முதல் பாகத்தை படிக்காதவர்கள் கீழே உள்ள லிங்கில் படித்துவிட்டு இந்த பாகத்தை தொடரலாம்...
ஜெஸிக்கா பாகம் 1
பாகம் 2
தன் மகளை காப்பாற்ற தானும் ஏதாவது வேலை செய்யவேண்டும் என்பது போல் அங்கு கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட கற்களுடன் நின்றுகொண்டிருந்த ஒரு மூன்று சக்கர வாகனத்தை தள்ளி கொண்டு தூரத்தில் கொட்டிவிட்டு திரும்பி வந்தான் முரளி.
ஜெஸிக்கா பாகம் 1
பாகம் 2
காற்று
வேகமாக வீசியதால் மழை எல்லா பக்கங்களிலும் இருந்து சுழன்று சுழன்று அடிக்க
ஆரமித்தது கட்டிடம் முடியாமல் இருந்ததால் நாலா பக்கமும் இருந்து சாரல் உள்ளே
புகுந்தது. வாரச்சம்பளத்திர்காக காத்திருந்த அனைவரும் மழையிடம் இருந்து தப்பித்து
கட்டிடத்தின் மையப்பகுதிக்கு சென்றார்கள். அங்கும் விடாமல் சாரல் துரத்தியது
குளிர் அடிக்க தொடங்கியது. சிலர் அப்படியே கட்டிடத்திற்குள் நுழைந்து ஆங்காங்கே
அமர தொடங்கினார்கள். சிலர் மாடிப்படிகளில் அமர்ந்தார்கள். சிலர் மழையை
ரசிப்பதர்க்காக மேலே சில மாடிகள் ஏறிச்சென்றார்கள்.
அடித்த காற்றில்
அகிலன் பைக்கின் முன் வைக்கபட்டிருந்த கரடி பொம்பை பறந்து கட்டிடத்திற்குள்
சென்றது. அதனை அங்கு வேலை செய்யும் சித்தாளின் மகள் எடுத்து கொண்டு அவள்
அன்னையிடம் ஓடினாள்.
“இது அந்த
பாப்பாவோடது அவகிட்ட குடுத்துரனும் சரியா” என்றாள் அன்னை.
“சரிம்மா
எனக்கும் இதுமாதிரி ஒன்னு வாங்கித்தரியா.” அம்மா சரி என்பது போல் தலையசைத்தாள்.
மேலே
ஏறிக்கொண்டிருந்த அகிலனும் முருகனும் ஐந்தாவது மாடியை அடைந்திருந்தார்கள்.
அவர்கள்
பின்னாடியே மணியும் அங்கே வந்திருந்தது.
அங்கே அடுக்கி
வைக்க பட்டிருந்த செங்கர்களின் மீது ராம் அமர்ந்திருந்தான்.
ராமை
பார்த்த ஜெஸிக்கா,''ஐ ராம் அங்கிள்'' என்று
கத்தினாள்.
'பொளபொள'வென வெளிய பெய்து கொண்டிருந்த மழையை பார்த்துகொண்டு அமர்ந்திருந்த ராம்
ஜெஸிக்காவை பார்த்தவுடன் முகம் முழுவதும் புன்னகையோடு 'வாடா
வாடா' என்று கையை நீட்டினான்.
அகிலனிடம்
இருந்து இறங்கிய ஜெஸிக்கா குடு குடு வென ராமிடம் ஓடினாள்.
நீட்டிய
கைகளில் அப்படியே அவளை தூக்கி முத்தம் கொடுத்தான் ராம்.
ஜெஸிக்காவும்
பதிலுக்கு முத்தம் கொடுத்துவிட்டு 'க்கி க்கி'என ஒரு மழலை சிரிப்பு சிரித்தாள்.
அகிலன் ராம்
அருகில் வந்து என்ன டா..., என்ன பிரச்சனை என்று அலுப்புடன் கேட்டான்.
''இல்லை மச்சி
நாலு இத்து போன கம்பிய வாங்கி வச்சுகிட்டு மேல டாப் ரூப முடிச்சிருங்கறாரு இதுல
சிமென்ட் வேற பத்தாது மண்ணை கலந்து முடிச்சு விடுங்கன்றாரு. எப்படி மச்சி நாளைக்கு
மேல இருந்து தண்ணி லீக் ஆனா நம்மள தான் குறை சொல்லுவாங்க. இந்த இத்து போன கம்பிய
வச்சு கட்டினா இடிந்து விழ கூட சான்ஸ் இருக்கு மச்சி.''
ராமிடம்
இருந்து ஜெஸிக்கா மெதுவாக கீழே இறங்கி மணியுடன் விளையாட ஆரம்பித்தாள்.
முருகன்
அங்கே அமர்ந்து கொண்டு ஜெஸிக்காவிடம் ஏதோ சொல்லிகொண்டிருந்தான்.
அகிலன் ராமை
பார்த்து ''முடிச்சு விட சொன்னா முடிச்சு விட வேண்டியதானே மச்சி
எதுக்கு நீ டென்சன் ஆகுற அவன் ஏற்கனவே ஏதோ பட்ஜெட் ப்ராப்லம்ன்னு சொல்லறான்.
இன்னும் மேல உள்ள வீடெல்லாம் விக்கவே இல்லையாம். அப்படியே ஏதாவது பிரச்னைனாலும்
இன்னும் ஒரு ரெண்டு வருசமாவது ஆகும் அப்பறம் இவன் தான் செலவு பண்ணி வேலை பாக்க
போறான் நமக்கு என்ன? சொல்றத சொல்லிட்டோம் கேக்காட்டி அது
அவன் பிரச்னை ப்ரியா விடு மச்சி.''
ராம் சற்று
கோபத்துடன், ''இல்லை மச்சி ஸ்டோர் ரூம்ல
பாத்தையா அங்க இருக்க சாமான்கள வச்சு கட்டி முடிக்கனும்ன்னா ரொம்ப கஷ்ட்டம்.
ரெண்டு வருஷம் இல்லை ரெண்டே மாசத்தில் கிராக் விழ ஆரமித்துவிடும்''என்றான்.
பொறுமையுடன்
கேட்டுகொண்டிருந்த அகிலன் ‘இத்தனை நாளும் இப்படி தானே மச்சி இருக்கத வச்சு
ஓட்டிக்கிட்டு இருக்கோம். சரி மச்சி நீ ஒன்னும் கவலைபடாதே நான் போய் பேசிட்டு
வரேன். பாப்பாவ பார்த்துக்கோ” என்று சொல்லிட்டு நடக்க ஆரம்பித்தான்.
மாடிப்படி
அருகே சென்று ஒரு நாலு படி ஏறியவன் சட்டென திரும்பி ஜெஸிக்காவுடன் விளையாடி
கொண்டிருந்த முருகனை பார்த்து ''பாப்பாவ பாத்துகோடா''என்றான்.
முருகன் 'சரி' என்று தலையாட்டினான்.
அகிலன் மேலே
ஏற தொடங்கினான் மேலும் மூன்று மாடி ஏறி எட்டாவது மாடியை அடைந்தான். கீழே முருகன்
கட்டிடத்தில் அங்குமிங்கும் ஓட அவனை துரத்திக்கொண்டிருந்தார்கள் ஜெஸிக்காவும்
மணியும்.
ராம் ஒரு
ஓரத்தில் மீண்டும் மழையை வெறித்தபடி அமர்ந்தான்.
எட்டாவது மாடியை அடைந்த அகிலன் அங்கே
நடுநாயகமாக அமர்ந்திருந்த
அந்த கட்டடத்திற்கான மேனேஜெர்
ராகுலை பார்த்து,''ஹாய் சார்''என்றான்.
அவனும்
பதிலுக்கு,''வாங்க மிஸ்டர் அகிலன்''என்றான்.
அங்கு அவரை தவிர கணக்கபுள்ளை ரத்தினமும்
மேஸ்திரி மற்றும் மேலும் இருவர் அமர்ந்து ஏதோ கணக்கு
வழக்குகளை பற்றி பேசிகொண்டிருந்தார்கள்.
தான் நின்ற
இடத்தில் இருந்து அவர்கள் இருந்த இடத்தை நோக்கி அடுத்த அடியை எடுத்துவைத்தான் அகிலன்.
இன்னமும்
ஜன்னல் கதவுகள் அமைக்கபடாத அந்த கட்டிடம் முழுவதும் ஒரு மிகப்ரகாசமான வெளிச்சம்
ஆக்கிரமித்தது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வெளிச்சம் முடிவதற்குள் பலத்த
சத்தத்துடன் இடி ஒன்று விழுந்தது.
'அது அணுகுண்டா' அல்லது 'மின்னலை தொடர்ந்து வந்த இடியா' என அனுமானிப்பதற்குள் அடுத்த மின்னலும் அதை தொடர்ந்து இடியும் அந்த
கட்டிடத்தை இன்னுமும் பலத்த சத்தத்துடன் தாக்கியது.
பதினோரு
மாடிகளை கொண்ட அந்த உயர்ந்த கட்டிடம் 'சரசர'வென பூமிக்குள் புதைய தொடங்கியது புதைந்த
வேகத்தில் கட்டிடம் இடிந்து நொறுங்கியது.
அந்த
பகுதியில் மொத்தமாக மின் தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது.
இடியின்
சத்தம் மற்றும் அதனூடே ஏற்பட்ட கட்டிடம் இடிந்த சத்தத்தில் மேலும் அந்த பகுதி
மக்கள் அனைவரும்
என்ன நடந்தது என்றே அறியாமல் ஒருவகை பயத்தில் இருந்தார்கள்.
சில ஆண்கள்
வீட்டை விட்டு வெளியே எட்டி பார்த்துகொண்டிருந்தார்கள். காபி வாங்கிவிட்டு வந்து
தன் முன்னே கட்டிடம் சரிந்து புதைவதை பார்த்த கந்தசாமி சற்று நேரம் என்ன செய்வது
என்றே புரியாமல் அதிர்ச்சியடைந்தவராய் அங்கே நின்று கொண்டிருந்தார். மழை கொஞ்சமும்
குறையாமல் பலத்த காற்றுடன் அடித்து ஊத்திகொண்டிருந்தது.
ஸ்தம்பித்து
நின்ற கந்தசாமி தன் கையில் இருந்த குடையையும் டீ கிளாஸ்களையும் நழுவவிட்டார்.
குடை
காற்றில் பறந்து சென்றது அதற்கு எதிர் திசையில் கந்தசாமி ஐயோ! ஐயோ! என கத்திகொண்டே
ஓட தொடங்கினார்.
ஓடியவர்
அகிலனின் வீட்டு வாசலில் வந்து நின்றார்.
மின்வெட்டு
ஏற்பட்டிருந்ததால் ஒரு சிறு சார்ச் லைட்டை வைத்துகொண்டு வீட்டின் வாசல்படியில்
வந்து உட்காந்திருந்தார்கள் அகிலனின் அண்ணன் முரளியும் அவர் மனைவி ரம்யாவும்.
முழுவதும்
தொப்பலாக நனைந்து வந்து முகம் முழுவதும் பதட்டமும் சொகமுகாக நின்றிருந்த
கந்தசாமியை விரைவாக எழுந்து சென்று 'ஐயா உள்ளே வாங்க' என்று அழைத்து ஆசுவாச படுத்தினான்.
அழுகையை
அடக்க முடியாதவராய் கந்தசாமி 'ஐயா ஐயா'
என்று அலறினார்.
ரம்யாவும்
எழுந்து ஓடி வந்து, ''ஐயா என்னங்கையா ஆச்சு பதட்ட படாதீங்க'' என்று தேற்றினாள்.
அம்மா
இடிவிழுந்து கட்டிடம் முழுசா இடிஞ்சு போச்சுமா என்று மீண்டும் அழ தொடங்கினார்.
முரளி
அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்பது தெரியாமல் ஐயா ''கொஞ்சம் பொறுமையா இருங்க வாங்க'' என்று சொல்ல
ஆரமித்த போதே...
''அந்த
கட்டிடத்துக்குள்ள நம்ம அகிலன் தம்பியும் பாப்பாவும் இருக்காங்கய்யா'என்று கதறி அழுதார் கந்தசாமி.
அவரை
நம்பாதவளாய்,''இல்லைங்க அவங்க ரெண்டு பேரும் போனிக்ஸ் மால்
போனாங்க''என்றாள்.
''இல்லமா அவரு
ராம் தம்பிய பார்க்க அங்க வந்தாரு என்னை பார்த்துட்டு தான் மாடில ஏறி போனாரு'' என்று அவர் சொல்லிகொண்டிருக்கும் போதே.
அவரின்
பக்கம் நின்றிருந்த முரளி இப்போது அதிர்ச்சியில் உறைந்து நின்ற தன் மனைவியின்
அருகில் சென்றான்.
அவனை
கொஞ்சமும் சட்டை செய்யாமல் அங்கிருந்து ஓட துவங்கினால் ரம்யா.
மழை விடாமல்
ஊத்திகொண்டிருந்தது. அவளை தொடர்ந்து முரளியும் கந்தசாமியும் ஓடினார்கள்.
இரண்டு
கட்டிடங்களில் ஒன்று முற்றிலும் நொறுங்கி புதைந்து விட்டிருந்ததை அறிந்த அக்கம்
பக்கத்து இளைஞர்கள் அங்கே வந்து என்ன செய்வதென்றே புரியாமல் நின்றுகொண்டிருந்தனர்.
அவர்களுள்
சிலர் தீயணைப்பு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொண்டிருந்தனர். ரம்யா மற்றும்
முரளி அங்கே வந்தார்கள் இடிபாடுகளை நோக்கி ஓடினார்கள் நின்றுகொண்டிருந்த இளைஞர்கள்
சிலர் அவர்களை தடுக்க முற்பட்டனர் சிறு வெளிச்சமும் இல்லை பயங்கர இருட்டு ஒரு சில
இளைஞர்கள் தங்கள் கையில் வைத்திருந்த டார்ச்சின் உதவியுடன் ரம்யாவையும் முரளியும்
பின் தொடர்ந்து சென்றார்கள்.
மழை சற்றே
தனிந்து காற்று இல்லாமல் மழை மட்டும் பெய்துகொண்டிருந்தது. டார்ச் வெளிச்சத்தில்
ஒரு ஓரத்தில் கிடந்த அகிலனின் பைக்கை பார்த்த ரம்யா ஜெஸிக்கா ஜெஸிக்கா ஜெஸிக்கா! என்று
கத்திகொண்டே இன்னுமும் வேகமாக இடிபாடுகளை நோக்கி ஓடினால். எங்கு தேடுவது எப்படி
தேடுவது ஒன்றும் புரியவில்லை இங்கும் அங்கும் ஓடினாள்.
தன் மகளின்
பெயரை கத்தினாள் கதறினாள்.
கீழே
விழுந்தாள் கையில் ஒட்டியிருந்த சகதியுடன் தன் தலையில் அடித்து கதறி அழுதாள்.
முரளி அவள்
அருகே வந்து அமர்ந்தவனாக அவளை ஒரு கையில் அணைத்துக்கொண்டு தன்னை கட்டுபடுத்த
முடியாதவனாக அவனும் அழுதுகொண்டிருந்தான்.
அந்த இடத்தை
அப்போது தான் வந்தடைந்திருந்தார் கந்தசாமி அங்கு என்ன நடந்தது என்றும் நிறைய பேர்
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கிறார்கள் என்றும் அங்கிருந்தவர்களிடம்
சொல்லிகொண்டிருந்தார். ஏற்கனவே பலர் கூடியிருந்தனர் செய்தி பரவ தொடங்கியவுடன் மிக
பெரிய இளைஞர் பட்டாளம் அங்கே வந்து கூடிவிட்டது. மின் தடை மற்றும் எப்படி
எங்கிருந்து மீட்பு பணிகளை தொடங்குவது என்பதை புரியாமல் அங்கு கூடியிருந்த
இளைஞர்கள் நின்றிருந்தார்கள்.
சைரன் ஒலி
எழுப்பிய படி இரண்டு தீயணைப்பு வண்டிகள் வந்து நின்றன அதிலிருந்து ஒரு பத்து
தீயணைப்பு வீரர்கள் விரைந்து இறங்கினார்கள். அவர்களின் கேப்ட்டன் ஒரு டார்ச்
லைட்டை எடுத்துகொண்டு இடிபாடுகளை நோக்கி சென்றார் அவர் பின்னே சில வீரர்கள் சென்றார்கள்.
டார்ச்
வெளிச்சத்தில் ரம்யாவை பார்த்த கேப்ட்டன் ''யாருமா அது அங்க
இருந்து தள்ளி
போங்கமா'' என சத்தம் போட்டவாரே முன்னேறி சென்றார்.
ரம்யாவும்
முரளியும் அந்த கேப்ட்டனை நோக்கி ஓடி வந்தார்கள் சார் ஏன் பொண்ணு உள்ள இருக்கா
சார் காப்பாத்துங்க சார் ப்ளீஸ் என்று கதறினார்கள்.
அவர் தனக்கு
பின்னே வந்த வீரர் ஒருவரிடம் இவர்களை அப்புற படுத்து என்ற விதத்தில் செய்கை
கான்ப்பித்து விட்டு கட்டிட இடிபாடுகளை நோட்டமிட்டார். டார்ச்சுடன் இருந்த மற்ற
சில வீரர்களை கட்டிடத்தை சுற்றி அனைத்து பக்கங்களிலும் சென்று நிலைமையை அறிந்து
வரும்படியும்.
யாராவது
அலறும் சத்தம் கேட்டால் உடனே தெரிவிக்கும் படியும் சொல்லிவிட்டு. தங்கள் வாகனகளை
நோக்கி நடந்தார்.
அவர்
வாகனத்தை அடைந்த நேரம் ஒரு போலிஸ் ஜீப் அங்கே நின்றிருந்தது சில போலிஸ்கார்கள்
கூட்டத்தை ஒதுக்கிகொண்டிருந்தார்கள். கேப்டன் அங்கிருந்த போலிஸ் உயரதிகாரியை
பார்த்து,''சார் மொத்தமா கட்டிடம் புதைந்து இருக்கு. உள்ள
எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியல . தெரிஞ்சவங்க யாராவது இருந்தா மொத்தம் எத்தனை
பேர் எந்தெந்த மாடில எத்தனை பேர் அப்படிங்கற விசயங்களை கேட்டுவைங்க. நாம லேட் பண்ண பண்ண ஒவ்வொரு
உயிருக்கும் ஆபத்து இங்க உடனே சில டீசல் ஜெனரேட்டர்கள் தேவை மொத்தமா இருட்டா
இருக்கு சுத்தி போக்கஸ் லைட் கட்டினா தான் முடியும். கட்டிட இடிபாடுகளை உடைக்க
ட்ரிள்ளர்களும் தேவை. பொக்லின் இயந்திரங்கள் இருந்தாலும் பயன்படும். உடனே ஏற்பாடு
பண்ணுங்க நாங்க இங்க பத்து பேர் தான் இருக்கோம் வேற தீயணைப்பு நிலையங்களுக்கு
தகவல் கொடுத்து வர சொல்லுங்க. இங்க இருக்க இளைஞர்கள் வாலண்டியர்ஸ் இருந்தா வர
சொல்லுங்க''என்று சொல்லிக்கொண்டே தன் வீரர்கள் பக்கம் திரும்பி
ஏதேதோ கட்டளைகள் இட தொடங்கினார்.
அந்த போலிஸ்
உயரதிகாரி தன் அருகே இருந்த கான்ஸ்டபிளை பார்த்து சிலரை தொடர்புகொண்டு
தேவையானவற்றை கொண்டு வர ஏற்பாடு செய்யும் படி சொல்லிவிட்டு தன் ஜீப்பின் மீது ஏறி
நின்று அங்கு இருந்த இளைஞர்களை பார்த்து யாராவது வாலண்டியர்ஸ் வந்து உதவி செய்ய
முடியுமா என்று கத்தினார்.
பல
இளைஞர்கள் முன்வந்தனர்.
அவர்களை
தீயணைப்பு வீரர்கள் தலைமையில் குழுக்களாக பிரித்தார் கேப்ட்டன். அவர்களில்
எலக்டீர்சியன்கள் சிலர் இருந்தனர் அவர்களை அங்கு சூழ்ந்திருந்த இருளை போக்கும் படி
கேட்டு கொண்டார். அவர்கள் விரைந்து செயல்பட தொடங்கினார்கள் அவர்கள் எதிர்பார்த்து
கொண்டிருந்த ஜெனரேட்டர்கள் லைட்டுகள் தேவையான உபகரணங்கள் எல்லாம் வர தொடங்கின.
மேலும் பல தீயணைப்பு வீர்கள் போலிஸ் அதிகாரிகள் என பெரிய காக்கி கூட்டமே அந்த
இடத்தை ஆக்கிரமித்திருந்தனர். ஆம்புலன்ஸ்கள் வரவழைக்க பட்டு தயார் நிலையில்
நிறுத்தி வைக்க பட்டிருந்தது.
ஆங்காங்கே
மின் விளக்குகள் ஒளிர துவங்கின.
ஒரு இரண்டு
மணி நேர அயராத உழைப்பில் அந்த இடத்தை சூழ்ந்திருந்த இருளை விரட்டியடித்தார்கள்.
மேலும் உதவிக்கு பல தீயணைப்பு வீரர்கள் போலிஸ் அதிரடிப்படை வீரர்கள் தன்னார்வ
தொண்டு இளைஞர்கள் சில கருவிகள் ஜெனரேட்டர்கள் வந்த வன்னமும் இருந்தன.
கட்டிட
இடிபாடுகளை ஆராய்ந்த சில அதிகாரிகளும் பொறியாளர்களும் கட்டிடம் புதைந்து இருக்கும்
காரணத்தினால் அது முழுவதும் நொறுங்கி விட வில்லை என்பதை உறுதிபடுத்தி கொண்டனர். மேலும் பலர்
உள்ளே உயிருடன் இருக்க வாய்ப்பு இருப்பதால் பெரிய இயந்திரங்கள்
கொண்டு இடிபாடுகளை உடைத்தால் அது கீழ் உள்ள கட்டிடத்தை முற்றிலும் நொறுக்கி
உயிருடன் இருப்பவர்களை நசுக்கிவிடும் என்பதால். பல குழுக்கள் அந்த காங்க்ரிட்
குவியலை சுற்றிலும் மிகவும் எச்சரிக்கையுடன் மெதுவாக பெரிய அழுத்தம் கொடுக்காமல்
காங்க்ரிட் சுவர்களை அறுத்து துண்டு துண்டாக எடுத்துக்க தொடங்கி இருந்தனர்.
வாட்ச்மேன்
கந்தசாமியின் தகவல் படி எட்டாவது மாடிக்கு கீழ் தான் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை
அறிந்துகொண்ட கேப்டன். காங்க்ரிட் இடுக்குகளிலும் பொந்துகளிலும் டார்ச் அடித்து
"உள்ள யாராவது இருக்கீங்களா" என்று கத்தி கொண்டிருந்த வீரர்களை பார்த்து
முதல் மூன்று மாடிகளில் ஆட்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆதலால் நேரத்தை வீனடிக்காமல்
காங்க்ரிட்களை அறுத்து எடுங்கள் என்று கட்டளையிட்டார்.
அந்த
நேரத்திலும் மக்களுக்கு சுட சுட செய்தி தருவதற்காக பல செய்தி சேனல்கள் மற்றும்
பத்திரிக்கைகளின் நிருபர்கள் கேமராமேன்கள் அங்கு வந்து குவிந்திருந்தனர்.
அவர்களிடம் சிக்காமல் கந்தசாமி, ரம்யா மற்றும் முரளியை காவல்துறை
தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். நிருபர்கள் அங்கு வேடிக்கை பார்த்துகொண்டிருந்தவர்களை
பேட்டி எடுத்து ஒளிபரப்பி கொண்டிருந்தனர். அங்கிருந்த காவல்துறையினரை அனுகி
விபரங்கள் சேர்க்க முயற்சி செய்தார்கள்.
எந்த
காவலரும் இவர்களுக்கு பதிலளிக்கும் நிலையில் இல்லை. காவல்துறை ஆனையர் மட்டும்
முன்னே வந்தார் அனைத்து நிருபர்களும் முந்தியடித்துகொண்டு மைக்குகளை
நீட்டினார்கள்.
அனைவரும் பல
கேள்விகளை கேட்டதில் அவருக்கு எதுவம் காதில் விழவில்லை. கைகளை உயர்த்தி
அமைதியாகும் படி கேட்டார்.
சற்று
அமைதியானார்கள் தயவுசெய்து எங்களை வேலை செய்யவிடுங்கள் நாளை உங்கள் கேள்விகளுக்கு
பதிலளிக்கிறோம் என்று கூறிவிட்டு சட்டென திரும்பி நடக்க துவங்கினார்.
''சார் ஒரே ஒரு
கேள்வி! ஒரே ஒரு கேள்வி!'' என கூவிகொண்டிருந்தவர்களை கொஞ்சமும் சட்டை செய்யாமல்
ஒரு அதிகாரியை அழைத்து ''விக்டிம்ஸோட சொந்தகாரங்க யாராவது
வந்தா இங்கே கொண்டு வந்திருங்க பத்திரிகைக்காரங்க கைல சிக்கிடாதீங்க பாவம்"என்று சொல்லிவிட்டு இடிபாடுகளை நோக்கி சென்றார்.
செய்திகள்
காட்டு தீ போல தமிழகம் எங்கும் பரவ தொடங்கின.
நிருபர்களுக்கு
தீனியாக தலைவிரி கோலமாக ஒரு பெண் ஓடி வந்துகொண்டிருந்தார்.
அத்தனை
கேமராக்களும் மைக்குகளும் திடுமென அவளை சூழ்ந்துகொண்டனர். ஐயா ஏன் மவன்யா
முருகன்யா உள்ள இருக்கான்யா ஐயா காப்பாத்துங்கயா காப்பாத்துங்கயா முருக முருக ஏன்
ராசா என கத்திகொண்டிருந்தவளை ஓடி வந்த களைப்பும் திடிரென சூழ்ந்த மக்கள்
கூட்டத்தால் ஏற்பட்ட வெக்கையும் மயக்கமுற செய்ததது.
பொழுது
விடிந்தது அன்று காலையில் அத்தனை செய்திதாள்களிலும் இந்த செய்தியே முதல் பக்கத்தை
ஆக்கிரமித்திருந்தது. ஆளும்கட்சியிலிருந்து மீட்பு பணிகள் துரிதமாக நடப்பதாகவும்
எதிர்கட்சியில் இருந்து மீட்பு பணிகள் தாமதமாக தொடங்கி மிகவும் மந்தமாக
நடப்பதாகவும் அறிக்கையும் வந்தது. காவல்துறை தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் என
மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவரும் கொஞ்சமும் ஓய்வில்லாமல் தங்கள் பணிகளை செய்து
கொண்டிருந்தனர். சில இடிபாடுகள் அப்புறபடுத்த பட்டிருந்த போதும் யாரும் இன்னும்
மீட்க்கப்படவில்லை.
ஒரு
ஓரத்தில் ரம்யா தலை கை கால்களில் காய்த்து போய் இருந்த சேறும் சகதியுமாக இடிபாடுகளை
வெறித்து பார்த்துகொண்டிருந்தாள் அவள் அருகில் முரளி அவளை அசுவாசபடுத்தி
கொண்டிருந்தான்.
சற்று
தொலைவில் ரம்யாவின் தாயும் தந்தையும் வந்துகொண்டிருந்தார்கள். ரம்யாவின் நிலையை
கண்டு தாங்கமுடியாமல் அவளின் தாயார் ஐயோ என அழ தொடங்கினாள். அவளின் தந்தை தன்
கைகளால் வாயை மூடிக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுதுகொண்டிருந்தார். கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து
கொண்டிருந்தது.
அவரின்
அருகில் வந்த முரளி அவரை தன் நெஞ்சோடு அனைத்து கொண்டார்.
சோகத்தை
கட்டுபடுத்த முடியாதவராக மாப்ள! மாப்ள! என்று கூறிக்கொண்டே அழுதுகொண்டிருந்தார்.
''அழுகாதீங்க
மாமா பாப்பாவுக்கு ஒன்னும் ஆகிருக்காது. இந்த வேலை செய்ற வாட்ச்மேன் கூடா
பாப்பாவும் அகிலனும் எட்டாவது மாடிக்கு போனதா சொல்றாரு. கட்டடம் ரொம்ப உடையாம
முழுசா புதைஞ்ச மாதிரி இருக்குறதால அவங்களுக்கு எதுவம் ஆகிருக்காது. இன்னைக்கு
மதியத்துக்குள்ள எப்படியும் எட்டாவது மாடி வரை உடைச்சு போய்டுவாங்க. கண்டிப்பா
பாப்பாவும் அகிலனும் பத்திரமா வந்துருவாங்க மாமா.''
''எப்படி மாப்ள
அழுகாம இருக்க முடியும் சின்ன பொண்ணு எப்படி மாட்டிகிட்டு எப்படி தவிக்கிறாளோ?'' என்று சொல்லும் போதே. முரளியின் கண்கள் குளமாயின அழுகையை அடக்க வேறு
பக்கம் முகத்தை திருப்பி முயற்சி செய்தான் முடியவில்லை. இரண்டு கைகளாலும் முகத்தை
முடிகொண்டு அப்படியே உட்காந்து அழ ஆரமித்து விட்டான்.
அங்கு கூடி
இருந்தவர்கள் அவர்களை சமாதனபடுத்தினார்கள். சற்று நேரத்தில் சமாதானமான முரளி தன் மாமாவை
அழைத்து அத்தையையும் ரம்யாவையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு செல்லும்படி
கூறினான். நகராமல் பிடிவாதமாய் அமர்ந்திருந்த ரம்யாவையும் ஒருவழியாக சமாதனபடுத்தி
அவள் பெற்றோருடன் அனுப்பிவைத்துவிட்டு.
இடிபாடுகளை நோக்கி ஓடினான்.
அங்கிருந்த
ஒரு அதிகாரியிடம்,''எத்தனை மாடி சார் தோண்டிருக்காங்க என்று வினவினான்.
''இப்போ தான்
சார் பத்தாவது மாடி முடிச்சு ஒன்பதாவது மாடியவே பார்த்திருக்காங்க, நைட்டு நிறைய ஆள் இல்ல தோன்றத்துக்கு தேவையான
பொருளும் நிறைய இல்லை. கட்டடம் மொத்தமா அமுக்கிராம பார்த்து பார்த்து
தான் உடைக்க வேண்டி இருக்கு, மழை வேற விடாம பேய் மாதிரி அடிக்குது" என்றார்.
''நைட்டு வேலை
பார்த்துகிட்டு இருந்த யாரும் இப்ப வரை ஒரு டீ கூட குடிக்காம வேலை பார்த்துகிட்டே
தான் இருக்காங்க. இன்னைக்கு காலைல இருந்து இப்போ நிறைய பயர் சர்வீஸ் ஆளுங்க நம்ம பாதுகாப்பு படையோட சேர்ந்து
தேசிய மீட்ப்புப்படை ஆளுங்க எல்லாம் வந்து ரொம்ப வேகமா வேலை
பார்த்துகிட்டு இருக்காங்க. கவலை படாதீங்க அந்த வாட்ச்மேன் சொன்ன மாதிரி உங்க
பொண்ணு எட்டாவது மாடில இருந்தா இன்னைக்கே காப்பாத்திருவாங்க.''
தன் மகளை காப்பாற்ற தானும் ஏதாவது வேலை செய்யவேண்டும் என்பது போல் அங்கு கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட கற்களுடன் நின்றுகொண்டிருந்த ஒரு மூன்று சக்கர வாகனத்தை தள்ளி கொண்டு தூரத்தில் கொட்டிவிட்டு திரும்பி வந்தான் முரளி.
- தொடரும்
அருமை.அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி... விரைவில் சரி பார்த்துவிட்டு வெளியிடுகிறேன்..
நீக்கு