ஞாயிறு, 26 அக்டோபர், 2014

பால்காரன்


காலை எழுத்தவுடன் பசுவிற்கு முன்னிரவு ஊற போட்டு வைத்திருந்த பருத்தி கொட்டை புண்ணாக்கு தவிடு போன்றவை கலந்த தண்ணீரை வைத்து அதன் பசி ஆற்றுவான்.
பின் பசுவின் கன்றை அவிழ்த்து விட்டு அது பசுவின் மடு மீது மோதி பசுவுக்கு பால் சுரந்தவுடன் கன்றையும் பசுவையும் ஏமாற்றி மதுவின் மீது தண்ணீர் தெளித்து பால் கரப்பான்.
தன் மாடுகளுக்கு வைக்கோல் போன்றவற்றை போட்டுவிட்டு. அந்த பாலை டிப்போக்களிலோ அல்லது நேரிடியாகவோ சென்று விற்பனை செய்கிறான். பிறகு மறுபடி வீட்டுக்கு வந்து வைக்கோலை தின்று முடித்து அசை போட்டு கொண்டிர்க்கும் பசுக்களுக்கு மீண்டும் வைக்கோல் போடுகிறான்.
பின் தன்னிடம் இருக்கும் சைக்கில் அல்லது பைக் அல்லது பொடி நடையாகவோ சென்று வயல்வெளிக்கு சென்று புல் அறுக்கிறான். புல் விளையாத தருணங்களில் எங்காவது சென்று புல் வாங்கி வருகிறான். வயல்வெளியில் அறுக்கப்படும் புல்லும் இலவசம் இல்லை அதற்கும் அந்த வயல்வெளி சொந்தகாரனுக்கு ஒரு கணிசமான தொகை தரவேண்டியுள்ளது.
பின் அறுத்த அல்லது வாங்கிய புல்லை தன் பசுக்களுக்கு கொண்டு வந்து போடுகிறான். புல் மற்றும் வைக்கோல் சரியாக விளையாத சமையங்களில் அதன் விலை மிக அதிகமாக ஏறிவிடும் வேறு அந்த சூழ்நிலையும் அவன் தன் தலையில் தான் சுமக்க வேண்டும். சரி புல் விலை தான் அதிகமாக இருக்கிறதே புல் போடாமல் விட்டு விடுவோம் என்று இருந்தால் மாட்டில் பாலின் அளவு குறைந்து விடும். ஒரு முறை குறைந்து விட்டால் மீண்டும் பாலின் அளவை ஏற்றுவது அவ்வளவு சுலபம் இல்லை. மேலும் சில வாடிக்கையாளர்களையும் இழக்க நேரிடும். ஆதலால் புல் புண்ணாக்கு வைக்கோல் போன்றவை என்ன விலையாக இருந்தாலும் வாங்கித்தான் ஆக வேண்டும்.
இடையில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மாடுகளை மேய்ச்சலுக்கு வெளியில் அழைத்து செல்ல வேண்டும். பின் அதனை நன்கு குளிப்பாட்ட வேண்டும் குறைந்தது வாரம் ஒரு முறையாவது. பின் அவைகள் தங்கி இருக்கும் கொட்டாய்களையும் அங்கு குவியல் குவியலகாக இருக்கும் சனத்தை அள்ளி சுத்த படுத்த வேண்டும். சில நேரங்களில் குறிப்பாக வெயில் காலங்களில் மாடுகள் கட்டியாக சாணம் போடாமல் கலிய தொடங்கிவிடும் அப்போது மாடுகளும் சரி கொட்டாயும் சரி மிக வேகமாக அழுக்காகி விடும் அதனால் இரண்டையும் அடிக்கடி சுத்த படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.
இடையில் மதியம் மற்றும் இரவு நேரத்தில் மாட்டிற்கு பருத்தி கொட்டை புண்ணாக்குடன் தண்ணி காட்ட வேண்டும். நம் தெருக்களில் உள்ள வீடுகளில் ஒவ்வொரு பிளாஸ்டிக் குடங்களை வைக்க வேண்டும் அதில் அவர்கள் போடும் மீந்து போன கலினி தண்ணி கஞ்சி முதலியவற்றை சேர்த்து அவற்றையும் மாடுகளுக்காக கொடுக்க வேண்டும்.
இப்படி தான் ஒவ்வொரு நாளும் ஒரு பால்காரனின் வாழ்க்கை நகர்கிறது.
இங்கே மேலே சொல்ல பட்டிருப்பது சாதாரண ஒரு பால்காரர் பற்றியது தான். பண்ணை வைத்திருப்பவர்கள் கதை வேறு. மேலே இருப்பது என் சொந்த அனுபவமே.

கத்தி


இந்த படத்தை எதிர்த்த பல்லாயிரக்கணக்கானவர்கள்ள நானும் ஒருத்தன். இந்த படத்தைன்னு சொல்றத விட இந்த படத்தோட தயாரிப்பளர. அப்பறம் ஏதோ எப்படியோ சரிகட்டி படத்தை வெளிவிட்டுடாங்க. அதை பத்தி இங்க நம்ம ரொம்ப ஆராய்ச்சி பண்ண வேண்டாம். இந்த படத்தை பாக்கவே கூடாதுன்னு ஒரு முடிவுல இருந்தேன். அப்பறம் படம் வெளி வந்ததுக்கு அப்பறம் படத்தை பத்தி ஒரு ஹைப் உருவாச்சு அந்த ஹைப்ல தான் பல பேர் இப்போ படத்தை பார்த்துகிட்டு இருக்காங்க அதுல ஒருத்தன் தான் நான். இந்த ஹைப் கிட்ட தட்ட விஸ்வரூபம் படத்துக்கு உருவான அதே ஹைப் தான்.

படத்துல ப்ளஸ்ன்னா அவங்க சொல்லிருக்க கருத்து தான். அதை ரொம்ப அழுத்தமா திருத்தமா சொல்லிருக்காங்க. நம்ம நாட்டோட முதுகெலும்பு கிராமங்கள்ன்னு காந்தியடிகள் சொன்னாரு அந்த கிராமங்களோட முதுகெலும்பே விவசாயம் தான். இப்போ அந்த முதுகெழும்ப எப்படி கார்பரேட்காரன் ஒடிச்சுகிட்டு இருக்கான். அதுக்கு எந்த எதிர்ப்புமே தெரிவிக்காம இதை ஒரு கிராமத்தான் பிரச்சனை என்பது போல நகரத்தில் உள்ள நாம் நினைத்துக்கொண்டு எப்படி கார்பரேட் கம்பெனிகளுக்கு நம்மை அறியாமலே நாம் ஆதரவாக இருக்கிறோம்ன்னு சொல்லிருக்காங்க.

படத்துல ரெண்டு விஜய் ஒருத்தரு ஜீவானந்தம் ஒருத்தரு கதிரேசன். கிட்டத்தட்ட பழைய எம்ஜிஆர் பாணி தான் ஒருத்தர் வீரர் சூரர் இன்னொருத்தர் கோழை. கதிரேசன் திருடன் தண்டனை கைதி வீரன். கொல்கொத்தா ஜெயில்ல இருந்து தப்பிச்சவன் நேர சென்னைக்கு வரான். அங்க இருந்து பாங்காக் போக ஏற்பாடு பண்ணி ஏர்போர்ட்ல அன்கிதாவ (அதாவது சமந்தாவ) பாக்குறான். அவ எதோ பொய்யா இதான் என் நம்பரு நீங்க இந்தியாவுல இருந்தா உங்கள தான் கட்டிக்குவேன்னு சொல்லிட்டு போக. உடனே அந்த பொய்ய நம்பி நம்மாளு கதிரேசன் சென்னைல இருந்து அந்த பொண்ண பிக்கப் பண்ணலாம்ன்னு முடிவு பண்றாரு. என்னங்கடா இது ஜெயில்ல இருந்து தப்பிச்ச ஒருத்தன் போலிஸ் தேடிகிட்டு இருக்கு மாட்டுன மறுபடி புடிச்சு ஜெயில்ல போட்டிருக்வாங்க இப்போ இவன் லவ் பண்ணி என்ன பண்ணபோறான் அதுவும் அந்த பொண்ணு உண்மை தான் சொல்லுச்சான்னே தெரியல இவள நம்பி சென்னைலயே இருக்கபோறான்னான்னு நீங்க லாஜிக் சிந்திக்கிற ஆளா இருந்தா இந்த படம் பூராம் நீங்க சிந்திச்சுகிட்டே தான் இருக்கணும்.

சரி கதைக்கு வருவோம். தப்பிச்ச கத்தி என்கிற கதிரேசன் ஒரு சந்தர்பத்துல இவரு மாதிரியே இருக்க ஜீவாவ ஒரு கொலை முயற்ச்சில இருந்து காப்பாத்தி அந்த சந்தர்பத்த தனக்கு சாதகமா பயன்படுத்தி ஜீவாவ கொல்கொத்தா ஜெயிலுக்கு அனுப்பிட்டு தான் ஜீவா மேற்பார்வைல இருந்த முதியோர்  இல்லத்துல தான் தான் ஜீவான்னு போயிடுறாரு. சிலபேர் கத்திய ஜீவான்னு நினைச்சு பல லட்சங்கள் கோடிகள் குடுத்து உங்க ஆசிரமத்துல இருக்க பெரியவங்க பத்து பேர்கிட்ட கையெழுத்து வாங்கித்தா இன்னும் நிறைய தரோம்முன்னு சொல்லறாங்க. பணத்தாசை புடிச்ச கத்திக்கும் எப்படி ஜீவாவோட உணமையான கதை தெரிய வருது அதற்கப்பறம் கத்தி எப்படி ஜீவாவோட இடத்துல இருந்து ஜீவா செய்ய வேண்டியதெல்லாம் செய்து முடிக்கிறார்ங்கறது மீதி கதை. படத்துல விவசாயத்தை பத்தியும் நம்ம ஊர்ல நடக்குற கார்பரேட் கொள்ளைகள் பத்தியும் நாட்டில் நடக்கும் சில ஊழல்கள் சில பண முதலைகளின் அடாவடிகள் பற்றி சொல்லும் வசனங்கள் நாம் அடிக்கடி சமூக வலைதளங்களில் படித்த விசயங்களாக இருந்தாலும். கத்தியாக விஜய் பேசிய போது இன்னும் அழுத்தமாகவும் அனேக மக்களை சென்றடைய ஏதுவாகவும் இருக்கும்.

ஜீவானந்தம் பத்தி சொல்லனும்ன்னா படத்துல இவர விட சமந்தா அதிக காட்சிகள்ள வராங்க ஆனாலும் ஊரு உலகமே ஜீவனத்ததை பத்தி தான் பேசுது. அதுக்கு காரணம் இவர காப்பதுறதுக்காக ஆறு பெரியவங்க மொத்தமா தற்கொலை பண்ணி அதை வீடியோ எடுத்து செய்தியா பரப்புறது தான். அதுக்கு முதல்ல ஜீவாவ ஏன் காப்பாத்தனும்ன்னு சொல்லிடறேன் அதாவது தன்னூத்துன்னு ஒரு கிராமம் அந்த கிராமத்து இளைஞன் தான் ஜீவானந்தம். அவரு ஒரு ஹைட்ரோலோஜி படித்தவர் தன் கிராமத்துல இருக்க மிக பெரிய ஊத்தை கண்டுபிடிக்கிறாரு. அந்த ஊத்து இருந்த இடத்தை வில்லன் அவன் வில்லத்தனத்தின் மூலம் தன்னோட கார்பரேட் கம்பெனிக்காக ஆக்கிரமிச்சுரான். இதை எதிர்த்து கேட்ட மக்களுக்கு விவரங்கள் சொல்லுவது ஜீவா தான்னு தெரிஞ்சு அவன கைது பண்ணி ஊறவே மிரட்டுறாங்க. இந்த விஷயத்தை மீடியா மூலம் வெளில கொண்டு வந்து ஜீவாவ காப்பாத்த தான் பெரியவர்கள் தற்கொலை செய்துகொண்டாங்க. இப்படி பெரியார்களின் தியாகம் மற்றும் கத்தியின் அதிரடி சரவெடி நடவெடிக்கைகள் மூலம் இறுதியில் கிடைக்கும் வெற்றி என அத்தனை தியாகங்களுக்கும் மூலகாரணமாக பார்க்கப்படும் ஜீவானத்திற்கு படத்தில் பெரிய முக்கியத்தும் கொடுக்காதது ஏன் என்று புரியவில்லை. குறைந்தது கத்திக்கு கொடுத்ததில் ஒரு பாதி முக்கியத்துவமாவது கொடுத்திருக்கலாம்.

கிளைமாக்ஸ் காட்சிகளில் கத்தியை வில்லன்கள் சதக் சதக் என குத்தும் போது கதாநாயகி இருந்திருந்தால் கூட ஒரு கல் எடுத்து எறிந்திருப்பாள் இல்லை ஓடிப்போய் வில்லன் கையாவது கடித்து வைத்திருப்பாள். என்னதான் ஜீவா சண்டை தெரியாதவராக இருந்தாலும் தன கிராமத்துக்காக ஊரை கூட்டி போராட தெரிந்த ஒரு போராளி. ஒரு கிராமத்துகாரர் வேறு பொதுவாக நகரத்தில் வசிப்பவர்கள் சில சந்தர்ப்பங்களில் நமக்கு எதுக்கு வம்பு என ஒதுங்கி போவார்கள். கிராமத்துகார்கள் இப்படி தனக்காக ஒருவர் அடிவாங்கி கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டாரகள். ஜீவாவை இந்த அளவு கோழையாக காமித்திருக்க தேவையில்லை.

ஜீவானந்தம் உடைய வில்லன் கார்பரேட் கம்பெனி ஓனர் முகேஷ் இவருக்கு பெரிய வில்லன் தோரணை இல்லை என்றாலும். ஒரு கார்பரேட் கம்பனி ஓனர் லுக் இருந்ததது. அவருக்கு கொடுத்த வேலையும் அவர் சரியா செய்திருக்கிறார். இவ்ளோ பெரிய கார்பரேட் ஓனர் கொடூரமான வில்லன்கிட்ட நான் மேல சொன்ன சண்டைன்னா என்னன்னே தெரியாத ஜீவாவ கொல்றத்துக்கு கூட ஒரு நல்ல ரவுடி இல்லாதது ஏன்னு தெரியல? இவருடைய காட்சிகள் எதுவம் அந்த அளவுக்கு மனசுல பதியல அதனால அப்படியே விட்ருவோம்.

கதாநாயகி எல்லா பாட்டுக்கும் வந்து நல்லா ஆடினாங்க சூப்பர். காமெடி விஜய் ஒரு ரெண்டு மூணு இடத்துல நல்லா பண்ணிருந்தாரு. சதீஸ் காமெடிக்கு படத்துல விஜய்யே நாளைக்கு வந்து சிரிக்கிறேன்ன்னு சொல்லுவாரு. அவரே அப்படி சொல்றப்போ நமக்கும் அப்படி தான் இருந்தது.

இசை தீம் இம்மார்டல்ஸ் ஆல்பத்தோட காப்பின்னு சொன்னாங்க இருந்தாலும் நாம இப்போ தானே முதல்ல கேக்குறோம். அதனால ரொம்பவே நல்லா ரசிக்கும் படி இருந்தது. எல்லா பாட்டுமே நல்லா இருந்ததுன்னு நான் சொல்ல வேண்டாம் நீங்களே நிறைய முறை கேட்டு இருப்பீங்க. பின்னணி சில இடங்களில் பின்னி எடுத்திருக்கிறார் மிக சில இடங்களில் தலை வலியும் ஏற்படுத்தி இருக்கிறார். என்ன இருந்தாலும் ரசிக்கும் படியான பாடல்கள் தந்ததிற்கு அனிருத்துக்கு ஒரு சபாஷ் போட்டே ஆக வேண்டும்.

படத்தில் மிக பெரிய பலம் அதன் மைய கருத்து மற்றும் அதனை சொல்லிய விதம் அதற்காக பயன்படுத்த பட்ட வசனங்கள். பலவீனங்கள் மற்றும் சொதப்பகள் இயக்குனர் தமிழக மக்கள் லாஜிக் என்றால் என்ன என்று தெரியாவதவர்கள் என்று நினைத்து விட்டதும். பல கதாபாத்திரங்களை எந்த முடிவும் இல்லாமல் அப்படி அப்படியே தொங்கலில் விட்டு விட்டுதும். உதாரணத்துக்கு ஒரு கலெக்டர் வந்து 25 லட்சம் பணம் தருவார் அவர் ஏன் கொடுத்தார் அவர் வில்லனின் ஆளா? கடைசியில் அவர் என்ன ஆனார்?  வில்லனை ஒரு காட்சியில் கூட சந்திக்கவோ பேசவோ இல்லையே? அடுத்து ஜீவாவை கொல்ல ஒரு கூட்டம் இருப்பது போல் கத்தியை கொல்லவும் ஒரு வில்லன் ஒரு கூட்டம் இருக்கிறது ? இவர்கள் என்ன ஆனார்கள்?

படம் மசாலா மாஸ் படம் என்பதற்காக கதாநாயகன் ஒரு மிக பெரிய போராட்டத்தில் ஈடு பட்டு கொண்டிருக்கும் போது. திடீரென்று ஒரு பிணத்தின் முன் கதாநாயகியுடன் குத்து பாட்டுக்கு நடனம் ஆடுவதெல்லாம் ரசிக்கும் படியாக இல்லை. திரைகதை பின் பாதியில் சற்று வேகமாக போனாலும் ஆரம்பத்தில் படு இழுவையாகவே இருந்தது.

ஆயிரத்தெட்டு ஓட்டைகள் இருந்தாலும் அத்தனை ஓட்டைகளையும் அடைக்க அவர்கள் எடுத்துக்கொண்ட விவசாயம் என்ற மைய கருத்தும் அதை சொல்ல முற்பட்ட விதமும் நன்றாகவே பயன்பட்டிருக்கிறது. அதைவிட முக்கியமாக ஒரு கருத்தையும் இங்கு சொல்லி இருக்கிறார்கள் அது என்னவென்றால் நம் நாட்டின் மீடியாவின் உண்மை தன்மை. அவர்கள் அனைவரும் வியாபார நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகிறார்கள்  அவர்களுக்கு வியாபாரம் ஆகாத விசயங்களை பற்றி ஒரு துண்டு செய்தி கூட போடுவதில்லை என்ற கருத்து தான்.

படத்தில் பன்னாட்டு நிறுவங்கள் பற்றியும் அதன் முதலாளிகள் பற்றியும் குறிப்பாக அரசியல் பற்றியும் விஜய் பேசும் வசனங்களை பேசும் தைரியம் கண்டிப்பாக விஜயகாந்த் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது என்னுடைய எண்ணம். இவ்வளவு தைரியமாக பேசிய விஜய்க்கு ஒரு சபாஷ்.

என்ன தான் படம் முழுக்க பன்னாட்டு நிறுவங்களின் அக்கிரமங்கள் பற்றி பேசினாலும் இந்த படத்தின் தயாரிப்பாளரே ஒரு பன்னாட்டு நிறுவன அதிபர் தானே ஏன் நம் நாட்டு ஒரு சிறு தயாரிப்பாளரை வைத்து இந்த படத்தை எடுத்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. இருந்தாலும் இது பட விமர்சனம் என்பதால் இத்துடன் முடித்துகொள்கிறேன்.

கத்தி - விவசாயிகளுக்காக நவீன சினிமா சார்பில் ஒலித்த முதல் குரல்.....

 













ஞாயிறு, 12 அக்டோபர், 2014

ஜீவா


எனக்கு மனதை பாதித்த படங்கள் சில அதுல குறிப்பா சொல்லனும்ன்னா அங்காடி தெரு, சாட்டை இப்போ இந்த படம். 

அப்படி என்ன தாங்க இந்த படத்துல இருக்குன்னு கேக்குறீங்களா. காதல் - ஆமாங்க காதல் படம் தான், நட்பு - ஆமாங்க நண்பர்கள் பத்தின படம் தான், அப்பா செண்டிமெண்ட் - இருக்குங்க, அம்மா செண்டிமெண்ட் - இருக்குங்க, சகோதர பாசம் - இருக்குங்க, சமூக பார்வை - சாட்டைக்கு அடுத்து சாட்டையடியான படங்க, இசை - இமான் கலக்கிருக்காருங்க, காமெடி - ரொம்ப இல்லைனாலும் ரெட்டை அர்த்தங்கள் இல்லாம சிரிக்கிற மாதிரி இருக்குங்க, சண்டை - ஒரு ஆள் ஆயிரத்து ஐநூறு பெற அடிச்சு பறக்கவிடுற மாதிரி கேவலமான சண்டை மட்டுமில்ல வேற எந்த ஒரு அடி தடி சண்டையும் இல்லை, கவர்ச்சி - ஏய் யாரபார்த்து இந்த கேள்வி கேக்குற ஏதோ அந்த ஸ்ரீ வித்யா புள்ளை தான் கொஞ்சம் ஒழுங்கா நடிக்குது அது பொறுக்கலையா உனக்கு.

படம் ஆரம்பிக்கும்போது சின்ன பையனா வரும் ஜீவா கொஞ்ச நேரம் தான் வந்தாலும் நம்ம சின்ன வயசு ஞாபகத்தை கொஞ்சம் அப்படியே திரும்ப வர வச்சுட்டு போயிடுறான். அவன் ஒரு ஸ்போர்ட்ஸ் கடைல போய் பேட் விலை விசாரிச்சுட்டு பந்து வாங்கிட்டு வர்ற சீன பார்க்கும் போது நம்ம சின்ன வயசு பிளாஷ்பேக் நம்மள அறியாமலே மனதுக்குள்ள ஓடும். 

அடுத்து டீன்னேஜ் ஜீவா அவன் சின்ன வயசுல எந்த அளவுக்கு கிரிக்கெட்ட நேசிச்சானோ இப்பவும் அதே பிடிப்போட அவன் பள்ளிக்கு விளையாடுறான். எல்லா நடுத்தர மக்கள் வீடுகள் போலவே ஜீவாவோட அப்பாவும் கிரிக்கெட் ஒரு பணக்கார விளையாட்டு நமக்கு வேணாம்ன்னு முதல் முட்டுகட்டை போடுறாரு. அதுகூட உண்மை தான் கிரிக்கெட் விளையாடனும்ன்னா ஒரு நல்ல கோச்கிட்ட போய் கோச்சிங் சேரனும் அதுக்கு தேவையான அத்தனை விளையாட்டு மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் எல்லாம் வாங்கணும். சும்மாவா கிடைக்கும்.

இந்த சமையத்துல கதாநாயகி ஜெனிய சந்திக்கிறான் ஜீவா காதல் அப்பறம் வீட்டுக்கு தெரிஞ்சு மோதல். பள்ளிக்கூடம் படிக்கிற வயசுல என்ன காதன்னு அறிவுரை அதற்கப்பறம் ஒரு பிரிவு. காதலியின் பிரிவை தாங்க முடியாம இருக்க பையனுக்கு அவனுக்கு புடிச்ச கிரிக்கெட்ட மறுபடி கொடுக்கிறார் அப்பா. 

நண்பன் ரஞ்சித்த சந்திக்கிறான் ஆரம்பத்துல ரெண்டு பேருக்கும் ஒத்து வரலைனாலும் போக போக ரொம்ப நெருங்கிய நண்பர்கள் ஆகிடுறாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து சிறப்பா விளையாடறாங்க. இங்க தான் நம்ம சூரி படத்துல சீனியரா அறிமுகம் ஆகுறாரு படம் கலகலக்குது. மறுபடி ஒரு சின்ன காதல் முக்கோண காதல். அப்பறம் நட்புக்குள்ள அந்த காதல் காணமல் போகுது. 

இந்தியன் கிரிக்கெட் டீம்குள்ள நுளையுறதுக்கு முன்னாடி எத்தனை எத்தனை வெற்றிகள பெறனும் எவ்வளவு தடைகள் இருக்கும் இதெல்லாம் கோச் சொல்றாரு. எதிர்பார்த்தது போலவே நண்பர்கள் இருவரும் சிறப்பா ஆடி அடுத்தடுத்த போட்டிகளுக்கு தேர்வாகி கடைசில ரஞ்சிட்ரோபி வரைக்கும் வந்திடுறாங்க. இங்க தான் ஜாதி அரசியல் உள்ள நுழையுது. தமிழகத்துல இருந்து இந்திய அணிக்கு தேர்வாகுற எல்லா வீரர்கள்  மட்டுமில்லை தமிழக கிரிக்கெட் கமிட்டில வேலை செய்ற பியூன்ல இருந்து தலைவர் வரைக்கும் ஒரே ஜாதிய சேர்ந்தவங்க தான். இருந்தாலும் எப்படியாவது நமக்கு கிடைச்ச வாய்ப்ப பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேரனும்ன்னு நம்ம்பிகையோட நண்பர்கள் இருவரும் ரஞ்சிட்ரோபி களத்துக்கு வராங்க. முதல் வருஷம் ஒரு மேட்ச் கூட வாய்ப்பே கிடைக்காம தண்ணி பாட்டில தூக்கி கொண்டு போய் குடுத்தே முடிஞ்சுருது. அடுத்த வருஷம் பேருக்கு ரெண்டு மேட்ச் ஆட விட்டு உக்கார வச்சிராங்க. மூணாவது வருஷம் இவங்களுக்கு ஆவரேஜ் பத்தலன்னு சொல்லி இவங்கள  ரஞ்சிட்ரோபி டீம்லையே எடுக்காம வெளியேத்துறாங்க. இது எல்லாமே அப்பட்டமான ஜாதி அரசியல்ன்னு புரிஞ்சுகிட்ட நண்பர்கள் தங்களுக்கு ஞாயம் கேட்டு போறாங்க. எல்லாமே ரூல்ஸ் படி தான் நடக்குது உங்களுக்கு ஆவரேஜ் இல்லைன்னு சொல்லி கழுத்தை புடிச்சு வெளிய தள்ளிடுராணுக. விளையாண்டு தோத்தாலும் பரவாயில்லை வாய்ப்பே கிடைக்காம தோத்து போறோமேன்னு ஜீவா சொல்லும் வசனம் பல ஜீவாக்களின் வாழ்க்கைக்கும் பொருந்தும்.

இந்த நண்பர்கள் மட்டுமில்லை இதே போல எவ்வளவோ நண்பர்கள் இவர்கள் ஜாதி வெறிக்கு பலியாகி அவர்கள் கனவு வாழ்க்கை எல்லாத்தையும் இழந்து ஒரு நடைபிணமா ஏதோ ஒரு வாழ்க்கைய வாழ்ந்துகிட்டு இருப்பாங்க. சிலர் பிணமாவே ஆகிடுவாங்க. அப்படி ரஞ்சித்தும் பிணமா ஆகிடுறான். ஜீவா நடைபிணமா ஆகிடுறான்.  

இடைல ஜீவா தன்னோட பழைய காதல்யும் மறுபடி உயிர் பெற வக்கிறான். முன்ன இருந்த அதே தடை தான் இப்பவும் இருக்கு அவனுக்கு வேலையில்லை பொண்ணோட அப்பா நான் வேலை வாங்கி தரேன்னு சொல்றாரு. தன்னால கிரிக்கெட்ட விட்டு வெளிய வராம தவிக்கிறான் ஜீவா.

படத்தை ரொம்ப சோகமா முடிக்க கூடாதுன்னோ என்னவோ இயக்குனர் ஜீவாக்கு சிபிஎல்ல (ஐபிஎல்ல உல்ட்டா பண்ணிருக்காரு) ஜீவாக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சு அது மூலமா ஜெயக்கிற மாதிரி முடிச்சிருக்காரு. அப்படி ஜீவா வெற்றி பெற்று சிபிஎல் மைதானத்துல இறங்குரபோ கூட நம் கண்களில் கண்ணீர் தான் வரும் இந்த கேடுகெட்டவர்களை நினைத்து.

என்னை பொருத்தவரைக்கும் இப்படி பல ஜீவாக்கள் தங்கள் காதல் நட்பு கனவு வாழ்க்கை எல்லாத்தயும் தொலைச்சுட்டு ஒரு நடைபிணமாக தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்போ கிரிக்கெட்ட எடுத்து பார்தீங்கன்ன கூட தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு ஐபில் மேட்சுல கூட இந்த மாதிரி ஜீவக்களுக்கு இடம் கிடைக்காமல் முட்டுக்கட்டை போட்டு இவர்கள் இருப்பதையே வெளி உலகுக்கு தெரியாமல் செய்துவிடுவார்கள் இந்த ஜாதி சாணக்கியர்கள்.

இந்த படம் கிரிக்கெட் பற்றியதால் கிரிக்கெட்டில் மட்டும் இப்படி நடக்கிறது என்று இல்லை. எல்லா விளையாட்டிலும் இப்படி பல ஜீவாக்கள் புறக்கணிக்க பட்டுகொண்டு தான் இருக்கிறார்கள்.

படம் விமர்சனம் என்று ஆரமித்து ஏதேதோ சொல்ல ஆரமித்துவிட்டேன். படத்தின் தாக்கம். கண்டிப்பாக சமூக அக்கறையுள்ளவர்கள் பார்க்கவேண்டிய படம்.

ஜீவா - இனி ஒரு விதி செய்வோம்... இப்படி பல ஜீவாக்கள் தங்கள் வாழ்க்கையை தொலைக்காமல் தடுப்போம்....

இப்படி ஒரு படத்தை தந்த இயக்குனர் சுசீந்திரனுக்கு நன்றிகள்.