லிங்கேஸ்வரன் என்ற லிங்கா - பழைய ஸ்டைலில் ரஜினியை பார்த்திருக்கிறோம் புதுசா சிவாஜி எந்திரன் போன்ற படங்கள்ல பார்த்தோம். இப்போ இந்த படத்துல கே.எஸ். ரவிக்குமார் பழைய ரஜினியை மனதில் வைத்து புதுசாக எடுக்க முயற்ச்சித்திருக்கிறார். இதில் வெற்றி பெற்று இருக்கிறாரா என்றால் ஓரளவு வெற்றி என்றே சொல்லலாம். சரி இப்போ படத்துக்கு வருவோம்.
முல்லை பெரியார் அணையை பென்னி குயிக் என்ற ஒரு ஆங்கிலேயர் அவர் சொத்துகளை எல்லாம் விற்று மக்களின் பஞ்சம் தீர்க்க கட்டி கொடுத்தார் என்பது வரலாறு. அப்படி ஒருவர் இந்தியாராக இந்தியாவின் ஒரு ராஜாவாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கற்பனையே இந்த கதை. அந்த கதையை நேரடியாக சொல்லாமல் இப்போது இருக்கும் கால சூழலில் ஆரமித்து ப்ளாஸ் பேக்கில் சொல்லி இருக்கிறார்கள்.
ரஜினிக்கு வயசாகி விட்டது என்பது தெளிவாக தெரியும் அளவுக்கு மேக்அப் மிகவும் பொருந்தாமல் இருந்தது. மற்ற படி அவரின் நடிப்பில் எந்த குறையும் சொல்ல முடியாது. முதலில் பேரன் லிங்காவாக அறிமுகமாகிறார் அதிரடியான ஆரம்ப பாடலுக்கு பிறகு திருடன் என்று தெரியவருகிறது. திருடுவதில் ஜகஜால கில்லாடியாக இருக்கிறார். இவருடன் சேர்ந்து சந்தானம் பாலாஜி காருணாகரன் போன்ற நண்பர்கள் சுவாரசியமான திருட்டுக்கு நடுவே காமெடிகள் செய்கிறார்கள். சந்தானம் அவரின் இயல்பான அடுத்தவர்களை நக்கல் அடித்து செய்யும் காமெடியை தான் செய்திருக்கிறார் என்றாலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இயன்ற அளவு நன்றாகவே செய்திருக்கிறார். இந்த திருடர்கள் ஒரு பெரிய திருட்டாக செய்தால் நல்ல வருமானம் வரும் என்று சேட்டு மதன் பாபு சொன்னவுடன் அப்படி ஒரு பெரிய திருட்டை செய்து எக்குத்தப்பாக மாட்டிகொள்கிறார்கள். இந்த சூழ்நிலையில் போலிஸ் கையில் மாட்டாமல் இருக்க கதாநாயகி அனுஷ்காவின் உதவியுடன் சோலையூர் என்ற கிராமத்துக்கு ஓடுகிறார்கள்.
இவர்களை அந்த ஊருக்கு அழைத்து போக வேண்டும் என்பதற்காக போலீசிடம் இவர்களை மாட்டி விட்டதே அனுஷ்கா தான். அனுஷ்காவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் வர வர யோகா டீச்சர் சரியாக பயிற்சி செய்வது இல்லை போல. கொஞ்சம் எடை கூடிட்டார். சில பாடல் காட்சிகளில் ரஜினியின் அருகே சில மார்டன் உடைகளை அணிந்து ஆடும் போது ஒரு மல்யுத்த வீராங்கனை போலவே காட்சியளித்தார். இவருக்கும் மேக்கப் சொதப்பலாகவே இருந்தது. இவர் ரஜினியை அழைத்துக்கொண்டு சோலையூர் வருகிறார். அங்கே ரஜினி வந்து தான் அதாவது ராஜா லிங்கேஸ்வரன் வாரிசு வந்து தான் கோவிலை திறக்க வேண்டும் ஒரு பெரியவருடன் ஒரு ஊரே எழுபது வருடங்களாக காத்துகொண்டு இருக்கிறது. இப்போது அந்த கோவிலை திறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதற்கான காரணம், அந்த ஊரில் ராஜா லிங்கேஸ்வரன் கட்டிய அணை ஒன்று இருந்தது அதை பரிசோதனை செய்ய வந்த அதிகாரி மர்மமான முறையில் கொல்லபடுகிறார் இறப்பதற்கு முன் கோவிலை திறந்தால் தான் உங்களால் ஊரை காப்பாற்ற முடியும் என்று பெரியவரிடம் சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார்.
தன்னுடைய தாத்தா ராஜா லிங்கேஸ்வரனின் பெருமை அறியாத பேரன் லிங்கா அவர் திறக்க வந்திருக்கும் கோவிலில் இருக்கும் லிங்கம் விலையுயர்ந்த மரகத லிங்கம் என்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார். அப்போது எக்குதப்பாக மாட்டிகொள்ள அப்போது கோவிலில் பூஜை செய்வது போல் பாவுல செய்து தப்பிக்க முயல்கிறார் ஆனால் ஊரில் சிலருக்கு இவர் மீது சந்தேகம் எழ அதை தீர்க்க இவர் எப்பேர்ப்பட்ட பரம்பரையை சேர்ந்தவர் என்று சொல்ல தொடங்கி ராஜா லிங்கேஸ்வரரின் கதை சொல்கிறார் அந்த ஊர் பெரியவர்.
அதில் ராஜா லிங்கேஸ்வரர் எவ்வளவு பெரிய கொடை வள்ளல் என்றும் அவர் மக்களுக்காக இந்த அணையை எவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் வெள்ளைகாரர்களின் அடக்குமுறைகளுக்கு மத்தியில் கட்டி முடித்தார் என்பதே அந்த கதை. ராஜாவாக வரும் ரஜினி தன்னுடைய அட்டகாசமான ஸ்டைல் மூலம் ஒரு ராஜாவாகவே நம் மனதில் பதிந்துவிடுகிறார். நடிப்பும் அட்டகாசம். ராஜா ஏழ்மையாக மாறும் போது தனக்கு இந்த வாழ்க்கை தான் ஆனந்தம் தருகிறது பணம் புகழ் அதிகம் தரும் வேலையை விட எனக்கு மன நிம்மதி தரும் வேலையை செய்வதே ஆனந்தம் எனும் பொது மெய் சிலிர்க்கிறது அருமை. ஆனால் ஏனோ பெரியவர் இந்த ராஜாவின் கதையை சொல்லி முடித்த போது தியட்டரில் நமக்கு நான்கு இரவு மூன்று பகல் முடிந்தது போல் இருந்தது. சொல்ல வேண்டியதை இன்னுமும் நறுகென்று சொல்லி இருக்கலாம். ராஜாவுக்கு ஜோடியாக வரும் சொனாக்க்ஷி ஒரு கிராமத்து பெண்ணாக மனதில் நிற்கவில்லை மேலே அனுஷ்காவை சொன்னது போல் அவருக்கு நிகறான ஒரு மல்யுத்த வீராங்கனை போலவே இருந்தார். அநேக படங்களிலும் இடையில் சில சீரியலிலும் கூட நாட்டமையாக வந்த விஜயக்குமார் இந்த படத்திலும் அதே வேடத்தை செய்திருக்கிறார். ராதாரவி பட்டையடித்து கொண்டு பாரதியாரின் பக்கத்தானாக புதுமை பேசியது நன்றாக இருந்தது. சுந்தர்ராஜன் அவருக்கு கொடுத்த குள்ள நரி வேலையை சிறப்பாகவே செய்திருந்தார். அனைவரும் தேர்ந்த நடிகர்கள் அவர் அவர் பங்குக்கு பின்னி எடுக்கும் போது இடை இடையில் பல ஓட்டைகள் இருந்தற்கு இயக்குனரின் ஓட்டையே காரணம் என்று தான் சொல்ல வேண்டும்.
பெரியவர் ப்ளாஸ் சொல்லி முடிக்கும் போது படம் பார்த்துகொண்டிருக்கும் நாம் அனைவரும் ஒரு இரண்டு படம் பார்த்து முடித்த களைப்போடு அமர்ந்திருப்போம். அப்போது மூன்றாவது படம் ஆரமிக்கும். அதாவது கோவிலை திறக்க சொல்லிவிட்டு ஒரு அதிகாரி இறந்தாரே அவர் இறந்ததற்கு காரணம் அந்த ஊர் எம்.பி வில்லன் அந்த ஊரில் ராஜா லிங்கேஸ்வரன் கட்டிய அணையை வலுவாக இல்லை என்று கூறி வேறு ஆணை கட்டுவதன் மூலம் மிக பெரிய பணம் பார்க்க திட்டம் தீட்டுகிறான். மேலும் அணை வலுவாக இருப்பதை அறிந்து அதை வெடிகுண்டு வைத்து சேத படுத்தவும் துணிகிறான். இந்த வில்லனிடம் இருந்து எப்படி அணையையும் ஊரையும் காப்பாற்றுகிறார் என்பது படத்தின் முடிவு.
இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஒரு மிக பெரிய விசயத்தை சொல்ல முற்பட்டு அதை சரியாக சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். இப்போது தமிழர்களுக்கு இருக்கும் தண்ணீர் பிரச்சனைகளுக்கு நம்மூரில் தண்ணீரை சேமித்து வைக்க போதிய அணைகள் இல்லை என்பதும் ஒரு காரணம். காவிரியில் வெள்ளம் வரும் போதெல்லாம் எவ்வளவோ நீர் விரயமாக போகிறது. அதை சேமிக்க நம்மிடம் ஒரு பெரிய அணை இருந்தால் விரையமாகும் நீரை நாமும் சேமித்து வைத்திருக்கலாம். கர்நாடககாரன் திறந்துவிடாத போது அந்த அணையின் மூலம் நம் தேவைகளை நிறைவு செய்திருக்கலாம். ஒருவேளை அப்படி ஒரு அணை கட்டப்படுமானால் அந்த அணை கட்டப்படும் இடத்தை சுற்றியுள்ள பல கிராமங்கள் பாதிக்கப்படும் அப்படி பாதிக்க படும் போது அரசு அவர்களுக்கு வேறு இடங்களில் நிலங்கள் கொடுத்தால் மக்கள் ஒத்துகொள்வார்களா? சரி அரசு செய்யும் போது அவர்கள் ஒத்துகொண்டு தான் ஆக வேண்டும் அப்படி இருக்க சுகந்திரம் வாங்கி இத்தனை ஆண்டு காலங்களில் இப்படி ஏதாவது அணை கட்ட எந்த ஒரு அரசாங்கமாவது முயற்சி எடுத்திருக்கிறதா? இல்லை என்பது தான் உண்மை. வெள்ளைகாரனை குறை கூறிக்கொண்டே இன்னுமும் அவன் கட்டி கொடுத்த அணைகளை வைத்து தான் ஓட்டிகொண்டிருக்கிறோம் என்பது இன்னும் கேவளமான உண்மை.
இது மட்டுமல்ல நம் அண்டை மாநிலங்கள் அணை பழுதாகிவிட்டது என்று அவ்வப்போது கூப்பாடு போட்டு கொண்டு இருக்கிறார்களே ஏன்? ஒரு அணை கட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விசயமா! எவ்வளவு பொருள் செலவு ஏற்படும். ஒரு தெருவிற்கு சிமென்ட் ரோடு போடும் காண்ட்ரேக்ட் எடுப்பவனே அந்த தெருவிற்கு வேலை முடிக்கும் முன் அதே தெருவில் இரண்டு வீடு கட்டி முடித்து விடுகிறான். என்றால் ஒரு அணை கட்டுவதன் மூலம் எவ்வளவு பணம் அடிக்கலாம் என்று அவர்கள் திட்டம் தீட்டி கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்கள் கணக்கிற்கே விட்டுவிடுகிறேன். லிங்கா படத்தை நான் இந்த கோணத்தில் தான் பார்த்தேன் ஆனாலும் இதில் பல சுவாரஸ்யங்கள் சுவையில்லாமல் இருந்ததால் சொல்ல வந்த கருத்துகள் முழுமையாக சென்றடையவில்லை என்றே நினைக்கிறேன்.
போதும் இப்போ மறுபடி படத்துக்கு வருவோம். இசை ரகுமான் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை அருமை. ரஜினியின் ஆரம்ப பாடல் மட்டும் எப்போதும் இருப்பதை விட கம்மி தான் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். நடனம் ரஜினி கையை இடுப்புக்கு நேரே வைத்து இடுப்பையும் கையையும் ஆட்டுகிறார் பின்னாடி இருப்பவர்களும் அதை பின் தொடர்கிறார்கள். சண்டை காட்சிகள் முன்னெல்லாம் ரஜினி என்ன செய்தாலும் கை தட்டுவோம் இப்போ அவர் லாஜிக் மீறி ஏதாவது செய்தாலும் அது குறையாக தெரிகிறது. ரயில் மீது ஓடி கொண்டே அவர் போடும் சண்டை காட்சி அருமை. பாரசெட் மீது தொங்கிகொண்டு வெடிகுண்டை கால் பந்தாடுவது சிரிக்க வைத்துவிட்டது.
ஒவ்வொருவர் மீதும் ஆங்காங்கே பழி போடாமல் ஒட்டுமொத்தமாக இயக்குனர் மீதே பழி போட்டுவிடுவோம். ஏன்னா அவர் தான் பல இடங்களில் ஓட்டை ஓட்டையாக விட்டு கோட்டையையே விட்டுவிட்டார். மிகவும் பெரிய கதை மிகவும் பெரிய படம் சுவாரஸ்யத்திற்கு பல இடங்களில் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. இன்னுமும் சுருக்கி சொல்ல வேண்டியதை தெளிவாக சொல்லி இருக்கலாம்.
மொத்தத்தில் லிங்கா ஜவ்வாக இழுக்கபட்டு லிங்காகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகாகா....... ஆனது