செவ்வாய், 13 செப்டம்பர், 2016

தமிழரின் தாகம் - காவிரி 3



மேகதாது அணை திட்டம்:

சுருக்கமாக சொல்வதென்றால் இது தமிழக விவசாயிகளுக்கு ஓட்டு மொத்தமாக வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு சமமான திட்டம். பாலாற்றில் இருந்து வரும் ஒரு சிறு பகுதி தவிர மேட்டூர்அணை மொத்தமாக காவிரியை நம்பியே உள்ளது. இந்த மேகதாது திட்டம் என்பது இரண்டு 25 TMC அணைகள் அல்லது ஒரு 50 TMC அணை கட்டும் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் சேமிக்கபடும் தண்ணீரை பின் கோலார், பெங்களூரு மற்றும் நீர் பற்றாக்குறை உள்ள மற்ற கர்நாடக மாவட்டங்களுக்கு திருப்பிவிடுவது.

அணை என்பது ஒரு நிரந்தர கட்டுமானம், அது பல தலைமுறைகளுக்கு அங்கேயே நிலைத்து விட கூடிய ஒன்று. ஒவ்வொரு ஐந்து அல்லது பத்து வருடத்திற்கு ஒரு முறை தான் காவிரி பகுதியில் வெள்ளம் வருகிறது. மற்ற வருடங்களில் இந்த வருடம் (2015 - 2016) உட்பட அனைத்து வருடங்களும் பற்றாக்குறையே நிலவுகிறது. இந்த வருடம் போதுமான பருவ மழை பெய்தது என்று அறிவிக்கப்பட்டும் பற்றாக்குறை தான் நிலவுகிறது.

இந்த மேகதாது திட்டமானது சரியாக தமிழ்நாட்டு எல்லையில் மேற்கு கர்நாடகத்தில் அரக்காவதி, கபினி, காவிரி சங்கமிக்கும் இடத்தில் கட்டப்பட திட்டமிட படுகிறது. இதனால் கபினி அனையிலிருந்தோ அல்லது கிருஷ்ணா ராஜ சாகர் அனையிலிருந்தோ தண்ணீர் திறந்து விட பட்டால் அது தமிழகத்தை அடைவதற்கு முன் இந்த அணையை நிறைத்து விட வேண்டும். ஆக இந்த அணை நிறையும் வரை ஆ என்று வாயை திறந்துகொண்டு தமிழர்கள் காத்திருக்க வேண்டும்.

தொன்றுதொட்டே மேட்டூர்அணையில் விவசாயத்திற்காக ஜூன் 12 ஆடி பட்டம் அன்று தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் கடந்த பதினைந்து வருடங்களாக ஒரு நாள் கூட சரியான தேதியில் தண்ணீர் திறந்துவிட முடிவதில்லை. என்ன தான் காவிரி நான்கு மாநிலங்களில் பாய்ந்தாலும் அது ஆற்று படுக்கையை (டெல்ட்டா) உருவாக்குவது தமிழ்நாட்டின் மேற்கே திருச்சியில் தான். காவிரி டெல்ட்டா ஒரு வளமான பகுதி எவ்வளவு வளம் என்றால் ஒரு காலத்தில் ஒரு வருடத்திற்கு மூன்று போகம் விளைந்து அமோக மகசூல் தரக்கூடிய வளம். ஆனால் இன்றோ ஒரு போகம் விளையுமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

கர்நாடக அரசு எப்படி இந்த மேகதாது திட்டத்தை ஞாய படுத்துகிறது என்றால். அவர்கள் தமிழகத்திற்கு 250 TMC தண்ணீர் திறந்துவிட்டார்களாம். ஆனால் தமிழகத்திற்காக ஒதுக்கப்பட்ட நீரின் அளவு 190 TMC தானாம். ஆக மீதமுள்ள 60 TMC தண்ணீர் அனாமத்தாக கடலில் கலந்து வீணாவதை தடுக்கவே இந்த அணையை கட்டுகிறார்களாம். ஆனால் அவர்கள் சொல்லும் இந்த 250 TMC எப்போது திறந்துவிட்டார்கள் என்றால் ஒரு முறை அதிக மழை பொலிந்து வெள்ளம் ஏற்பட்ட போது திறந்துவிட்டார்களாம். கர்நாடகா கடந்த 10-20 வருடங்கள் திறந்து விட்ட நீரின் அளவின் சராசரியை வைத்து சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. எப்போதோ வெள்ளத்தால் திறந்துவிட்டார்கலாம் அந்த அதிகபடியான அளவை கணக்கில் கொள்வார்களாம். உண்மையில் இது நகைப்புக்குரியதே.

ஆக கன்னட அரசு என்ன சொல்கிறது என்றால் அவர்கள் அதிகபடியான நீரை திறந்துவிட்டு அதில் 190 TMC நீரை தமிழகத்திற்கு கொடுத்துவிட்டு மீதத்தை மேகதாது அணையில் சேமித்து கொள்வார்கலாம். இதை அப்படியே நம்பி ஏற்றுகொள்வோம் ஆனால் தமிழர்களை விட கேனையர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. நாம் அவ்வளவு கேனைகள் இல்லை என்பதற்கு சான்றாய் தமிழக அரசும் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து கொண்டிருக்கிறது. காரணம் இந்த வருடம் நமக்கு தேவையான 190 TMC தண்ணீரை பெற நாம் எவ்வளவு போராட வேண்டியுள்ளது. இன்னுமும் (Sep 09 2016) அந்த அளவு தண்ணீர் நம்மை வந்து அடையவில்லை. ஆக 190 TMC நீரையே தர முடியாத உன்னால் எப்படி 250 TMC தண்ணீர் தர முடியும் என்பதே தமிழக அரசின் வாதம்.

காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விட படும் 190 TMC தண்ணீரில் ஒவ்வொரு சொட்டும் விவசாயத்திற்காகவும் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்த பட்டுவிட்டால் எந்த நீர் கடலை சென்றடையும்? ஒரு குறிப்பிட்ட அளவு நீராவது கடலை சென்று அடையவேண்டாமா. அப்படி ஒரு சொட்டு நீரை கூட கடலுக்கு தராமல் இருந்தால் அது சுற்றுப்புற சூழல் சீர்கேட்டிற்கு வழிவகுத்து விடாதா? ஆக இயற்க்கை சமநிலையை காக்க ஒரு குறிப்பிட்ட அளவு நீராவது கடலை சென்றடைவது அவசியமாகிறது.

ஆசியாவில் இரண்டாவது பெரிய மாங்க்ரூ காடுகள் தமிழகத்தில் பிச்சாவரத்தில் கொள்ளிட வாயில் காவிரி கடலில் சங்கமிக்கும் இடத்தில் தான் இருக்கின்றன. இந்த மாங்க்ரூ காடுகள் இல்லையென்றால் 2004 சுனாமியில் தமிழ்நாடு இன்னுமும் பெரிய இழப்புகளை சந்தித்திருக்கும். இந்த மாங்க்ரூ காடுகள் பொதுவாக நன்னீரும் உப்பு நீரும் கலக்கும் இடத்தில் வளரும் தன்மை கொண்டவை. நாம் நன்னீரை மொத்தமாக தடை செய்துவிட்டால் இந்த மாங்க்ரூ காடுகள் அழிந்து விடாதா?





சில அரசியல் நாடகங்கள்:

ஆகஸ்ட்டு 13 - 2016 கர்நாடக முதல்வர் சொல்கிறார் எங்களுக்கே தண்ணீர் இல்லாததால் இந்த வருடம் ஜூலை மற்றும் ஆகஸ்ட்டில் திறந்துவிட படும் தண்ணீரை திறந்துவிட முடியாது என்று.

ஆதாரம்:

http://www.thehindu.com/news/national/karnataka/no-water-to-spare-karnataka-tells-tn/article8983134.ece

அடுத்து ஆகஸ்ட்டு 15 - 2106 அதே கர்நாடக முதல்வர் சித்தாராமையா சொல்கிறார் காவிரியில் திறந்துவிட படும் 250 TMC தண்ணீர் வீணாகாமல் இருக்க காவிரிக்கு குறுக்கே 5,912 கோடி ரூபாய் மதிப்பில் மேகதாது அணை கட்ட வேண்டும் என்று .

அதாரம்:

http://timesofindia.indiatimes.com/city/chennai/Ktaka-plans-new-dam-at-Mekedatu-Farmers-to-protest/articleshow/53715010.cms

இது எப்படி இருக்கிறது பருவமழை பற்றாக்குறையால் தமிழகத்திற்கு எந்த தண்ணீரும் தர இயலாது என்று சொல்லிவிட்டு அடுத்த இரண்டு நாளில் தமிழகத்திற்கு தரும் தண்ணீரில் 50 TMC கடலில் கலந்து வீனாகிறது ஆதால் அணை கட்டுகிறோம் என்பது.

என்னை பொறுத்த வரை நீங்கள் காவிரி கரையில் இருக்கிர்களோ இல்லையோ தமிழகத்தை சேர்ந்த ஒவ்வொரு வரும் இதை எதிர்க்க வேண்டும். இந்த திட்டம் நிறைவேற்ற பட்டுவிட்டால் அது தமிழக வரலாற்றின் மிக பெரிய பிழையாக மாரி நமக்கும் நம் சந்ததியினருக்கும் பேரழிவை தந்து விடும். பருவநிலை மாற்றத்தாலும் பருவமழை நிலையற்று இருப்பதாலும் இந்த திட்டத்தை நிறைவேற்றி விட்டார்கள் என்றால் ஒட்டுமொத்தமாக நாம் விவசாயத்தை இழக்கும் நிலையும் ஏற்படலாம்.

திங்கள், 12 செப்டம்பர், 2016

தமிழரின் தாகம் - காவிரி 2

காவிரியின் குறுக்கே அணை கட்டாததால் தான் இவ்வளவு தண்ணீர் தட்டுப்பாடு என கூறும் நண்பர்களுக்கு....

முதலில் நீர் மேலாண்மை பற்றியோ நீர் பகிர்மானம் பற்றியோ எனக்கு பெரிய அறிவு இல்லை ஒரு சாதாரண மனிதனாக என் சிற்றறிவுக்கு பட்டதை எழுதுகிறேன் தவறு இருப்பின் சுட்டிகாட்டவும்.


தமிழகத்தில் மிக பெரிய நீர் ஊற்றோ இல்லை ஆவியாகி மேகமாக செல்லும் மேககூட்டங்களை தடுத்து மழையாக பொழிய வைக்க கூடிய மிக பெரிய மலை குன்றுகளோ இல்லை. தாமிரபரணியை தவிர்த்து அதுவும் நெல்லை மாவட்டத்தோடு சரி அதையும் முடிந்த வரை அழித்துவிட்டோம் அந்த கதையை வேறொரு பதிவில் பேசுவோம்.

ஆக நமக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றால் அது அண்டை மாநிலங்களில் இருந்து நம் மாநிலத்திற்குள் பாயும் நதிகள் மூலம் மட்டும் தான். குறிப்பாக தமிழகத்தில் 50% க்கு மேல் காவிரியை தான் நம்பியுள்ளோம். கிட்டத்தட்ட கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் தொடங்கி காவிரியின் பிள்ளைகளாக தான் வளர்ந்துள்ளோம்.

 நம்மிடம் இருக்கும் மிக பெரிய அனையான மேட்டூர்அணை(93 TMC) இந்த அணைக்கே கர்நாடகா தரும் தண்ணீர் பற்றவில்லை இதில் வேறு அணைகட்டி என்ன செய்வது?

சரி நீங்கள் சொல்வது புரிகிறது. அவன் தான் வெள்ளம் வந்துவிட்டால் மடமடவென திறந்து விடுகிறானே அப்போது செமித்துகொல்லாமே. அதற்க்காவாவது அணைகட்டலாமே என்கிறீர்கள்.

நன்றாக சிந்தித்து பாருங்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை வெள்ளம் வருகிறது? குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை. அப்படி வெள்ளம் வந்த போது கர்நாடகா அதிகபட்சமாக திறந்துவிட்ட நீரின் அளவு 250 TMC மட்டுமே. தமிழகத்தின் தேவையே 190 TMC என்று அளவிட்டிருக்கும் பட்ச்சத்தில் அப்படி அதிகமான வெள்ளம் வந்தபோது கடலில் கலந்துவீணான நீரின் அளவு 60 TMC மட்டுமே.

இப்படி ஒரு முறை அதிகபட்சமாக திறந்துவிட்ட 60 TMC கணக்கு காட்டி தான் தமிழ்நாடு கர்நாடக எல்லையில் 60 TMC அளவுள்ள மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்துகொண்டிருக்கிறது. இங்கு தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட கொடுக்க முடியாது என்று சொல்லும் சித்தாராமையா அதே வாயால் தமிழகத்திற்கு கொடுத்தது (190 TMC) போக 60 TMC உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க மேகதாது அணை கட்டுகிறோம் என்பது கேலிகூத்தானது. அப்படி இந்த அணையை இவர்கள் கட்டிவிட்டார்கள் என்றால்  காவிரி டெல்ட்டா பகுதி பாலைவனமாவது உறுதி.

சரி மேகதாது அணை கட்டவில்லை என்றே வைத்துகொள்வோம் நாம் உபரியாக சிந்தும் அந்த  60 TMC தண்ணீரை சேமிக்க மேட்ரூர் அணைக்கு அடுத்தாற்போல் ஒரு அணையை கட்டிவிட்டோம் என்றே வைத்துகொள்ளுங்கள். இப்போது அந்த அணைக்கு தண்ணீர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்ப்படும் அதிக படியான வெள்ளத்தில் தான் அப்போதும் எவ்வளவு கிடைக்கும் இதுவரை அதிக பட்சமாக வீணான அந்த 60 TMC தான்.  இந்த 60 TMCயை அடுத்து கர்நாடகாவில் வெள்ளம் வரும் வரை பகிர்ந்தளித்து சமாளிக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது.  மேலும் பறந்து விரிந்த அணைகளில் தண்ணீரை சேமித்து வைத்தால் அது அப்படியே இருந்துவிடுமா என்ன? அடிக்கும் வெயிலில் ஆவியாகி மீண்டும் மேக கூட்டங்களாக கர்நாடகாவிற்கே சென்றுவிடும்.

ஆக  என்னதான் நாம் எத்தனை அணைக்கட்டுகளை கட்டி வைத்துகொண்டிருந்தாலும் கர்நாடாகவை நம்பி தான் அத்தனை அணைகளும் காத்துகொண்டிருக்கும்.  எனவே என்னதான் தமிழகம் ஆயிரம் அணைகளை கட்டிவைத்திருந்தாலும் அத்தனை அணைகளும் கர்நாடக அணைகளில் கதவுகள் திறப்பதை எதிபார்த்தே காத்திருக்கும் பரிதாபத்திற்குரிய நிலையில் தான் இருக்கும்.

மேலும் ஆரம்ப காலத்தில் ஆரமித்த இடத்திலிருந்து ஓடி அத்தனை நீரும் கடலில் கலந்த காலம் போயி அணைகளாக கட்டி வெறும் சாக்கடையையும் தொழிற்சாலை கழிவுகளையும் மட்டுமே கடலுக்கு அனுப்புவதால் நாம் இயற்கையின் கோபத்திற்கு ஆளாகிவிட மாட்டோமா சிந்தித்து பாருங்கள் மக்களே.

இன்னுமும்  நீர் மேலாண்மை, நதி நீர் இணைப்பு, நீர் பகிர்மானம் மற்றும் நீரை முறைபடுத்தி அத்தனை ஏரி, கண்மாய், குளம் குட்டைகளுக்கு கொண்டு செல்லும் அத்தனையிலும் மேம்பாடு அடையவேண்டும். இலவசங்களுக்காக தமிழக அரசு ஒதுக்கும் பல லட்சம் கோடிகளில் சில லட்சங்கோடிகளை இந்த திட்டங்களுக்கு ஒதுக்கலாம்.  இந்த திட்டங்களை நல்ல வல்லுனர்களை வைத்து இயற்கைக்கும் எந்த பாதிப்பும் வராமல் செய்யலாம். ஆனாலும் நாம் என்ன தான் திட்டங்கள் போட்டாலும் அத்தனையும் கர்நாடக அணை கதவுகளின் இடுக்குகளில் நசுக்க படாமல் காக்க வேண்டுமானால். எந்த அரசும் அமைப்பும் சாராத காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த அமைப்பை மத்திய  அரசு உருவாக்குமா?

எனக்கு தெரிந்து மத்தியில் ஆளும் எந்த கட்சிக்கும் தமிழகத்தில் பெரிய ஆதரவு இல்லாத சூழ்நிலையில் அவர்கள் கர்நாடக ஆதரவு  நிலைப்பாட்டை தான் எடுப்பார்களே தவிர நமக்காக எதவும் செய்ய மாட்டார்கள்.  பாவப்பட்ட தமிழன் நாமுள்ள காலத்திலும் அதற்கு பிந்தைய காலத்திலும் தண்ணீருக்காக அடிபட்டு சாக வேண்டியதே எழுத படாத விதி. :(

தொடரும்.....

தமிழரின் தாகம் - காவிரி 1



சமீபத்தில் திரு விஜயகுமார் சோலைசெல்வன் என்ற பெங்களூரு வாழ் தமிழர் எழுதிய ஒரு கட்டுரையை படித்தேன் மிகவும் அருமையாக காவிரி பிரச்சனையை விளக்கி இருந்தால் அதை தமிழாக்கம் செய்து அதனுள் என்னுடைய கருத்தையும் சேர்த்து எழுத வேண்டும் என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன். ஆங்கிலத்தில் படிக்க விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்க்கில் நேரடியாக திரு விஜயகுமார் எழுதியதை படிக்கலாம்.

https://www.quora.com/Kaveri-issue-How-do-people-in-Karnataka-view-conflict-of-sharing-Kaveri-river-between-Tamil-Nadu-and-Karnataka-Even-though-Supreme-court-had-ordered-to-share-water-to-Tamil-Nadu-Karnataka-politicians-hinder-those-things-only-for-political-reasons-Isnt-unethical

நதி யாருக்கு சொந்தம்? ஒரு நதி என்பது அதன் வடிநிலம் அதாவது அதன் தொடக்கம் முதல் இறுதி வரை உள்ள அத்தனை மக்களுக்கும் சொந்தம். அப்படியில்லாமல் ஒரு நதி எங்கு தொடங்குகிறதோ அவனுக்கு தான் சொந்தம் என்றிருந்தால் 8 கோடி மக்கள்தொகை கொண்ட எகிப்து வாழவே முடியாது ஏனெனில் அதன் முக்கிய நீராதாரமான நைல் பல நாடுகளை தாண்டி தான் அங்கு வந்து சேர்கிறது. அதே போல் துருக்கி எப்புரேட்ஸ் மற்றும் திக்ரிஸ் நதிகளை தடை செய்ய முடியாது ஏனென்றால் சிரியா, ஈராக் மற்றும் ஈரான் மக்கள் இந்த நதிகளையே நம்பி இருக்கிறார்கள். இந்தியர்களாகிய நாம் நம் நாட்டிற்குள் இருந்து பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குள் செல்லும் நதிகளை தடுத்துவிட முடியாது.

இங்கு இந்தியர்களாகிய நமக்கு என்ன பிரச்சனை என்றால் நாம் காவிரி பிரச்சனையை அதன் உண்மை நிலை கொண்டு அணுகுவதில்லை மாறாக நம்முடைய உணர்ச்சிகளையும் சொந்த கருத்துகளையுமே வந்து அணுகுகிறோம். நீர் பகிர்மானம் என்பது ஒரு தொழில்நுட்பம் இதை செய்ய வேண்டிய வலுனர்கள் யார் என்றால் சுற்றுசூழல் ஆய்வாளர்கள், நீர்பாசன நிபுணர்கள், சுகாதார நிபுணர்கள், புவியியல் வல்லுனர்கள், கட்டிடகலை நிபுணர்கள், விவசாய துறை நிபுணர்கள், விவசாயிகள், நீர் பகிர்மான நிபுணர்கள் மற்றும் ஆற்றல் பொறியாளர்கள். ஆனால் இங்கு இதை உண்மையில் இப்போது செய்து கொண்டிருப்பவர்கள் யார்? தமிழ் மற்றும் கன்னட வெறியர்கள், அரசியல்வாதிகள், சாதி சங்கங்கள், நீங்கள் மற்றும் நான்.

இங்கு தொழில்நுட்ப ரீதியாகவும் மக்களின் நீர் தேவையை எந்த பாகுபாடுமின்றி அறிந்துகொள்ள கூடிய சுகந்திரமாக செயல் படக்கூடிய ஒரு வல்லுனர்கள் குழு தேவையிருக்கிறது. அப்படி ஒரு அமைப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமையவேண்டியது மிகவும் அவசியமாகிறது. காவிரிக்கு மட்டுமல்ல மற்ற எல்லா இந்திய நதிகளுக்குமே இது அவசியமாகிறது.

காவிரி படுகையில் உண்மை நிலையை ராஜ்யசபா டிவியில் படம் பிடித்துக்காட்டி இருக்கிறார்கள். நேரம் இருப்பின் இந்த வீடியோவை பார்க்கலாம்.





ஆம் ஆதிகாலம் தொட்டே கிட்ட தட்ட கி.பி. ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து தமிழக மக்கள் காவிரியை நம்பியே இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் திடீரென்று ஒரு அணையை கட்டி வைத்துகொண்டு நாங்கள் மேல் ஆற்றங்கரை வாழ் மாநிலம் எங்களுக்கு தான் ஆறு சொந்தம் என்பதில் என்ன ஞாயம் இருக்கிறது.

கர்நாடகா தமிழகத்தை போல் ஒன்னரை மடங்கு பெரிய மாநிலம் ஆனால் அதன் மக்கள் தொகையோ தமிழக மக்கள் தொகையில் 80% தான். ஆனால் அங்கு தமிழகத்தை விட மிக அதிக நீர் ஆதாரங்கள் மற்றும் மழை பொலிவு இருக்கிறது.

காவிரி தான் கர்நாடகத்தின் நீர் ஆதாரமா?

கர்நாடகத்தின் மொத்த வடிகால்களில் 17% மட்டுமே காவிரியில் இருந்து பெற படுகிறது. இது போக 59% வடிகால்கள் கிருஷ்ணா என அழைக்கப்படும் கிரிஷ்ணவேணி நதியில் இருந்தும், மீதம் பெண்ணாறு, பாலாறு மற்றும் மேற்கே பாயும் நதிகளின் மூலமும் பெற படுகின்றன. இவற்றின் மூலம் பெறப்படும் நீரில் பெரும் பகுதி பயனற்று அரபிக்கடலில் கலந்து வீணாகிறது. ஆனால் இப்படி வீனாகும் இந்த தீபகற்ப நதிகளை இணைக்க இந்திய அரசிடமோ கர்நாடக அரசிடமோ எந்த திட்டமும் இல்லை.

குறிப்புகள்:

http://waterresources.kar.nic.in/river_systems.htm

http://dmc.kar.nic.in/RL.pdf


கர்நாடக அரசு மைசூர், பெங்களூர், ஹாசன், டும்கூர், சிக்க்மங்கலூர் ஷிமோ போன்ற தெற்கு கர்நாடக பகுதிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துகொண்டுள்ளனர். அதே நேரம் சற்று வடக்கே சென்று பார்த்தால் துங்கபத்ராவின் ஹோஸ்பதி அணை (132 டிஎம்சி) மற்றும் கிருஷ்ணா நதியின் அல்மாட்டி அணை (120 டிஎம்சி) இரண்டுமே தமிழகத்தின் காவேரியில் உள்ள மொத்த அணைகளின் கொள்ளளவை விட அதிகம். தமிழகத்தில் காவிரியில் இருக்கும் மேட்டூர் அணை தான் மிக பெரியது (93 டிஎம்சி).

ஆரம்ப காலம் முதலே காவிரி நீர் பகிர்மானத்தில் பிரச்சனை இருந்த போதிலும் சமீபத்தில் ஒரு சொட்டு நீர் கூட கொடுக்க மாட்டோம் எனும் அளவு விஷயம் விஸ்வரூபம் எடுக்க என்ன காரணம் என்றால். முதலாவதாக பெங்களூரு நகரம் தன் குடிநீர் தேவைக்காக முழுவதுமாக 100% காவிரியை நம்பியே உள்ளது. மேலும் கர்நாடகாவின் வளர்ச்சி ஆனது காவிரி படுகையில் உள்ள பெங்களூரு, மைசூரு, டும்கூர் போன்ற நகரங்களில் அதிகம் ஏற்பட்டது. ஆதலால் அவர்களின் நீர் தேவையும் பல மடங்கு அதிகமானது.

இப்படி தெற்கில் வளர்ச்சி அதிகமாக காணப்பட்டதால் கர்நாடக மக்களில் பெரும்பான்மையோர் தெற்கு நோக்கி நகர்ந்தனர். இப்படி பட்ட நகர்வால் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் கிட்ட தட்ட 60% மக்கள் தொகை தெற்கில் அதிகரித்துள்ளது. இப்படி அதிகரித்து விட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கர்நாடக அரசு எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவெடிக்கயையும் எடுக்கவில்லை. வடக்கு மேற்கில் உள்ள எந்த ஒரு நதியையும் இணைக்கவும் முயற்சி செய்யவில்லை. அவர்களின் ஒட்டு மொத்த தேவை அதிகரித்தவுடன் அந்த பற்றாக்குறையை பகிர்ந்துகொள்ளாமல் ஒட்டு மொத்தமாக தமிழர்களின் மீது தினிக்கிறார்கள். அதாவது நான் மேட்டு நிலத்தில் இருப்பவன் என் வயிறு நிறையும் வரை நன்றாக உண்டுவிட்டு மிச்சம் மீதம் இருந்தால் தான் உனக்கு தருவேன் என்பது போல் சொல்கிறார்கள்.

காவிரி தான் தமிழகத்தின் நீர் ஆதாரமா?

தமிழகத்தின் நீர் ஆதாரங்களை பொறுத்தவரையில் தமிழகத்தில் காவிரியில் இருக்கும் மிக பெரிய அணைகள் பவானி சாகர் (33TMC) மேட்டூர் அணை (93TMC) அமராவதி அணை (4-5TMC). இதில் மேட்டூர்அணை அணை தான் மிக பெரியது ஆனால் ஒப்பீட்டு அளவில் கர்நாடகத்தின் மிக சிறிய அணைகளான லிங்கமனாக்கி, சுப, ஹோஸ்பதி மற்றும் அல்மாட்டியை விட சிறியது தான் மேட்டூர்அணை. தமிழகத்தில் உள்ள அத்தனை அணைகளின் கொள்ளளவின் கூட்டு தொகையை விட மேட்டூர்அணையின் கொள்ளளவு அதிகம். ஆக தமிழகத்தின் 50% மக்கள் நீர் தேவைக்காக காவிரியை தான் நம்பி இருக்கிறார்கள். இது போக இன்னும் 20% சென்னை மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் காவிரியை நம்பி தான் இருக்கிறார்கள். காவிரி மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்த மிக பெரிய நதி.

குறிப்பு:

http://164.100.167.12/pwd/report.php

நீர் ஆதாரங்களை முறையாக பராமரித்து அதை மக்களுக்கு சிறந்த முறையில் பகிர்ந்து கொடுக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இருந்தும் இன்னுமும் சிறப்பாக செயல்பட்டலாம்.

தமிழ்நாட்டில் நீர் பகிர்மானம் முறைபடுத்தும் சில திட்டங்களை பார்ப்போம்.

PAP - பரம்பிக்குளம் ஆழியார் திட்டம். இது மேற்கே பாயும் நதியான சாலக்குடி நதி நீரை தமிழகத்திற்கு திருப்பும் திட்டம். பெரியார் - இதுவும் மேற்கே பாயும் பெரியார் நதியை தமிழகத்திற்குள் திருப்பும் திட்டமே. இது போக இன்னும் பல நதிகள் இணைக்கப்பட்டு கொண்டே தான் இருக்கின்றன. காவிரி மற்றும் வைகை இணைப்பு, பெண்ணாறு மற்றும் பாலாறு இணைப்பு திட்டங்களும் மாநில அரசிடம் உள்ளன. இருந்த போதிலும் இந்த திட்டங்களுக்காக எந்த நிதியையும் ஒதுக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் நாம் அனைவரும் அறிந்ததே. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இலவசங்கள் கொடுப்பதற்காக மூனரை லட்சம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டங்களுக்கு எப்படி நிதி ஒதுக்க முடியும்? மேலும் பம்பா அச்சன்கோவில் நீர் ஆதாரங்களை வைப்பாற்றுடன் இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசின் உதவியையும் நாடியுள்ளது தமிழக அரசு. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிக பெரிய முட்டுகட்டையாக இருக்கிறது கேரள அரசு.



மேலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக மூன்று கடல் நீர் சுத்தீகரிப்பு ஆலைகள் சென்னையில் இயங்கிகொண்டிருக்கின்றன. இது போக மேலும் சென்னை மற்றும் தூத்துக்குடியில் இன்னொரு ஆலை தொடங்கும் பணியும் நடந்துகொண்டுள்ளன. ஆக சில குறைபாடுகள் இருந்த போதிலும் தமிழக அரசு கூடுமான அளவு இருக்கும் தண்ணீரை மக்களுக்கு வழங்குவதில் நன்றாக செயல்படுகிறது என்றே கூறலாம்.




கர்நாடகா நதி நீர் இணைப்பு மற்றும் நீர் நிர்வகிக்கும் முறையில் மிகவும் பின்தங்கியே உள்ளது. (தவறாக சொல்லி இருந்தால் திருத்தவும்)

நாம் முன்பு சொன்னது போல் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ள மிக சிறிய அணைகளை விட சிறிய அணை தான் மேட்டூர்அணை. இந்த அணையும் நீருக்காக கர்நாடகத்தையே நம்பி இருக்க வேண்டியுள்ளது.

கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள அணைகளை ஒரு ஒப்பீடு செய்வோம்.

கர்நாடகா:



தமிழ்நாடு:


காவிரி வடிநிலம் என்பது காவிரி ஆரமித்த இடத்தில் இருந்து 4-6 கர்நாடக மாவட்டங்களையும் அதனை தொடர்ந்து 14 தமிழக மாவட்டங்களையும் உள்ளடக்கியதே.





தமிழகம் கேரளத்தை போல செல்வசெழிப்பாக 44 நதிகளை கொண்டிருக்கவில்லை. ஆந்திராவை போல ஸ்ரீசைலம் அல்லது நாகர்ஜுனா சாகர் போன்ற மிக பெரிய அணைகளை கொண்டிருக்கவில்லை.

ஆனால் கர்நாடகம் ஹேமாவதி (35TMC), கபினி (17TMC), கிருஷ்ணா சாகர் (55TMC),

அரக்காவதி, லக்ஷ்மண திர்தா, ஹீரகேங்கி போன்ற பல நீராதாரங்களை கொண்டுள்ளது. கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதியின் அதிகபடியான நீர்பிடிப்பு பகுதிகள் மகாராஷ்டிர, கர்நாடகா மற்றும் சட்டீஸ்கரில் இருந்த போதிலும் இவற்றில் இருந்து அதிக படியான நீரை ஆந்திரா எந்த பிரச்சனையும் இல்லாமல் பெறுகிறது. கர்நாடகா கிட்டத்தட்ட 700 TMC தண்ணீரை கிருஷ்ணாவின் மூலம் ஆந்திராவிற்கு வழங்குகிறது. அதே நேரம் தமிழ்நாட்டிற்கு உயர்நீதிமன்ற உத்திரவு படி தர வேண்டிய 190 TMC தண்ணீரை கூட தர மறுக்கிறது.

கிருஷ்ணா நதியின் நீர்பிடிப்பு பகுதிகளில் 44% கர்நாடகத்திடம் இருந்த போதிலும் அதில் 34% மட்டுமே அவர்கள் பயன்படுத்த அனுமதிக்க பட்டிருக்கிறார்கள். அதே காவிரியில் 42% மட்டுமே வடிநிலம் கொண்ட கர்நாடகா காவிரியின் 38% நீரை பயன்படுத்திகொள்ளலாம். 54% வடிநிலத்தை கொண்ட தமிழகம் 57% நீரை பயன்படுத்தி கொள்ளலாம்.

கிருஷ்ணா வடிநிலத்தில் கர்நாடகாவிற்கு அனுமதிக்கப்பட்ட நீரின் அளவு மட்டும் 700 TMC இது தமிழகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் காவிரி வடிநிலத்தில் அனுமதிக்கப்பட்ட நீருக்கு சமமானது.

கர்நாகத்திடம் நேத்ரவதி நதியை திருப்பும் திட்டம், அவர்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய எத்தினஹோல் திட்டம், லிங்கானமக்கி அணையில் இருந்து தண்ணீரை பெங்களூருக்கு திருப்பும் திட்டம் போன்ற நல்ல திட்டங்கள் இருந்தும் அதை அப்படியே கிடப்பில் போட்டுள்ளார்கள். இந்த திட்டங்களை பற்றி அவர்கள் எந்த அக்கறையும் காட்டவில்லை.

ஆக கர்நாடகா காவிரியின் குறுக்கே எந்த அணையும் கட்டாமலே அவர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியும். அவர்கள் செய்ய வேண்டியது ஒன்று தான் இந்த திட்டங்களை நிறைவேற்றும் போது போராடி தடுக்கும் கன்னட மக்களுக்கு திட்டத்தின் அவசியத்தை விளக்கி புரியவைப்பது மட்டுமே.

பாகிஸ்தானும் இந்தியாவும் ரவி, பீஸ், சட்லஜ், ஜீலம் மற்றும் சினாப் போன்ற நதிகளை எந்த பிரச்சனையும் இல்லாமல் பகிர்ந்து கொள்ளும் போது ஒரே நாட்டிற்குள் தமிழகம் தன் உரிமையை பெற ஏன் இவ்வளவு போராட வேண்டியுள்ளது?

ஏனென்றால் தமிழகத்தை பொறுத்த வரை எந்த ஒரு தேசிய கட்சிக்கும் எந்த ஒரு லாபமும் இல்லை. இதே கர்நாடகத்தில் இரண்டு பெரிய தேசிய கட்சிகளும் நல்ல நிலையில் உள்ளன. இந்த காரணத்தினாலேயே கர்நாடகா எப்போதும் காவிரியை தனக்கு சொந்தம் கொண்டாடி கொண்டு அதிக படியாக அனுபவித்துக்கொண்டும். தமிழகம் வஞ்சிக்கபட்டுகொண்டும் இருக்கிறது. காங்கிரசின் UPA அரசு தமிழ்நாடு அரசு போராடி பெற்ற தீர்ப்பை கூட கெசட்டில் வெளியிடவில்லை. அதற்கு பிறகும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடி தான் அந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. ஆக தமிழக அரசை பொறுத்தவரை மத்திய அரசு என்பது பயனற்ற ஒன்று அனைத்திற்கும் உச்ச நீதிமன்றத்தை தான் நாட வேண்டும்.

பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் அந்த கஷ்ட்டத்தை இரண்டு மாநிலங்களும் பகிர்ந்துகொண்டு தான் ஆக வேண்டும் ஆனால் இங்கேயோ அப்படி பட்ட சூழ்நிலையில் கன்னடர்களுக்கு எந்த வித நஸ்ட்டமும் இல்லை

ஒட்டு மொத்த கஷ்ட்டத்தயும் தமிழக வியசாயிகள் தான் தாங்கனும் என்று தமிழர்கள் தலையில் சுமத்துவது எந்த வகையில் ஞாயம்?

எங்க வயிறு முட்ட நாங்கள் நன்கு உண்டு விட்டு தான் உங்களுக்கு தருவோம் இடையில் நீங்கள் பட்டினியால் செத்தாலும் எங்களுக்கு கவலையில்லை என்பது எப்படி பட்ட அரக்கத்தனம்?

பெங்களூரு தனக்கு தேவையான மொத்த குடிநீர் தேவைக்கு காவிரியை பயன்படுத்தி கொண்டுள்ளதால் தான் இவ்வளவு பிரச்சனையும் அப்படி அவர்கள் குடிநீருக்கு பயன்படுத்துவதால் தான் விவசாயத்திற்கு திறக்க மறுக்கிறார்கள். இதில் பாதிக்க பட்டு கொண்டிருப்பது தமிழக மக்கள் மட்டுமில்லை கர்நாடக தமிழ்நாட்டு எல்லையில் உள்ள மாண்டியாவும் தான். இங்கும் கிட்ட தட்ட விவசாயம் அழியும் தருவாயை நோக்கி தான் சென்றுகொண்டிருக்கிறது. தமிழர்களை போல அதிகம் போராட வேண்டியவர்கள் இவர்களும் தான்.

தமிழகம் கர்நாடகத்தின் பங்காளி. தமிழத்திற்கு தரவேண்டிய பங்கை தராமல் ஏமாற்றுவது எப்படி ஞாயம் ஆகும்? காவிரி தமிழர்களின் வாழ்வாதாரம் அதை வெறும் வெள்ளநீர் வடிகாலாக பயன்படுத்தி உங்களுக்கு வெள்ளம் வரும் போது மட்டும் தண்ணீர் திறந்து விடுவது அநியாயம் இல்லையா?


- தொடரும்...