றே நினைக்கிறேன்.

போதும் இப்போ மறுபடி படத்துக்கு வருவோம். இசை ரகுமான் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை அருமை. ரஜினியின் ஆரம்ப பாடல் மட்டும் எப்போதும் இருப்பதை விட கம்மி தான் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். நடனம் ரஜினி கையை இடுப்புக்கு நேரே வைத்து இடுப்பையும் கையையும் ஆட்டுகிறார் பின்னாடி இருப்பவர்களும் அதை பின் தொடர்கிறார்கள். சண்டை காட்சிகள் முன்னெல்லாம் ரஜினி என்ன செய்தாலும் கை தட்டுவோம் இப்போ அவர் லாஜிக் மீறி ஏதாவது செய்தாலும் அது குறையாக தெரிகிறது. ரயில் மீது ஓடி கொண்டே அவர் போடும் சண்டை காட்சி அருமை. பாரசெட் மீது தொங்கிகொண்டு வெடிகுண்டை கால் பந்தாடுவது சிரிக்க வைத்துவிட்டது. 

ஒவ்வொருவர் மீதும் ஆங்காங்கே பழி போடாமல் ஒட்டுமொத்தமாக இயக்குனர் மீதே பழி போட்டுவிடுவோம். ஏன்னா அவர் தான் பல இடங்களில் ஓட்டை ஓட்டையாக விட்டு கோட்டையையே விட்டுவிட்டார். மிகவும் பெரிய கதை மிகவும் பெரிய படம் சுவாரஸ்யத்திற்கு பல இடங்களில் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. இன்னுமும் சுருக்கி சொல்ல வேண்டியதை தெளிவாக சொல்லி இருக்கலாம்.

மொத்தத்தில் லிங்கா ஜவ்வாக இழுக்கபட்டு லிங்காகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகா....... ஆனது







ஞாயிறு, 26 அக்டோபர், 2014

பால்காரன்


காலை எழுத்தவுடன் பசுவிற்கு முன்னிரவு ஊற போட்டு வைத்திருந்த பருத்தி கொட்டை புண்ணாக்கு தவிடு போன்றவை கலந்த தண்ணீரை வைத்து அதன் பசி ஆற்றுவான்.
பின் பசுவின் கன்றை அவிழ்த்து விட்டு அது பசுவின் மடு மீது மோதி பசுவுக்கு பால் சுரந்தவுடன் கன்றையும் பசுவையும் ஏமாற்றி மதுவின் மீது தண்ணீர் தெளித்து பால் கரப்பான்.
தன் மாடுகளுக்கு வைக்கோல் போன்றவற்றை போட்டுவிட்டு. அந்த பாலை டிப்போக்களிலோ அல்லது நேரிடியாகவோ சென்று விற்பனை செய்கிறான். பிறகு மறுபடி வீட்டுக்கு வந்து வைக்கோலை தின்று முடித்து அசை போட்டு கொண்டிர்க்கும் பசுக்களுக்கு மீண்டும் வைக்கோல் போடுகிறான்.
பின் தன்னிடம் இருக்கும் சைக்கில் அல்லது பைக் அல்லது பொடி நடையாகவோ சென்று வயல்வெளிக்கு சென்று புல் அறுக்கிறான். புல் விளையாத தருணங்களில் எங்காவது சென்று புல் வாங்கி வருகிறான். வயல்வெளியில் அறுக்கப்படும் புல்லும் இலவசம் இல்லை அதற்கும் அந்த வயல்வெளி சொந்தகாரனுக்கு ஒரு கணிசமான தொகை தரவேண்டியுள்ளது.
பின் அறுத்த அல்லது வாங்கிய புல்லை தன் பசுக்களுக்கு கொண்டு வந்து போடுகிறான். புல் மற்றும் வைக்கோல் சரியாக விளையாத சமையங்களில் அதன் விலை மிக அதிகமாக ஏறிவிடும் வேறு அந்த சூழ்நிலையும் அவன் தன் தலையில் தான் சுமக்க வேண்டும். சரி புல் விலை தான் அதிகமாக இருக்கிறதே புல் போடாமல் விட்டு விடுவோம் என்று இருந்தால் மாட்டில் பாலின் அளவு குறைந்து விடும். ஒரு முறை குறைந்து விட்டால் மீண்டும் பாலின் அளவை ஏற்றுவது அவ்வளவு சுலபம் இல்லை. மேலும் சில வாடிக்கையாளர்களையும் இழக்க நேரிடும். ஆதலால் புல் புண்ணாக்கு வைக்கோல் போன்றவை என்ன விலையாக இருந்தாலும் வாங்கித்தான் ஆக வேண்டும்.
இடையில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மாடுகளை மேய்ச்சலுக்கு வெளியில் அழைத்து செல்ல வேண்டும். பின் அதனை நன்கு குளிப்பாட்ட வேண்டும் குறைந்தது வாரம் ஒரு முறையாவது. பின் அவைகள் தங்கி இருக்கும் கொட்டாய்களையும் அங்கு குவியல் குவியலகாக இருக்கும் சனத்தை அள்ளி சுத்த படுத்த வேண்டும். சில நேரங்களில் குறிப்பாக வெயில் காலங்களில் மாடுகள் கட்டியாக சாணம் போடாமல் கலிய தொடங்கிவிடும் அப்போது மாடுகளும் சரி கொட்டாயும் சரி மிக வேகமாக அழுக்காகி விடும் அதனால் இரண்டையும் அடிக்கடி சுத்த படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.
இடையில் மதியம் மற்றும் இரவு நேரத்தில் மாட்டிற்கு பருத்தி கொட்டை புண்ணாக்குடன் தண்ணி காட்ட வேண்டும். நம் தெருக்களில் உள்ள வீடுகளில் ஒவ்வொரு பிளாஸ்டிக் குடங்களை வைக்க வேண்டும் அதில் அவர்கள் போடும் மீந்து போன கலினி தண்ணி கஞ்சி முதலியவற்றை சேர்த்து அவற்றையும் மாடுகளுக்காக கொடுக்க வேண்டும்.
இப்படி தான் ஒவ்வொரு நாளும் ஒரு பால்காரனின் வாழ்க்கை நகர்கிறது.
இங்கே மேலே சொல்ல பட்டிருப்பது சாதாரண ஒரு பால்காரர் பற்றியது தான். பண்ணை வைத்திருப்பவர்கள் கதை வேறு. மேலே இருப்பது என் சொந்த அனுபவமே.

கத்தி


இந்த படத்தை எதிர்த்த பல்லாயிரக்கணக்கானவர்கள்ள நானும் ஒருத்தன். இந்த படத்தைன்னு சொல்றத விட இந்த படத்தோட தயாரிப்பளர. அப்பறம் ஏதோ எப்படியோ சரிகட்டி படத்தை வெளிவிட்டுடாங்க. அதை பத்தி இங்க நம்ம ரொம்ப ஆராய்ச்சி பண்ண வேண்டாம். இந்த படத்தை பாக்கவே கூடாதுன்னு ஒரு முடிவுல இருந்தேன். அப்பறம் படம் வெளி வந்ததுக்கு அப்பறம் படத்தை பத்தி ஒரு ஹைப் உருவாச்சு அந்த ஹைப்ல தான் பல பேர் இப்போ படத்தை பார்த்துகிட்டு இருக்காங்க அதுல ஒருத்தன் தான் நான். இந்த ஹைப் கிட்ட தட்ட விஸ்வரூபம் படத்துக்கு உருவான அதே ஹைப் தான்.

படத்துல ப்ளஸ்ன்னா அவங்க சொல்லிருக்க கருத்து தான். அதை ரொம்ப அழுத்தமா திருத்தமா சொல்லிருக்காங்க. நம்ம நாட்டோட முதுகெலும்பு கிராமங்கள்ன்னு காந்தியடிகள் சொன்னாரு அந்த கிராமங்களோட முதுகெலும்பே விவசாயம் தான். இப்போ அந்த முதுகெழும்ப எப்படி கார்பரேட்காரன் ஒடிச்சுகிட்டு இருக்கான். அதுக்கு எந்த எதிர்ப்புமே தெரிவிக்காம இதை ஒரு கிராமத்தான் பிரச்சனை என்பது போல நகரத்தில் உள்ள நாம் நினைத்துக்கொண்டு எப்படி கார்பரேட் கம்பெனிகளுக்கு நம்மை அறியாமலே நாம் ஆதரவாக இருக்கிறோம்ன்னு சொல்லிருக்காங்க.

படத்துல ரெண்டு விஜய் ஒருத்தரு ஜீவானந்தம் ஒருத்தரு கதிரேசன். கிட்டத்தட்ட பழைய எம்ஜிஆர் பாணி தான் ஒருத்தர் வீரர் சூரர் இன்னொருத்தர் கோழை. கதிரேசன் திருடன் தண்டனை கைதி வீரன். கொல்கொத்தா ஜெயில்ல இருந்து தப்பிச்சவன் நேர சென்னைக்கு வரான். அங்க இருந்து பாங்காக் போக ஏற்பாடு பண்ணி ஏர்போர்ட்ல அன்கிதாவ (அதாவது சமந்தாவ) பாக்குறான். அவ எதோ பொய்யா இதான் என் நம்பரு நீங்க இந்தியாவுல இருந்தா உங்கள தான் கட்டிக்குவேன்னு சொல்லிட்டு போக. உடனே அந்த பொய்ய நம்பி நம்மாளு கதிரேசன் சென்னைல இருந்து அந்த பொண்ண பிக்கப் பண்ணலாம்ன்னு முடிவு பண்றாரு. என்னங்கடா இது ஜெயில்ல இருந்து தப்பிச்ச ஒருத்தன் போலிஸ் தேடிகிட்டு இருக்கு மாட்டுன மறுபடி புடிச்சு ஜெயில்ல போட்டிருக்வாங்க இப்போ இவன் லவ் பண்ணி என்ன பண்ணபோறான் அதுவும் அந்த பொண்ணு உண்மை தான் சொல்லுச்சான்னே தெரியல இவள நம்பி சென்னைலயே இருக்கபோறான்னான்னு நீங்க லாஜிக் சிந்திக்கிற ஆளா இருந்தா இந்த படம் பூராம் நீங்க சிந்திச்சுகிட்டே தான் இருக்கணும்.

சரி கதைக்கு வருவோம். தப்பிச்ச கத்தி என்கிற கதிரேசன் ஒரு சந்தர்பத்துல இவரு மாதிரியே இருக்க ஜீவாவ ஒரு கொலை முயற்ச்சில இருந்து காப்பாத்தி அந்த சந்தர்பத்த தனக்கு சாதகமா பயன்படுத்தி ஜீவாவ கொல்கொத்தா ஜெயிலுக்கு அனுப்பிட்டு தான் ஜீவா மேற்பார்வைல இருந்த முதியோர்  இல்லத்துல தான் தான் ஜீவான்னு போயிடுறாரு. சிலபேர் கத்திய ஜீவான்னு நினைச்சு பல லட்சங்கள் கோடிகள் குடுத்து உங்க ஆசிரமத்துல இருக்க பெரியவங்க பத்து பேர்கிட்ட கையெழுத்து வாங்கித்தா இன்னும் நிறைய தரோம்முன்னு சொல்லறாங்க. பணத்தாசை புடிச்ச கத்திக்கும் எப்படி ஜீவாவோட உணமையான கதை தெரிய வருது அதற்கப்பறம் கத்தி எப்படி ஜீவாவோட இடத்துல இருந்து ஜீவா செய்ய வேண்டியதெல்லாம் செய்து முடிக்கிறார்ங்கறது மீதி கதை. படத்துல விவசாயத்தை பத்தியும் நம்ம ஊர்ல நடக்குற கார்பரேட் கொள்ளைகள் பத்தியும் நாட்டில் நடக்கும் சில ஊழல்கள் சில பண முதலைகளின் அடாவடிகள் பற்றி சொல்லும் வசனங்கள் நாம் அடிக்கடி சமூக வலைதளங்களில் படித்த விசயங்களாக இருந்தாலும். கத்தியாக விஜய் பேசிய போது இன்னும் அழுத்தமாகவும் அனேக மக்களை சென்றடைய ஏதுவாகவும் இருக்கும்.

ஜீவானந்தம் பத்தி சொல்லனும்ன்னா படத்துல இவர விட சமந்தா அதிக காட்சிகள்ள வராங்க ஆனாலும் ஊரு உலகமே ஜீவனத்ததை பத்தி தான் பேசுது. அதுக்கு காரணம் இவர காப்பதுறதுக்காக ஆறு பெரியவங்க மொத்தமா தற்கொலை பண்ணி அதை வீடியோ எடுத்து செய்தியா பரப்புறது தான். அதுக்கு முதல்ல ஜீவாவ ஏன் காப்பாத்தனும்ன்னு சொல்லிடறேன் அதாவது தன்னூத்துன்னு ஒரு கிராமம் அந்த கிராமத்து இளைஞன் தான் ஜீவானந்தம். அவரு ஒரு ஹைட்ரோலோஜி படித்தவர் தன் கிராமத்துல இருக்க மிக பெரிய ஊத்தை கண்டுபிடிக்கிறாரு. அந்த ஊத்து இருந்த இடத்தை வில்லன் அவன் வில்லத்தனத்தின் மூலம் தன்னோட கார்பரேட் கம்பெனிக்காக ஆக்கிரமிச்சுரான். இதை எதிர்த்து கேட்ட மக்களுக்கு விவரங்கள் சொல்லுவது ஜீவா தான்னு தெரிஞ்சு அவன கைது பண்ணி ஊறவே மிரட்டுறாங்க. இந்த விஷயத்தை மீடியா மூலம் வெளில கொண்டு வந்து ஜீவாவ காப்பாத்த தான் பெரியவர்கள் தற்கொலை செய்துகொண்டாங்க. இப்படி பெரியார்களின் தியாகம் மற்றும் கத்தியின் அதிரடி சரவெடி நடவெடிக்கைகள் மூலம் இறுதியில் கிடைக்கும் வெற்றி என அத்தனை தியாகங்களுக்கும் மூலகாரணமாக பார்க்கப்படும் ஜீவானத்திற்கு படத்தில் பெரிய முக்கியத்தும் கொடுக்காதது ஏன் என்று புரியவில்லை. குறைந்தது கத்திக்கு கொடுத்ததில் ஒரு பாதி முக்கியத்துவமாவது கொடுத்திருக்கலாம்.

கிளைமாக்ஸ் காட்சிகளில் கத்தியை வில்லன்கள் சதக் சதக் என குத்தும் போது கதாநாயகி இருந்திருந்தால் கூட ஒரு கல் எடுத்து எறிந்திருப்பாள் இல்லை ஓடிப்போய் வில்லன் கையாவது கடித்து வைத்திருப்பாள். என்னதான் ஜீவா சண்டை தெரியாதவராக இருந்தாலும் தன கிராமத்துக்காக ஊரை கூட்டி போராட தெரிந்த ஒரு போராளி. ஒரு கிராமத்துகாரர் வேறு பொதுவாக நகரத்தில் வசிப்பவர்கள் சில சந்தர்ப்பங்களில் நமக்கு எதுக்கு வம்பு என ஒதுங்கி போவார்கள். கிராமத்துகார்கள் இப்படி தனக்காக ஒருவர் அடிவாங்கி கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டாரகள். ஜீவாவை இந்த அளவு கோழையாக காமித்திருக்க தேவையில்லை.

ஜீவானந்தம் உடைய வில்லன் கார்பரேட் கம்பெனி ஓனர் முகேஷ் இவருக்கு பெரிய வில்லன் தோரணை இல்லை என்றாலும். ஒரு கார்பரேட் கம்பனி ஓனர் லுக் இருந்ததது. அவருக்கு கொடுத்த வேலையும் அவர் சரியா செய்திருக்கிறார். இவ்ளோ பெரிய கார்பரேட் ஓனர் கொடூரமான வில்லன்கிட்ட நான் மேல சொன்ன சண்டைன்னா என்னன்னே தெரியாத ஜீவாவ கொல்றத்துக்கு கூட ஒரு நல்ல ரவுடி இல்லாதது ஏன்னு தெரியல? இவருடைய காட்சிகள் எதுவம் அந்த அளவுக்கு மனசுல பதியல அதனால அப்படியே விட்ருவோம்.

கதாநாயகி எல்லா பாட்டுக்கும் வந்து நல்லா ஆடினாங்க சூப்பர். காமெடி விஜய் ஒரு ரெண்டு மூணு இடத்துல நல்லா பண்ணிருந்தாரு. சதீஸ் காமெடிக்கு படத்துல விஜய்யே நாளைக்கு வந்து சிரிக்கிறேன்ன்னு சொல்லுவாரு. அவரே அப்படி சொல்றப்போ நமக்கும் அப்படி தான் இருந்தது.

இசை தீம் இம்மார்டல்ஸ் ஆல்பத்தோட காப்பின்னு சொன்னாங்க இருந்தாலும் நாம இப்போ தானே முதல்ல கேக்குறோம். அதனால ரொம்பவே நல்லா ரசிக்கும் படி இருந்தது. எல்லா பாட்டுமே நல்லா இருந்ததுன்னு நான் சொல்ல வேண்டாம் நீங்களே நிறைய முறை கேட்டு இருப்பீங்க. பின்னணி சில இடங்களில் பின்னி எடுத்திருக்கிறார் மிக சில இடங்களில் தலை வலியும் ஏற்படுத்தி இருக்கிறார். என்ன இருந்தாலும் ரசிக்கும் படியான பாடல்கள் தந்ததிற்கு அனிருத்துக்கு ஒரு சபாஷ் போட்டே ஆக வேண்டும்.

படத்தில் மிக பெரிய பலம் அதன் மைய கருத்து மற்றும் அதனை சொல்லிய விதம் அதற்காக பயன்படுத்த பட்ட வசனங்கள். பலவீனங்கள் மற்றும் சொதப்பகள் இயக்குனர் தமிழக மக்கள் லாஜிக் என்றால் என்ன என்று தெரியாவதவர்கள் என்று நினைத்து விட்டதும். பல கதாபாத்திரங்களை எந்த முடிவும் இல்லாமல் அப்படி அப்படியே தொங்கலில் விட்டு விட்டுதும். உதாரணத்துக்கு ஒரு கலெக்டர் வந்து 25 லட்சம் பணம் தருவார் அவர் ஏன் கொடுத்தார் அவர் வில்லனின் ஆளா? கடைசியில் அவர் என்ன ஆனார்?  வில்லனை ஒரு காட்சியில் கூட சந்திக்கவோ பேசவோ இல்லையே? அடுத்து ஜீவாவை கொல்ல ஒரு கூட்டம் இருப்பது போல் கத்தியை கொல்லவும் ஒரு வில்லன் ஒரு கூட்டம் இருக்கிறது ? இவர்கள் என்ன ஆனார்கள்?

படம் மசாலா மாஸ் படம் என்பதற்காக கதாநாயகன் ஒரு மிக பெரிய போராட்டத்தில் ஈடு பட்டு கொண்டிருக்கும் போது. திடீரென்று ஒரு பிணத்தின் முன் கதாநாயகியுடன் குத்து பாட்டுக்கு நடனம் ஆடுவதெல்லாம் ரசிக்கும் படியாக இல்லை. திரைகதை பின் பாதியில் சற்று வேகமாக போனாலும் ஆரம்பத்தில் படு இழுவையாகவே இருந்தது.

ஆயிரத்தெட்டு ஓட்டைகள் இருந்தாலும் அத்தனை ஓட்டைகளையும் அடைக்க அவர்கள் எடுத்துக்கொண்ட விவசாயம் என்ற மைய கருத்தும் அதை சொல்ல முற்பட்ட விதமும் நன்றாகவே பயன்பட்டிருக்கிறது. அதைவிட முக்கியமாக ஒரு கருத்தையும் இங்கு சொல்லி இருக்கிறார்கள் அது என்னவென்றால் நம் நாட்டின் மீடியாவின் உண்மை தன்மை. அவர்கள் அனைவரும் வியாபார நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகிறார்கள்  அவர்களுக்கு வியாபாரம் ஆகாத விசயங்களை பற்றி ஒரு துண்டு செய்தி கூட போடுவதில்லை என்ற கருத்து தான்.

படத்தில் பன்னாட்டு நிறுவங்கள் பற்றியும் அதன் முதலாளிகள் பற்றியும் குறிப்பாக அரசியல் பற்றியும் விஜய் பேசும் வசனங்களை பேசும் தைரியம் கண்டிப்பாக விஜயகாந்த் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது என்னுடைய எண்ணம். இவ்வளவு தைரியமாக பேசிய விஜய்க்கு ஒரு சபாஷ்.

என்ன தான் படம் முழுக்க பன்னாட்டு நிறுவங்களின் அக்கிரமங்கள் பற்றி பேசினாலும் இந்த படத்தின் தயாரிப்பாளரே ஒரு பன்னாட்டு நிறுவன அதிபர் தானே ஏன் நம் நாட்டு ஒரு சிறு தயாரிப்பாளரை வைத்து இந்த படத்தை எடுத்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. இருந்தாலும் இது பட விமர்சனம் என்பதால் இத்துடன் முடித்துகொள்கிறேன்.

கத்தி - விவசாயிகளுக்காக நவீன சினிமா சார்பில் ஒலித்த முதல் குரல்.....

 













ஞாயிறு, 12 அக்டோபர், 2014

ஜீவா


எனக்கு மனதை பாதித்த படங்கள் சில அதுல குறிப்பா சொல்லனும்ன்னா அங்காடி தெரு, சாட்டை இப்போ இந்த படம். 

அப்படி என்ன தாங்க இந்த படத்துல இருக்குன்னு கேக்குறீங்களா. காதல் - ஆமாங்க காதல் படம் தான், நட்பு - ஆமாங்க நண்பர்கள் பத்தின படம் தான், அப்பா செண்டிமெண்ட் - இருக்குங்க, அம்மா செண்டிமெண்ட் - இருக்குங்க, சகோதர பாசம் - இருக்குங்க, சமூக பார்வை - சாட்டைக்கு அடுத்து சாட்டையடியான படங்க, இசை - இமான் கலக்கிருக்காருங்க, காமெடி - ரொம்ப இல்லைனாலும் ரெட்டை அர்த்தங்கள் இல்லாம சிரிக்கிற மாதிரி இருக்குங்க, சண்டை - ஒரு ஆள் ஆயிரத்து ஐநூறு பெற அடிச்சு பறக்கவிடுற மாதிரி கேவலமான சண்டை மட்டுமில்ல வேற எந்த ஒரு அடி தடி சண்டையும் இல்லை, கவர்ச்சி - ஏய் யாரபார்த்து இந்த கேள்வி கேக்குற ஏதோ அந்த ஸ்ரீ வித்யா புள்ளை தான் கொஞ்சம் ஒழுங்கா நடிக்குது அது பொறுக்கலையா உனக்கு.

படம் ஆரம்பிக்கும்போது சின்ன பையனா வரும் ஜீவா கொஞ்ச நேரம் தான் வந்தாலும் நம்ம சின்ன வயசு ஞாபகத்தை கொஞ்சம் அப்படியே திரும்ப வர வச்சுட்டு போயிடுறான். அவன் ஒரு ஸ்போர்ட்ஸ் கடைல போய் பேட் விலை விசாரிச்சுட்டு பந்து வாங்கிட்டு வர்ற சீன பார்க்கும் போது நம்ம சின்ன வயசு பிளாஷ்பேக் நம்மள அறியாமலே மனதுக்குள்ள ஓடும். 

அடுத்து டீன்னேஜ் ஜீவா அவன் சின்ன வயசுல எந்த அளவுக்கு கிரிக்கெட்ட நேசிச்சானோ இப்பவும் அதே பிடிப்போட அவன் பள்ளிக்கு விளையாடுறான். எல்லா நடுத்தர மக்கள் வீடுகள் போலவே ஜீவாவோட அப்பாவும் கிரிக்கெட் ஒரு பணக்கார விளையாட்டு நமக்கு வேணாம்ன்னு முதல் முட்டுகட்டை போடுறாரு. அதுகூட உண்மை தான் கிரிக்கெட் விளையாடனும்ன்னா ஒரு நல்ல கோச்கிட்ட போய் கோச்சிங் சேரனும் அதுக்கு தேவையான அத்தனை விளையாட்டு மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் எல்லாம் வாங்கணும். சும்மாவா கிடைக்கும்.

இந்த சமையத்துல கதாநாயகி ஜெனிய சந்திக்கிறான் ஜீவா காதல் அப்பறம் வீட்டுக்கு தெரிஞ்சு மோதல். பள்ளிக்கூடம் படிக்கிற வயசுல என்ன காதன்னு அறிவுரை அதற்கப்பறம் ஒரு பிரிவு. காதலியின் பிரிவை தாங்க முடியாம இருக்க பையனுக்கு அவனுக்கு புடிச்ச கிரிக்கெட்ட மறுபடி கொடுக்கிறார் அப்பா. 

நண்பன் ரஞ்சித்த சந்திக்கிறான் ஆரம்பத்துல ரெண்டு பேருக்கும் ஒத்து வரலைனாலும் போக போக ரொம்ப நெருங்கிய நண்பர்கள் ஆகிடுறாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து சிறப்பா விளையாடறாங்க. இங்க தான் நம்ம சூரி படத்துல சீனியரா அறிமுகம் ஆகுறாரு படம் கலகலக்குது. மறுபடி ஒரு சின்ன காதல் முக்கோண காதல். அப்பறம் நட்புக்குள்ள அந்த காதல் காணமல் போகுது. 

இந்தியன் கிரிக்கெட் டீம்குள்ள நுளையுறதுக்கு முன்னாடி எத்தனை எத்தனை வெற்றிகள பெறனும் எவ்வளவு தடைகள் இருக்கும் இதெல்லாம் கோச் சொல்றாரு. எதிர்பார்த்தது போலவே நண்பர்கள் இருவரும் சிறப்பா ஆடி அடுத்தடுத்த போட்டிகளுக்கு தேர்வாகி கடைசில ரஞ்சிட்ரோபி வரைக்கும் வந்திடுறாங்க. இங்க தான் ஜாதி அரசியல் உள்ள நுழையுது. தமிழகத்துல இருந்து இந்திய அணிக்கு தேர்வாகுற எல்லா வீரர்கள்  மட்டுமில்லை தமிழக கிரிக்கெட் கமிட்டில வேலை செய்ற பியூன்ல இருந்து தலைவர் வரைக்கும் ஒரே ஜாதிய சேர்ந்தவங்க தான். இருந்தாலும் எப்படியாவது நமக்கு கிடைச்ச வாய்ப்ப பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேரனும்ன்னு நம்ம்பிகையோட நண்பர்கள் இருவரும் ரஞ்சிட்ரோபி களத்துக்கு வராங்க. முதல் வருஷம் ஒரு மேட்ச் கூட வாய்ப்பே கிடைக்காம தண்ணி பாட்டில தூக்கி கொண்டு போய் குடுத்தே முடிஞ்சுருது. அடுத்த வருஷம் பேருக்கு ரெண்டு மேட்ச் ஆட விட்டு உக்கார வச்சிராங்க. மூணாவது வருஷம் இவங்களுக்கு ஆவரேஜ் பத்தலன்னு சொல்லி இவங்கள  ரஞ்சிட்ரோபி டீம்லையே எடுக்காம வெளியேத்துறாங்க. இது எல்லாமே அப்பட்டமான ஜாதி அரசியல்ன்னு புரிஞ்சுகிட்ட நண்பர்கள் தங்களுக்கு ஞாயம் கேட்டு போறாங்க. எல்லாமே ரூல்ஸ் படி தான் நடக்குது உங்களுக்கு ஆவரேஜ் இல்லைன்னு சொல்லி கழுத்தை புடிச்சு வெளிய தள்ளிடுராணுக. விளையாண்டு தோத்தாலும் பரவாயில்லை வாய்ப்பே கிடைக்காம தோத்து போறோமேன்னு ஜீவா சொல்லும் வசனம் பல ஜீவாக்களின் வாழ்க்கைக்கும் பொருந்தும்.

இந்த நண்பர்கள் மட்டுமில்லை இதே போல எவ்வளவோ நண்பர்கள் இவர்கள் ஜாதி வெறிக்கு பலியாகி அவர்கள் கனவு வாழ்க்கை எல்லாத்தையும் இழந்து ஒரு நடைபிணமா ஏதோ ஒரு வாழ்க்கைய வாழ்ந்துகிட்டு இருப்பாங்க. சிலர் பிணமாவே ஆகிடுவாங்க. அப்படி ரஞ்சித்தும் பிணமா ஆகிடுறான். ஜீவா நடைபிணமா ஆகிடுறான்.  

இடைல ஜீவா தன்னோட பழைய காதல்யும் மறுபடி உயிர் பெற வக்கிறான். முன்ன இருந்த அதே தடை தான் இப்பவும் இருக்கு அவனுக்கு வேலையில்லை பொண்ணோட அப்பா நான் வேலை வாங்கி தரேன்னு சொல்றாரு. தன்னால கிரிக்கெட்ட விட்டு வெளிய வராம தவிக்கிறான் ஜீவா.

படத்தை ரொம்ப சோகமா முடிக்க கூடாதுன்னோ என்னவோ இயக்குனர் ஜீவாக்கு சிபிஎல்ல (ஐபிஎல்ல உல்ட்டா பண்ணிருக்காரு) ஜீவாக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சு அது மூலமா ஜெயக்கிற மாதிரி முடிச்சிருக்காரு. அப்படி ஜீவா வெற்றி பெற்று சிபிஎல் மைதானத்துல இறங்குரபோ கூட நம் கண்களில் கண்ணீர் தான் வரும் இந்த கேடுகெட்டவர்களை நினைத்து.

என்னை பொருத்தவரைக்கும் இப்படி பல ஜீவாக்கள் தங்கள் காதல் நட்பு கனவு வாழ்க்கை எல்லாத்தயும் தொலைச்சுட்டு ஒரு நடைபிணமாக தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்போ கிரிக்கெட்ட எடுத்து பார்தீங்கன்ன கூட தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு ஐபில் மேட்சுல கூட இந்த மாதிரி ஜீவக்களுக்கு இடம் கிடைக்காமல் முட்டுக்கட்டை போட்டு இவர்கள் இருப்பதையே வெளி உலகுக்கு தெரியாமல் செய்துவிடுவார்கள் இந்த ஜாதி சாணக்கியர்கள்.

இந்த படம் கிரிக்கெட் பற்றியதால் கிரிக்கெட்டில் மட்டும் இப்படி நடக்கிறது என்று இல்லை. எல்லா விளையாட்டிலும் இப்படி பல ஜீவாக்கள் புறக்கணிக்க பட்டுகொண்டு தான் இருக்கிறார்கள்.

படம் விமர்சனம் என்று ஆரமித்து ஏதேதோ சொல்ல ஆரமித்துவிட்டேன். படத்தின் தாக்கம். கண்டிப்பாக சமூக அக்கறையுள்ளவர்கள் பார்க்கவேண்டிய படம்.

ஜீவா - இனி ஒரு விதி செய்வோம்... இப்படி பல ஜீவாக்கள் தங்கள் வாழ்க்கையை தொலைக்காமல் தடுப்போம்....

இப்படி ஒரு படத்தை தந்த இயக்குனர் சுசீந்திரனுக்கு நன்றிகள். 




செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

மழை கவிதை

காலை பொழுதின் இதமான காற்று..
பனிக்கட்டியை உரசிக்கொண்டு என் போர்வைக்குள் புகுந்தது..
விடிந்ததை உணர்ந்து...
போர்வையை விளக்கி ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தேன்...

ஆரவாரமே இல்லாமல் அழகான மழை...

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

இந்திய தேசிய கோடியை ஏற்றும் முறை மற்றும் அதற்க்கு கொடுக்க பட வேண்டிய மரியாதைகள்


தேசிய  கொடி  செவ்வக வடிவில், நீள  அகலம் 3:2 எனும் விகிதத்தில், மேலே காவி வண்ணம் நடுவே வெண்மை நிறம் கீழே பச்சை வெண்மையின் நடுவில் நீல நிறத்தில் 24 ஆரங்கள் கொண்ட அசோக சக்கரம் இருக்க வேண்டும்.

தேசிய  கொடி  கம்பளி, கதர் மற்றும் பட்டு துணிகளால் நெய்யப்பட்டதாக இருக்கவேண்டும்

கொடியின் அளவு(milli metre): 6300-4200, 3600-2400, 2700-1800, 1350-900, 900-600, 450-300, 225-150, 150-100

தனியார் நிறுவனங்கள், தனிமனிதர்கள் பயன்படுத்த தடை இல்லை. அதற்குரிய மரியாதை கொடுப்பதே அவசியம்.

பொது இடத்தில தேசிய  கொடியை அவமதித்தல், கிழித்தல், எரித்தல், போன்றவை தண்டனைக்குரியவை.

எந்த பொருளையும் மூடிவைக்க தேசிய  கொடியை அலங்கார பொருளாய்  பயன் படுத்த கூடாது.

தேசிய  கொடியை சட்டையாகவோ, கைகுட்டையாகவோ பயன்படுத்துதல் கூடாது.

சூரிய உதயத்துக்கு பிறகு தான்  கொடி  ஏற்ற பட வேண்டும், அதேபோல் மறைவதற்கு முன்பே இறக்கிவிட வேண்டும்.

அரசு விருந்தினராக வெளிநாட்டு தலைவர்கள் பயணிக்கும் கார்களில் வலது புறம் நம் தேசிய கொடியும் இடது புறம் அந்நாட்டு தேசிய கொடியும் இடம் பெற  வேண்டும் .

பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் நம் தேசிய  கொடி  முதலாவதாக ஏற்றப்பட்டு இறுதியாக இறக்க படவேண்டும். பிற நாட்டு கொடிகள் அந்நாட்டு ஆங்கில பெயரின் அகர வரசையில் ஏற்றபடவும் இறக்கபடவும் வேண்டும்.

பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரின் மறைவின் போது  நாடெங்கிலும், சபாநாயகர் ,சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகியோர் இறந்தால் தில்லி மற்றும் அவர் சார்ந்த மாநிலத்திலும், முதல்வர்கள், மாநில அமைச்சர்கள் மறைந்தால் அந்தந்த  மாநிலத்திலும்  தேசிய  கொடி  அரை கம்பத்தில் பறக்க விடப்படும்.

அரைக்கம்பத்தில் உள்ள தேசிய  கொடியை இறக்கும்போதுமுழு கம்பத்திலும் ஏற்றிய பிறகே இறக்க வேண்டும் .


சனி, 2 ஆகஸ்ட், 2014

ஜிகர்தண்டா



ஜிகர்தண்டா - பார்த்தேன் பெயரிலேயே தெரிந்திருக்கும் இது மதுரை பற்றிய படம் என்று.... மதுரை என்றால் கண்டிப்பாக ரவுடி கதை தான் என்பதும் அனைவரும் எளிதாக யுகிக்க கூடியதே... இந்த சினிமா படம் எடுக்குறவங்களுக்கு என்னை மாதிரி நல்லவிங்க எல்லாம் மதுரைல கண்ணுக்கு தெரியமாட்டோம் போல.... ;)

சரி படத்துக்கு வருவோம் படத்தில் ஹீரோ சித்தார்த்தை விட வில்லனாக வரும் பாபி அதிக காட்சிகளில் வருகிறார்.... வருவது மட்டுமல்ல நடிப்பிலும் பொளந்துகட்டி இருக்கிறார்... பொதுவா ரவுடின்னா வெட்டு குத்து கொலை எல்லாம் இருக்கும் இந்த படத்துலயும் இருக்கு அதே நேரத்துல ஒரு ரவுடி சினிமால நடிச்சா எப்படி இருக்கும் அப்படின்ற மாதிரி கதைய நகத்திட்டு போயிருக்காரு இயக்குனர்...

கதாநாயகன் சித்தார்த் படம் முழுவதும் ஒரு அப்பாவியாவும் படம் முடியும் போது அடப்பாவியாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்... கதாநாயகி ஒரு நாலஞ்சு காட்சில தான் வருதுன்றது படம் பாக்க போறவங்களுக்கு ஒரு நல்ல செய்தி... அவ்வளவா ஜொலிக்கல... மேக்கப் ரொம்ப கம்மி... மதுரை பொண்ணுக அதிகமா மேக்கப் போடமாட்டாங்கன்னு சொல்லிருக்கார் போல இயக்குனர்... பெரிய திருப்புமுனை ஏற்படுத்துற கதாபாத்திரம் இல்லைனாலும் குடுத்த வேலைய சிறப்பா செய்திருக்காங்க கதாநாயகி....

அப்பறம் படத்தில் கதாநாயகன் சித்தார்த்தின் நண்பனாக வரும் கருணாகரன் எல்லாபடத்துலையும் போல நண்பன் கூட இருந்து சந்தோஷம் துக்கம் அடி மிதி எல்லாம் வாங்கி இருக்காரு... அவரின் பாணியில் அப்பவி முகத்தை வைத்துகொண்டு காமெடியையும் சிறப்பாக செய்திருக்கிறார்...

இந்த படத்துல உண்மையான ஹீரோன்னா அது வில்லனா வரும் பாபி சிம்ஹா தான்... மனுஷன் ரவுடி தனத்துள மட்டும் இல்லை காமெடிலையும் கலக்கி இருக்காரு... இவர் மட்டுமில்ல இவர் கூட கூட்டாளிகாக வரும் மற்ற ரவுடிகளும் நல்லாவே நடிச்சிருக்காங்க....

முதல் பாதி முடிவுல ஒரு பயங்கர திருபத்த கொடுத்து இளைவேளை விட்டு திரும்பவரைல அடுத்த பாதில என்ன நடக்கும்ன்னு யுகிக்கிறது கொஞ்சம் கஷ்ட்டம் தான்... இது மட்டுமில்ல பல கட்சிகள் அப்படி தான்... நம்மளால அவ்வளவு எளிதா அடுத்து நடப்பதை யுகிக்க முடியாது... இரண்டாம் பாதில பின் பாதி கொஞ்சம் மெதுவா போன மாதிரி இருந்த்தது அதை மட்டும் தான் குறை சொல்ல முடியும்... மற்ற படி இயக்குனர் திரைகதையை  மிக அருமையாக நகர்த்தி சென்றிருக்கிறார்....

இசை பத்தி சொல்லனும்ன்னா படத்துல இரண்டு பாட்டுகள் மட்டும் தான் முழுசா வருது அதுல ஒன்னு பரவாயில்லை அந்த குத்து பாட்ட கேக்க ரொம்ப சிறப்பா இல்லைனாலும் பார்த்து ரசிக்கலாம்... ஒரு வித்தியாசமான இடத்துல வச்சு எடுத்திருப்பாங்க... மற்ற எல்லாம் சின்ன சின்ன பாடல்களா தான் வருது... பின்னணி டமால் டுமால்ன்னு போட்டு மண்டைய உடைக்காமா பழைய கவ் பாய் பாணில இருக்கு... நல்ல பின்னணி இசை....

 பீட்சா இயக்குனர்ன்னு ரொம்ப எதிர் பார்த்து போகமா இருந்தீங்கன்னா இதுவும் ஒரு நல்ல படம்... அதே போல ரொம்ப லாஜிக் பாக்காதீங்க... அப்பறம் அவன் ஏன் இப்படி பண்ணுனான் இவன் ஏன் அப்படி பண்ணலைன்னு கேட்டுகிட்டே இருப்பீங்க...

பீட்சாவை நல்ல கார சாரமாக தந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டாவில் சுகரை அளவாகவே போட்டிருக்கிறார்...  மொத்தத்தில் ஜிகர்தண்டா திகட்டவில்லை....

-ஜெயா

செவ்வாய், 1 ஜூலை, 2014

சினிமா - வடகறி


வடகறி - என்னடா இது இப்படி ஒரு பேரு வச்சிருக்காங்க ஒருவேளை சாப்பாட்ட பத்தின படமோன்னு நினைச்சு பார்த்தா. படத்தோட ஆரம்பத்திலையே அதற்கான காரணத்தை நம்ம ஆர்ஜெ பாலாஜி சொல்லிறாரு. அதாவதுங்க இந்த படத்துல  வளவளா கொலகோலா கடாமுடா காமெடிகள் நம்ம ஆர்ஜெ பாலாஜி பண்ணிருக்காரு அவரு பேரு தான் வடகறி அதான் படத்தோட பேரும். இது என்ன லாஜிக்ன்னு கேட்காதீங்க படத்துல நிறைய இடத்துல இந்த கேள்விய கேட்க வேண்டி வரும்...இது தான் இப்போ வர படம் எதுலையுமே இருக்குறது இல்லையே அதனால அதை பத்தி நாம ரொம்ப யோசிக்க வேண்டாம்...

இப்போ படத்துக்கு வருவோம் இது ஒரு காமெடி உடன் கூடிய திரில்லர் படம்ன்னு சொல்லலாம் கடைசி வரை யார்ரா வில்லன்னு நம்மள யோசிக்க வச்சிருக்காங்க. படத்துல சமீபத்துல நம் மனதை பதைபதைக்க வைத்த மருந்து பொருட்கள் கலப்படம் மற்றும் காலாவதியான மருந்து பொருட்களை போலியாக லேபில்களை மாற்றி விற்று மக்களை ஏமாற்றினார்கள் என்று ஒரு செய்தி படித்திருப்போம். அதை மையப்படுத்தி எடுத்திருக்கிறார்கள்.

இந்த படத்தோட கதாநாயகன் ஜெய் ஒரு அப்பாவி நடுத்தர வர்க்க இளைஞன் மெடிக்கல் ரெப்பாக வருகிறார். அவரின் முகம் இயல்பாகவே ரொம்ப அப்பாவித்தனமாக இருப்பாதால் அதற்கென மெனக்கெட்டு நடிக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. அப்படியே பொருந்தி இருந்தார் இவரின் நண்பர் தான் பாலாஜி இவர் பொண்ணு உசார் பண்றதுக்காக நண்பனுக்கு ஒரு கொரியா போன வாங்கி கொடுக்கிறார் இந்த டுப்ளிகேட் மொபைல்லால பலர் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார் ஜெய். அந்த சமயத்துல அவருக்கு ஒரு ஐபோன் அதிர்ஷ்ட்டவசமாவோ இல்லை விதிவசமாவோ கிடைக்குது. அதனால அவர் பல இன்னல்கள் துன்பங்கள் பிரச்சனைகள் எல்லாம் சந்திக்கிறார் அதிலிருந்து தப்பிக்கிறார் அதான் மீதி கதை.

படத்தோட எந்த இடத்திலுமே சுவாரசியமோ காமெடியோ குறையல. கதாநாயகி சுருதி ஹீரோ என்ன பிரச்சனைல இருக்கான்னே தெரிஞ்சிக்காம எப்பவும் போல என்ன நீ லவ் பண்ணறியா இல்லையாடான்னு கேட்டுகிட்டு இருக்குற அதே கதாபாத்திரத்துல தான் நடிச்சிருக்காங்க.

வில்லன்கள பத்தி சொல்லனும்னா எவன் தான் உண்மையான வில்லன்னு கண்டுபுடிக்கிறது கொஞ்சம் சிரமம் தான். ஒரு குரூப் சந்தர்ப்பவசத்தால வில்லன் ஆனவங்க இவன்க்ய கொஞ்சம் நல்ல வில்லனுக . இன்னொருத்தன் கொஞ்சம் மோசமான வில்லன் அவன தேடி தான் நம்ம கதாநாயகன் ஓடிகிட்டே இருப்பாரு.  கடைசில கண்டுபுடிக்கிறப்போ அட ச்சீ இவன் தானா அவன்னு நாம நினைப்போம்.

பாடல்கள் ஒரு ரெண்டு பாட்டு நல்லா இருந்த மாதிரி இருந்தது ஒன்னு அவரு காதல சொல்ல பின்னாடியே போறப்போ வரும்... இன்னுன்னு ஐபோன் குள்ள இருந்து ஜெய் பாடுவாரு இது குழந்தைகள கவரும்னு நினைக்கிறேன் ஆனா அது சோக பாட்டு... அப்பறம் ஒரு பாட்டு வில்லன் மேல பயங்கர கோவத்துல அவன் மருந்து குடோன் எல்லாம் காலி பண்றப்போ வருது ஆனா அது அந்த அளவுக்கு உணர்ச்சிபூர்வமா எல்லாம் இல்லை.

காமெடி பத்தி சொல்லனும்ன்னா நம்ம ஆர்ஜெ பாலாஜி சும்மா பேசிகிட்டு இருந்தாலே மூணு நாளைக்கு உக்காந்து கேட்கலாம் அவளோ காமெடியா பேசுவாரு இந்த படத்துல காமெடி வேற பண்ணிருக்காரு கேட்கவா வேணும் செம. அவர் இல்லாம ஒரு கொரியா மொபைல்லும் காமெடி பண்ணிருக்கு. படத்துல காமெடி தான் ஹைலைட்.

மொத்ததுல வடகறி ஜாலியா போய் ஹோட்டல்ல ஜாலியா ஒரு வடகறி சாப்பிட்டு வந்த அனுபவம்....


- ஜெயா

சினிமா - முண்டாசுபட்டி


முண்டாசுபட்டி - போஸ்டர்லாம் பாத்துட்டு எதோ சுப்பராமணியபுரம் மாதிரி படம் போல.... சும்மா மதுரை மதுரைன்னு சொல்லிக்கிட்டு ஒரு பத்து பேர சதக் சத்க்ன்னு போட்டு தள்ளுவாங்கன்னு நினச்சேன்... ஆனா அப்படி எதுவும் இல்லை... சரி வேற என்ன தான் வித்தயாசம்ன்னு பாத்தா படத்துல எப்பவும் போல காதல் தான். என்ன அந்த காதல கொஞ்சம் கலகலப்பா பண்ணிருக்காங்க....

படத்தோட ஆரம்பத்துல முண்டாசுபட்டில மக்கள் எல்லாம் கொத்து கொத்தா ஒரு கொடிய நோய் வந்து செத்து போறாங்க... அப்போ அந்த மக்கள் எல்லாம் ஊர் எல்லைல இருக்க முனீஸ்வரன் கிட்ட கடவுளே எங்கள காப்பாத்துன்னு ஓடுறாங்க இந்த சமயம் ஒரு பெரிய கொள்ளைக்கார கும்பல் அந்த முனீஸ்வரனவே கடத்திட்டு போக வராங்க. கதறி அழுகுற மக்களை மிரட்டிட்டு சாமி சிலைய எடுக்க போகும் போது வானத்துல இருந்து பாய்ந்து வந்த ஒரு விண்கல் அந்த கொள்ளைகூட்டத்து தலைவன் மண்டைய பொளக்குது அவன் மர்கயா ஆனத பார்த்த மத்த கொள்ளைகாரங்க எல்லாம் தலை தெறிக்க ஓடிப்போயடுறானுக. ஊர் மக்கள் எல்லாம் வானத்துல இருந்து கல் வந்த்ததால வானமுனின்னு பேர் வச்சு கும்பிட ஆரமிச்சிறாங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்ட ஒரு வெள்ளைகார டாக்டரு அந்த கல்லை ஆராய்ச்சி பன்ன அங்க வர்றாரு வரவரு தன் கைல இருந்த கேமராவ வச்சு கல்ல படம் பிடிக்க போறத பார்த்த மக்கள் எல்லாம் இவன் இதுக்கு முன்னாடி போட்டோ எடுத்த எல்லாருமே நோய் வந்து செத்து போய்டாங்க அதனால போட்டோ எடுத்தா நாமும் செத்து போயடுவோம்ன்னு நினைச்சு அவன அடிச்சு துரத்துறாங்க. ஓடி போன வெள்ளைக்காரன் கல்லுல இருந்து கொஞ்சம் உதிரிகளையும் பொருக்கி எடுத்துட்டு பார்த்தா அதுல விலை மதிக்க முடியாத பல கனிமங்கள் இருக்கு. இந்த வெள்ளைக்காரன் மத்த வெள்ளைகாரங்க மாதிரி வில்லத்தனமா யோசிக்காம பாவம் அந்த மக்கள் பொழச்சு போகட்டும்ன்னு யாருக்கும் சொல்லாம விட்டுறான். இது எல்லாம் இந்த படம் ஆரமிக்கிறதுக்கு முன்னாடியே சொல்லிடறாங்க. அதாவது இந்த ஊர் மக்களுக்கு கேமரன்னா பயம். அப்பறம் வானமுனி தான் எல்லாம் வானமுனி வந்த அப்பறம் தான் ஊர் செழித்ததுன்னு ஒரு நம்பிக்கை. இந்தியாவுக்கு சுகந்திரம் கிடைச்சதே வானமுனினால தான்னு இவங்க நினச்சுகிட்டு இருக்காங்கன்ன பாத்துகோங்களே.

இப்போ படம் ஒரு 80கள்ள நடந்த கதைமாதிரி ஆரமிக்குது ஹாலிவுட் ஸ்டுடியோ இது தான் நம்ம கதாநாயகன் விஸ்னுவோட ஸ்டுடியோ அவருக்கு ஒரு அசிடேன்ட். ரெண்டுபேரும் படத்துல அவங்க வேலைய ரொம்ப சரியா செய்திருக்காங்க காமெடி சூப்பரு. இவங்க ஒரு பொண்ணுங்க பள்ளிகூடத்துக்கு போட்டோ எடுக்க போறாங்க அந்த தான் கதாநாயகி நந்திதாவ பாக்குறாங்க நாயகன் காதல்ல விழுகுறாரு. அப்பறம் திரும்ப பள்ளிக்குடத்துக்கு பார்க்க வரப்போ தான் தெரிஞ்ச்சது நந்திதாவுக்கு கல்யாண ஏற்பாடு நடக்குது அதனால இனி பள்ளிகூடத்துக்கு வரமாட்டான்னு. இதை கேள்விப்பட்டு மனம் ஒடிஞ்சு போய் உக்காராரு ஹீரோ. அந்த சமயம் ஒரு பொணத்த போட்டோ எடுக்க முண்டாசு பட்டில இருந்து ஒருத்தார் வாராரு. நான் ஒரு பெரிய கேமராமேன் என்ன போய் ஒரு பொணத்த போட்டோ எடுக்க கூப்பிடுரயான்னு கூப்பாடு போடுற ஹீரோ பணத்த பாத்தவுடனே அடங்கிடுறாரு. அப்பறம் வந்தவர் கூட கிளம்பி முண்டாசுபட்டிக்கு போறாரு அங்க போய் பார்த்தா நம்ம கதாநாயகி இழுத்துகிட்டு கிடக்குற அவங்க அபுச்சி (தாத்தா) வாய்ல பால் ஊத்திகிட்டு இருக்கு. ஏன்யா சாகவே இல்லையையே அப்பறம் ஏன்யா இப்படி சொன்னீங்கன்னு கேட்க இல்லை நீங்க வரதுக்குள்ள முடிச்சுரும்ன்னு நினைச்சோம் கொஞ்சம் இருந்து செத்த உடனே படம் புடிச்சுருங்கன்னு சொல்லறாங்க  ஊர்காரங்க. அப்போ உயிரோடவே எடுத்துருவோம்ன்னு சொல்லறாரு விஸ்ணு. உயிரோட இருக்கவங்கள படம் புடிச்சா சீக்கு வந்து செத்து போயிருவாங்க நீ இருந்து செத்த அப்பறம் எடுத்துகொடுத்துட்டு போன்னு சொல்றாங்க ஊர்காரங்க. சரி கதாநாயகி இருக்க ஊர்ல இருக்க இவருக்கு கசக்குமா என்ன. இது தான் சாக்கு இருந்து எப்படியாவது கரெக்ட் பண்ணிரலாம்ன்னு அங்கேயே இருக்காரு விஸ்ணு.

அப்போ ஒரு நல்ல சந்தர்பத்துல தன்னோட காதல கதாநாயகிட்ட சொல்லிடறாரு விஸ்ணு. அந்த சமயம் ஊர் மக்கள் எதிர்பார்த்தது போல அபுச்சி மண்டைய போடறாரு. அப்பறம் கதாநாயகன் போட்டவும் எடுக்குறாரு. இவரு போட்டோ எடுக்கைல கூட ஊர் மக்கள் யாரும் பக்கத்துல வர்ரதுயில்ல கேமரான்னா அவளோ பயம். இதுல ஒரு பொண்டாட்டி புருசனையும் புருஷன் பொண்டாட்டியயும் போட்டோ எடுக்க சொல்லி விஷ்ணுவுக்கு பணம் கொடுப்பது மாஸ்டர் மர்டர் பிளான்.

எடுத்த போட்டவ கழுவி நல்லா பிரேம் போட்டு கொண்டுபோய் கொடுத்து பொண்ணு கேட்கலாம்ன்னு ப்ளான் பண்ணி எடுத்துட்டு வந்த நெகடிவா பாத்தா அபுச்சி மூஞ்சி செதஞ்சு போய் இருக்கு. சரி பொணத்த தோண்டி எடுத்து போட்டோ புடிச்சுராலாம்ன்னு போய் பார்த்தா அதையும் எரிச்சுடுறாங்க. அந்த சமயத்துல தான் வரார் முனீஸ் கான் இவரு ஒரு பெரிய ஹீரோ ஆகனும்ன்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காரு இவரு மூஞ்சி அப்படியே அபுச்சி மூஞ்சி மாதிரி இருந்ததால அவர்கிட்ட உனக்கு நடிக்க சான்ஸ் வாங்கி தரேன்னு பொய்ய சொல்லி பொணம் வேஷம் போட்டு படம் எடுத்துட்டு முண்டாசுபட்டிக்கு போய் கொடுக்குறாங்க. அப்போ அங்க வராரு நம்ம முனிஸ் கான் ஐயோ சித்தப்பா சொல்லாம கொல்லாம இப்படி போய்ட்டியேன்னு கதறி போட்டோவ கட்டிபுடிச்சி அழுகுறாரு அந்தபக்கம் உக்காந்து சாப்ப்டுகிட்டு இருக்க நம்ம விஸ்ணுவயும் அவரு பிரண்டையும் பாக்குறாரு மறுபடி அந்த அப்புச்சி போட்டோவ பாக்குறாரு அட பாவிகளா என்னையவே ஏமாத்தி புட்டீங்களான்னு ஊரே சேர்ந்து விரட்டி புடிக்கிறாங்க. அந்த ஊர் பழக்கம் என்னன்னா யார் தப்பு பண்ணினாலும் அந்த ஊர் சாமியார் ஒருத்தர கூப்பிட்டு குறி கேட்டு ஒரு மணிய தொங்க விடுவாங்க அந்த மணியடிச்சா தான் வானமுனி ஏத்துகிட்டாருன்னு சொல்லி கைய முறிச்சுடுவாங்க. எப்பவுமே வானமுனி அனுமதி கிடைச்சுரும் ஆனா இந்த முறை மணி அடிக்கல சரி கடவுளே தண்டிக்க வேண்டாம்ன்னு சொல்றாரு மன்னிச்சுராலாம்ன்னா இவங்க ஒன்னும் அவளோ சாதாரண தப்பு பண்ணல பாவம் நம்ம முனிஸ் கான் அவரால இதை தாங்கிக்கவே முடியல. அதனால ஊர்காரங்க இவங்க ரெண்டு பேருக்கும் ஊர்ல தண்ணி வர்ற வரைக்கும் கிணறு வெட்டனும்னு ஒரு தண்டனை கொடுத்தாங்க. அதுக்கு மேற்பார்வையாளரா நம்ம முனிஸ் கான போட்டாங்க.

இது ஒரு பக்கம் நடந்துகிட்டு இருக்கைலயே இன்னொரு பக்கம் வானமுனியோட ரகசியம் தெரிஞ்ச ஒரு வெள்ளைக்காரன் ஜெமின் ஆனந்தராஜ் கிட்ட அந்த கட்ட கடத்திட்டு வரசொல்லி டீல் பேசுறான். கல்லு எனக்கு பாரின் சரக்கு உனக்கு இது தான் அங்க டீலிங். ஜமீனும் தன்னோட ஆள அனுப்பி திருடிட்டு வர சொல்லறார் ஆனா போனவனோட கைய ஊர்காரங்க முறிச்சு அனுப்பிறாங்க.

இப்போ கிணறு வெட்டுற சாக்குல அந்த ஊர்ல இருக்க நம்ம கதாநாயகன் எப்படி கதாநாயகிய கரெக்ட் பண்ணுறாரு. அது வேற ஏற்க்கனவே  நிச்சயம் ஆன பொண்ணு வேற அதனால அந்த பொண்ண கல்யாணம் பண்றதுக்கு என்னென்ன திருட்டு வேலை பாக்குறாங்க. உடைக்கவே முடியாத அந்த பூட்ட உடைச்சு வானமுனிய அந்த ஜமீன் கடத்துரானா. என்பது மீதிகதை. இது எல்லாமே ரொம்ப கமேடியாவே நகர்கிறது. பெருசா செண்டிமென்ட்டோ கருத்து சொல்லி ஊர திருத்துறதோ எங்கையுமே இல்லை...

நான் ரொம்ப ரசிச்சு ஒரு நாவல் படித்தது போல் பார்த்தேன். கண்டிப்பா நீங்களும் நம்பி பார்க்கலாம்.

முண்டாசுபட்டி முண்டாசு கட்டிய மூட நம்பிக்கைகளின் பட்டி...
அங்க இருக்கு ஒரு அழகான குட்டி...
அவள காதலிக்கிறான் நம்ம  சிங்க குட்டி....
இவளோ நேரம் உங்களுக்காக இதை எழுதுனது ஒரு தங்க கட்டி....


-ஜெயா

கவிதை - மறந்தேன்

மறந்து விட நினைத்தேன்!
               மறந்து விட்டேன்!
உன்னை பற்றிய நினைவுகளை அல்ல!
உன்னை பற்றிய கனவுகளை....!


-ஜெயா

கவிதை - ரோஜா முள்

ரோஜாவை ரசித்தேன்!
அதில் முள் இருப்பதையே மறந்தேன்!
குத்திவிட்டாயடி....
என் இதயத்தில்!


-ஜெயா

கவிதை - குழந்தையானேன்

குழந்தைகளுடன் விளையாடும் நேரத்தில்....
நாமும் குழந்தையாகிறோம்!
முட்டி வலி வரும் வரையில்.

-ஜெயா

கவிதை - கவிஞன்

அவளை கண்ட அந்த நொடியில்...
தான் கண்டு கொண்டேன்!

எனக்குள் இத்தனை நாள் ஒளிந்திருந்த...
அந்த கவிஞனை!


-ஜெயா

திங்கள், 30 ஜூன், 2014

தெரிந்துகொள்வோம் - டாலரும் ரூபாயும்


ருபாய் மதிப்பு குறையுது குறையுதுன்னு சொல்றாங்களே... அது ஏன் குறையுது? எப்படி குறையுது? அதனால ஏன் விலை உயருது?


பலங்காலங்கள்ள ஒரு நாட்டல இருந்து இன்னொரு நாடு ஏதாவது பொருள வாங்கனும்ன்னா அவங்ககிட்ட இருக்க அதுக்கு சமமான பொருள கொடுத்து தான் வாங்குவாங்க இதுக்கு தான் பண்டம்மாற்று முறைன்னு பேரு....


காலப்போக்குல பணம்ன்னு ஒன்ன அறிமுக படுத்தினாணுக... அதை ஒவ்வொரு நாட்டுகாரனும் அவனுக்கு தகுந்த மாதிரி அடிசுகிட்டான்... அதனால ஒரு நாட்டு பணம் மற்ற நாட்டுல வெறும் பேப்பர் தான்... இப்போ வேற ஒரு நாட்டல இருந்து ஏதாவது பொருள் வாங்கனும்ன்னா அதுக்கு நம்ம நாட்டு கரன்சிய கொடுத்தா அதுல அவனுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை ஏன்னா நம்ம கரன்சி அவன் ஊர்ல செல்லாது.. சரி அவன் கரன்சிய கொடுபோம்ன்னா அதுவும் நம்மகிட்ட இருக்காது... இப்போ எப்படி தான் இந்த பிரச்சனைய சமாளிக்கிறது எப்படி மற்ற நாடுகள் கிட்ட இருந்து நம்ம பொருட்கள இருக்குமதி செய்றது?


இதுக்கு ஒரே வழி உலகத்துல உள்ள அத்தனை நாட்டுக்கும் ஒரே கரன்சி வைக்கிறதுதான். இது நடமுறைல சாத்தியமே இல்லாத ஒன்னு. அதனால ஏதாவது ஒரு நாட்டு கரன்சிய போது கரன்சியா பயன்படுத்தலாம்ன்னு ஒரு தீர்வு இருந்துச்சு. ஆனா எந்த  நாட்டு கரன்சிய பயன்படுத்துறது?


இந்த சமயத்துல தான் ஆதிக்க சக்தியா இருந்த அமெரிக்காகாரன் அவன்கிட்ட வாணிபம் பன்னிகிட்டு இருந்த நாடுகள்கிட்ட எல்லாம் உன்கிட்ட நான் இருக்குமதி பன்ற பொருளுக்கு அமெரிக்க டாலர் தான் தருவேன் நீங்களும் எங்ககிட்ட வாங்குற பொருள்களுக்கு டாலர் தான் தரனும்ன்னு ஒரு கண்டிசன் போட்டுகிட்டான். இப்போ என்ன ஆச்சுன்னா எந்தெந்த நாடெல்லாம் அமெரிகாகிட்ட இருந்து பொருள் இறக்குமதி செய்யணுமோ அவங்க எல்லாத்துக்கும் அமெரிக்க டாலர் தேவை பட்டுச்சு. உலகத்துலயே ஒன்னா நம்பர் ஆயுத வியாபாரியான அமெரிக்கன்ட்ட இருந்து எல்லாருக்கும் நிறைய இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது. இந்த சூல்நிலைல அமெரிக்கா அல்லாத மற்ற நாடுகள் அவர்களுக்குள் வியாபாரம் செய்யும் போதும் அமெரிக்க டாலர்லேயே   செய்ய ஆரமிச்சாங்க ஏன்னா எல்லா நாட்டுக்குமே அமெரிக்கா கிட்ட இருந்து ஆயுதம் போன்றவைகள் வாங்க அவர்களுக்கு டாலர் தேவை பட்டது. அமெரிக்கனும் இந்த சூழ்நிலைய தனக்கு சாதகமா பயன்படுத்திகிட்டு பிரச்சனையே இல்லாத நாடுகள்ல பிரச்சனைய உண்டு பண்ணிவிட்டாணுக. அதே மாதிரி பக்கத்து பக்கத்துக்கு நாடுகளுக்கு இடையிலும் பிரச்சனைய உண்டு பண்ணிவிட்டாணுக. இப்படியே காலபோக்குல இவன் கரன்சிய உலகத்தின் போது கரன்சி மாதிரி ஆக்கிட்டான். இப்படி சிக்கிய நாடுகள்ள ஒன்னு தான் நம்ம இந்தியாவும்.

இப்போ நம்ம நாடு நிறைய பொருட்களையோ இல்லை வேற சரிவீஸ்ன்னு சொல்லுற சேவையையோ அதிகமா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்ன்னு வச்சுகோங்க அதனால என்ன ஆகும்ன்னா நம்ம கிட்ட இருந்து பொருட்கள வாங்குறவன் அமெரிக்க டாலரா கொடுப்பான். அப்போ நம்மகிட்ட அதிகமா அமெரிக்க டாலர் இருக்கும். இந்த டாலர்கள வச்சு எந்த நாட்டுகிட்ட இருந்தும் நமக்கு தேவையான பொருட்கள வாங்கிக்கலாம். அதே நேரத்துல நம்மகிட்டயே தேவையான அமெரிக்க டாலர் இருக்கைல நம்ம நேரடியா நம்ம ரூபாய கொடுத்து டாலர் வங்குற வாய்ப்பு குறைவு. அதனால சந்தைல அமெரிக்க டாலர் விக்குறவன் வாங்க ஆள் இல்லைன்னு தெரிஞ்சவுடன் அதோட விலைய படிப்படியா குறைப்பான். அப்போ ரூபாயோட மதிப்பு கூடும்...

அதே நேரத்துல ஏற்றுமதி ரொம்ப கம்மியா பன்னிட்டு அதிகமா இறக்குமதி பண்ணினோம்னா நாம இறக்குமதி பண்ணின நாடுகளுக்கெல்லாம் பணம் செலுத்த வேண்டும் அதை அமெரிக்க டாலராக தான் செலுத்த வேண்டும். இப்போ நம்ம குறைவா ஏற்றுமதி பண்ணினதால கைல குறைவான டாலர்கள் தான் இருக்கும் ஆனா அதிக இறக்குமதி பண்ணினதால அதிக அமெரிக்க டாலர் மற்ற நாடுகளுக்கு செலுத்த வேண்டும். இப்போ சந்தைல இருக்கவன் நமக்கு டாலரின் தேவை அதிகமா இருக்குறதால அதோட விலைய படிபடியா உயர்த்துவான். அப்போ ரூபாயோட மதிப்பு குறையும்.

கிட்ட தட்ட மீன் மார்க்கெட்ல மீன் வாங்குற மாதிரி தான் கூட்டமே இல்லாம அதிகமா மீன் இருந்தா மீன் விலை குறையும். மீன் குறைவா  இருந்து கூட்டம் அதிகமா இருந்தா மீன் விலை கூடும். அதே தான் இங்கயும். வெங்காயத்துல இருந்து ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ், கச்சா என்னை வரை ஏகப்பட்ட பொருட்கள இறக்குமதி செய்வதால் தான் நம் ரூபாய்க்கு இன்று இந்த நிலைமை.

இப்போ டாலரவே அதிக ருபாய் குடுத்து வாங்குறோம் இதுல எண்ணை வியாபாரிகள் விலையை எத்திடானுகன்னா ஒரே அடியா நாட்டில் உள்ள எல்லா பொருட்களின் விலையும் உயரும். காரணம் நாம சாதரணமா வாங்குற ஒரு பொருளின் விலை அதோட அடக்க விலையை போல் பத்து மடங்காவது இருக்கும் இதற்க்கு முக்கிய காரணம் ஒரிடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு பொருட்களை எடுத்து செல்ல ஆகும் செலவே. எண்ணை விலை அதிகரித்தால் போக்குவரத்து செலவு அதிகமாகும்... போக்குவரத்து செலவு அதிகமானால் பொருளின் விற்பனை விலையும் அதிகமாகும்.

எனக்கு தெரிஞ்ச அளவுல ஒரு கதை மாதிரி சொல்லி முடிச்சிருக்கேன்... தவறாக ஏதாவது இருந்தால் திருத்தவும்.


-ஜெயா

கவிதை - தலைப்பு செய்தி.....

கண்ணே மணியே என கொஞ்சிய பிள்ளை...
இக்கரையில் காத்திருக்க....

அத்தானை காணாமல் அழுத கண்ணீரையும் துடைக்காமல்...
பூத்த விழி பூத்திருக்க....

அண்ணன் அள்ளி வருவான் நம் துயரம் துடைக்க வருவான்...
என தங்கையவள் எதிர்பார்த்து நிற்க...

வந்தது அன்றய தலைப்பு செய்தி......
துப்பாக்கி முனையில் மீனவர்கள் கைது....
முதலவர் பிரதமருக்கு கடிதமென்று......


-ஜெயா