வியாழன், 10 ஆகஸ்ட், 2017

ஜெஸிக்கா.... பாகம் 3 (இறுதி பாகம்)


முதல் இரண்டு பாகத்தை படிக்காதவர்கள் கீழே உள்ள லிங்கில் படித்துவிட்டு இந்த இறுதி பாகத்தை தொடரலாம்...

ஜெஸிக்கா பாகம் 1

ஜெஸிக்கா பாகம் 2

சரியாக நடக்க கூட முடியாமல் தன் தாயின் மீது சாய்ந்து சென்று கொண்டிருந்த ரம்யாவை அக்கம் பக்கத்தினர்

ஓடிவந்து அரவணைத்து வீட்டிற்குள் அழைத்து சென்றனர்.

தன் சுற்றத்தாரை கண்டவுடன் ரம்யாவின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து ஓடியது.

வந்த பெண்களில் சிலரும் அழுதுவிட்டார்கள். சில ஆண்கள் ஒண்ணுமில்ல பாப்பா வந்திரும் அழாம உள்ள கூட்டிட்டு  போங்க என கத்தினர். அந்த கூட்டத்தில் ஒரு  ஓரத்தில் விழிகளில் ஓடி கொண்டிருந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தாள் அமுதா.

சற்று நேரத்தில் ஒரு புகைபடமெடுப்பவர் அந்த வீட்டை படம்பிடித்து கொண்டிருந்தார். அந்த புகைப்படகாரரின் முன் ஒரு பெண்மணி கையில் ஏதோ ஒரு தொலைக்காட்சயின் அடையாளத்துடன் மைக்கை வைத்து கொண்டு,

''இது தான் அந்த வீடு. இந்த வீட்டில் வசித்த பொறியாளர் அமுதன் தான் அந்த கட்டிடத்தை கட்டியவர். இப்போது அவரே அந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளார் அவருடன் ஐந்து வயது அவரின் அண்ணன் மகள் ஜெஸிக்காவும் சிக்கியுள்ளதால் குடும்பமே மிகுந்த சோகத்தில்  உள்ளனர். இப்போது அவர்கள் உறவினர் யாருடனாவது பேச முடியுமா  என்று  பார்ப்போம்'' என்று அங்கு இருந்த கூட்டத்தை நோட்டமிட்டாள்.

யாரும் பேச தயாராக  இல்லாதது போல்  முகத்தை திருப்பி  கொண்டிருந்தனர்.

சமையத்தில் ஒரு பெரியவர் தன் மனைவியுடன் அந்த வீட்டிற்குள் நுழைந்தார். நுழைந்தவரை தடுத்த நிருபர் ''அய்யா நீங்க இவங்க சொந்தகாரங்களா?'' என்று கேள்வி கேட்டார்.

''இது ஏன் மவன் வூடுங்க'' என்று பதிலளித்தார் பெரியவர்.

உடனே சுறுசுறுப்பான காமிரா மேன் பெரியவரையும்  அவர் மனைவியையும் நோக்கி தன் காமிராவை திருப்பி படம் பிடிக்க தொடங்கினார். நிருபர், ''அப்போ நீங்க தான் எஞ்சினியர் அகிலனோட தந்தையா. உங்க பையனும் பேத்தியும் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்காங்களே.'' என்று கேள்வியை தொடங்கும் போதே அவர்கள் இருவருக்கும் அழுகை பீறிக்கொண்டு வந்தது.

வீட்டிற்குள் இருந்து வந்த இருவர், ''ஏன்மா  பாவம் அவங்களே சோகத்துல இருக்காங்க  அவங்ள போய் இப்படி தொந்தரவு பண்றீங்கன்னு, உங்க டி.வி அலுவலகம் இப்படி இடிஞ்சு விழுந்தாலும் இப்படித்தான் கேள்வி கேட்டுட்டு நிப்பீங்களா'' என்று  சொல்லி அவர்கள் இருவரையும் வீட்டிற்குள் அழைத்து சென்றார்கள்.

அந்த நிருபர் விடாபுடியாக அங்கேயே நின்று அங்கிருந்தவர்களிடம் சில செய்திகளையும் ஜெஸிக்கா மற்றும் குடும்பத்தாரின் புகைப்படங்கள் சிலவற்றையும் சேகரித்து சென்றார்.

சில நிமடங்களில் தமிழகம் எங்கும் ஜெசிக்காவின் புகைப்படம் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

மிக தீவிரமாக கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. நேற்று பெய்த மழைக்கு சம்பந்தமேயில்லாமல் வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. முரளி யார் என்ன சொல்லியும் கேட்க்காமல் அங்கேயே இருந்து சிறு சிறு வேலைகளை செய்துகொண்டிருந்தான். தகவல் எதுவும் தெரியாத நிலையில் முரளியின் நண்பர் ஒருவரும் தந்தையும் மதிய வேளையில் அங்கு வந்து முரளியை சாப்பிட்டு விட்டு வரலாம் என்று வீட்டுக்கு அழைத்தனர். அவன் விடாபுடியாக அங்கிருந்து நகர மறுத்துவிட்டான். மீட்பு படையினருக்கு வழங்கப்பட்டுகொண்டிருந்த உணவு பொட்டலம் ஒன்றை அவனுக்கு காவலர் ஒருவர் வாங்கி கொடுத்து சாப்பிடும் படி பனித்தனர். அவனும் வேண்டா வெறுப்பாக அதை உண்டான்.

மதியம் மணி மூன்று அடித்தது இரண்டு மாடிகளின் இடிபாடுகள் நீக்கப்பட்டு மூன்றாவது மாடியை தோண்ட தொடங்கி இருந்தார்கள். ஆங்காங்கே தெரிந்த சில பொந்துகளுக்குள் மின் விளக்குகளை அடித்து யாராவது இருக்கீங்களா? யாராவது இருக்கீங்களா? என்று இருவர் அலறிகொண்டிருன்தனர்.

திடீரென ஒருவர் சார் இங்க ஒருத்தர் தெரியுறார் அசைவு இருக்கு சார். வேகமா வாங்க என கத்தினார். திபு திபுவென ஒரு கூட்டம் அந்த இடத்தை நோக்கி நகர்ந்தது. அந்த மீட்பு பணிகளை தலைமை ஏற்று செயலாற்றி கொண்டிருந்த அதிகாரி அவர்களை தடுத்தார். மொத்தமாக ஒரு கூட்டம் அந்த இடத்திற்கு  சென்றால் பாரம் அதிகமாகி விடும் என கூறி விலகி செல்ல சொன்னார்.

குறிப்பிட்ட சில பணியாளர்களை அழைத்தார் குறிப்பிட்ட அந்த இடத்தை சுற்றி சில இடங்களை குறித்து துளையிடும் இயந்திரம் கொண்டு துளையிட சொன்னார். அப்படியே சதுரமாக இரண்டு ஆள் போய் வரும்படி ஒரு துளை ஏற்படுத்த பட்டது. ஒரு கிரேன் உதவியுடன் ஒரு தீயணைப்பு வீரர் தலைகீழாக கயிறு கட்டி உள்ளே இறக்கபட்டார்.

உள்ளே இறக்கப்பட்ட வீரர, ''சார் உயிர் இருக்கு சார் தலைல நல்ல அடி அரை மயக்குதல இருக்காரு.''

இதை கேட்ட அதிகாரி ''அவரை அப்படியே உங்களால தூக்கி வெளிய கொண்டு வர முடியுமா?''

''இல்லை சார் அவர் கால் மாட்டிகிட்டு இருக்கு அதை எடுக்காம வெளிய கொண்டுவர முடியாது.''

''வேற யாராவது தெரியுராங்களா பாருங்க?''

தன் தலையை அங்கும் இங்கும் திருப்பி தலை கவசத்தில் இருந்த மின் விளக்கின் ஒளியை பயன்படுத்தி பார்த்தார்.

''ஆமா சார் அந்த பக்கம் ஒரு ரெண்டு பேர் தெரியுறாங்க.''

''அவங்க கிட்ட உங்களால போக முடியுமா?''

''இல்லை சார் முடியாது? இடைல ஒரு சுவரு விழுந்து கிடக்கு.''

அரை மயக்கத்தில் இருந்த மேஸ்த்திரி முத்துவேல், ''ஐயா ஐயா காப்பாத்துங்கயா'' என மெல்லிய குரலில் பேச ஆரமித்தார்.

தீயணைப்பு வீரர் வெளியே தூக்கபட்டார்.

மீண்டும் அவர் முலமாக முத்துவேலுக்கு தண்ணீர் கொடுக்க பட்டது. அதே நேரம் அந்த இடத்தை சுற்றி வேகமாக இடிபாடுகளை நீக்கும் பனி நடந்தது. முத்துவேல் இருந்த இடத்தை நோக்கி மூன்று தீயணைப்பு வீர்கள் இறங்கினர். சில மின் இயந்திரங்கள் மூலம் முத்துவேல் கால் சிக்களை நீக்கி அவனை மெல்ல வெளியே எடுத்தார்கள். தயாராக இருந்த முதலுதவி வண்டியில் ஏற்ற பட்டு வண்டி மருத்துவமனை நோக்கி பறந்தது. எப்படியாவது மீட்க்கபட்டவரை படம் எடுத்து விட வேண்டும் என முயற்சி செய்துகொண்டிருந்த பத்திரிக்கையாளர்களால் அம்புலன்சை மட்டுமே படம் புடிக்க முடிந்தது.

உள்ளே இறங்கி இருந்த வீரர்கள் சிறு பொந்து போல் உருவாக்கி அருகில் தெரிந்த மற்றவர்களிடம் நெருங்க பாதை அமைத்துகொண்டிருந்தார்கள். அவர்கள் உள்ளே இருந்த மேனேஜர் ராகுல் சார் ஹெல்ப் மீ சார் என சொல்லிக்கொண்டே அவர்கள் அமைத்து கொண்டிருந்த பாதையை நோக்கி படுத்த நிலையிலேயே நகர்ந்து வர தொடங்கினார். அவர் நகர்வதை பார்த்த தீயணைப்பு வீரர் ஒருவர் அவரை நோக்கி வேகமாக படுத்த நிலையில் சென்று அவர் இரண்டு கைகளையும் தோள்பட்டையுடன் பிடித்து கொண்டு. புல் என்று கத்தினார். பின்னால் இருந்த வீர்கள் அவரின் காலை பிடித்து இழுத்தார்கள். மேனேஜர் ராகுல் மீட்கபட்டார். அவர்மூலம் அவர் அருகில் இருந்த இன்னொருவர் கணக்குபிள்ளை ரத்தினம் என்றும் அவர் கட்டிடம் இடிந்த நேரத்தில் இருந்து மயக்கத்தில் இருப்பதாகவும் தெரிந்து கொண்டனர்

மற்றொரு முனையில் இருந்து, ''சார் இங்க ஒரு ஆள் தெரியுறார்'' என்ற அலறல் கேட்டது.

அதிகாரி விரைந்து வந்து பார்த்த போது முகம் முழுவதும் சேறாக பேச கூட முடியாமல் சக்தி இழந்தவனாக வாயை திறந்து திறந்து மூடிக்கொண்டு ஒரு கையை தூக்கி வா வா என அழைப்பது போல செய்கை செய்துகொண்டிருந்தான் அகிலன்.

''கமான் குவிக். யாராவது உள்ள போய் அவர தூக்க முடியுமா.'' விரைவுபடுத்தினார் தலைமை அதிகாரி.

''நோ சார். ஹோல் ரொம்ப  சின்னதா இருக்கு ரிஸ்க் அதிகம் இன்னும் கொஞ்சம் உடைச்சு எடுத்துட்டா போகலாம்''.

''ஓகே வேகமா முடிஞ்சா ஒரு கயிறு வழிய அவருக்கு கொஞ்சம் தண்ணி கொடுங்க. அவர் கூட தான் அந்த சின்ன பாப்பா இருப்பா. எப்படியும் அவள காப்பத்திடனும்'' என்று அவர்களுக்கு ஆனையிட்டு கொண்டிருக்கும்போது மறுபுறம். கணக்கபுள்ளை ரத்தனம் வெளியே எடுக்க பட்டார்.

ஒரு அதிகாரி வேகமாக தலைமை அதிகாரி அருகில் ஓடி வந்து சார் அவருக்கு உயிர் இல்லை.

''ஓ மை காட். சரி எதுவும் இப்போதைக்கு பப்ளிக்கு சொல்லாதீங்க அவரோட பாடிய அம்புலன்ஸ்ல ஏத்தி ஹாஸ்பிட்டல் கொண்டு போக சொல்லுங்க.''

''சார் இன்னும் ரெண்டு பேர் உள்ள இருக்காங்க அதுல ஒருத்தருக்கு தலைல பலமான அடி மயக்குதுல தான் இருக்கார். ஆனால் துடிப்பு இருக்கு. இன்னொருத்தர் கான்சியஸா தான் இருக்கார் பேசுறார்.''

''குட் சீக்கிரமா அவங்களையும் காப்பாத்தி வெளில எடுத்து ஹாஸ்பிட்டல் அனுப்புங்க.''

வானம் வெறித்திருந்த நிலையிலும் மீண்டும் மழை பெய்ய ஆரமித்திருந்தது. சற்று நேரம் மழை விடாமல் பெய்து தண்ணீர் வெளியேற வழியில்லாமல் நிலை ஏற ஆரம்பித்தது.

நின்று கொண்டிருந்தவர்களின் கணுக்கால் வரை தண்ணீர் 'சரசரவென்று' ஏறியது.

''இங்கே யாரும் நிக்காதீங்க, கொஞ்சம் தள்ளிப் போங்க, எங்களை வேலை செய்ய விடுங்க" என்றார் உயர் அதிகாரி ஒருவர்.

ரம்யாவின் வீட்டிற்குள் ஒருவர் ''டிவிய போடுங்க செய்திய பாருங்க வேகமா'' என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

செய்தியில் ஜெசிக்காவின் படம் காண்பிக்க பட்டுகொண்டிருந்தது. இதுவரை நான்கு பேர் மீட்க பட்டுள்ளதாகவும் அவர்கள் பற்றிய தகவல் எதுவும் அறிவிக்க படவில்லை என்றும் செய்தி வாசிப்பாளர் கூறி கொண்டிருந்தார்.


செய்தியாளர் பரபரப்புடன் சிறிது நிறுத்தி, ''சற்று முன் கிடைத்த செய்தி அந்த கட்டிடத்தின் பொறியாளரும் ஜெசிக்காவின் சித்தாப்பாவான அகிலன் மீட்க பட்டுவிட்டார் அந்த நேரடி காட்சிகளை இப்போது பார்ப்போம்'' என்றார். அகிலன் ஒரு ஸ்ட்ரச்சரில் அம்புலன்ஸில் ஏற்றப்படும் காட்சி ஓடிகொண்டிருந்தது.

முரளி மட்டும் அகிலனிடம் ஏதோ பேச முயற்சி செய்து கொண்டிருந்தான். அகிலனின் தந்தை அம்புலன்சில் ஏறிகொண்டார். அம்புலன்ஸ் புறப்பட்டு சென்றது. முரளி தலையில் கையை வைத்துகொண்டு அப்படியே குத்த வைத்து உட்கார்ந்தான். அவன் அருகில் அவன் மாமா அவனை தேற்றி கொண்டிருந்தார்.

இந்த காட்சிகளை பார்த்த உடன் அங்கிருந்த அனைவருக்கும் தவிப்பு அதிகமாகியது. தெளிவான செய்தி எதுவும் வழங்க படாததால் குழம்பிய நிலையில் வாசலில் நின்றிருந்த இரண்டு மகிழுந்துகளில் ஏறி ரம்யா மற்றும் குடும்பத்தினர் கட்டிட இடிபாடுகள் இருந்த இடத்திற்கு சென்றனர்.

அகிலனுடன் இருந்த ஜெஸிக்கா கூடிய விரைவில் மீட்க பட்டுவிடுவாள் என எதிர்பார்த்து வந்த அத்தனை பேருக்கும் அகிலன் மட்டுமே எட்டாவது மாடிக்கு வந்தான் ஜெஸிக்கா ஆறாவது மாடியில் ராமுடன் இருக்கிறாள் என்ற செய்தி பெரும் ஏமாற்றமாக இருந்தது. துக்கம் மேலும் அதிகமாகியது.

நிருபர்கள் செய்திகளை சேகரிப்பதற்காக பறந்துகொண்டிருந்தனர். புகைப்பட காரர்கள் தங்கள் புகைப்பட கருவியை வைத்து கொண்டு கிடைக்கும் சந்து பொந்து என அத்தனை பக்கங்களிலும் புகுந்து புகைப்படங்களை எடுத்து ஊடகங்களில் வெளியிட்டு கொண்டிருந்தனர்.

ஏதோ ஒரு வீட்டின் தொலைக்காட்சி பெட்டியில் மீட்க பட்டவர்கள் பெயர்களை சொல்லிகொண்டிருந்தார்கள். மேலும் கணக்கபுள்ளை ரத்தினம் எந்த ஒரு பெரிய அடியும் படதா நிலையிலும் மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார் என்றும் அறிவித்தார்கள். ரத்தினத்தின் குடும்ப உறுப்பினர்கள் அவரின் உடலை மருத்துவமனையில் இருந்து பெற்று ஆம்புலன்சில் ஏற்றும் காட்சியும் அவர்கள் குடும்பத்தினர் அழுது புலம்பும் காட்சியும் காண்பிக்க பட்டுகொண்டிருந்தது.

மின்சாரத்தில் இயங்கும் ரம்பம் போன்ற இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகள் அறுக்கப்பட்டு கிரேன்களின் உதவியுடன் இடிபாடுகள் அகற்ற பட்டு கொண்டிருந்தன.

திடீரென வானிலை மாறியது குளிர்ந்த காற்று வேகமாக வீச தொடங்கியது. கரு கருவென மேக கூட்டங்கள் ஒன்று திரண்டன. அங்கிருந்த அத்துனை பேரையும் அச்சம் சூழ்ந்து கொண்டது. ஒருவேளை பெரு மழை பெய்து இடிபாடுகளுக்குள் புகுந்து நிறைத்து விட்டால் மண் சரிவு ஏற்பட்டுவிட்டால் யாரையும் காப்பாற்ற முடியாமல் போய் விடும் என்பதால் பதட்டம் அதிகமாகியது. இருளை விரட்ட மின் விளக்குகள் ஒளிர தொடங்கின.

தொலைக்காட்சி பெட்டியில் மழை வருமா வராதா என ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் சண்டையிட்டு கொண்டிருக்க தொகுப்பாளர் அவர்களை சமாதான படுத்திக்கொண்டும் வானிலை ஆராச்சியாளர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டும் இருந்தார்.

மேக கூட்டங்கள் வானை மூடியிருந்ததே தவிர மழை இன்னும் பொழியவில்லை. மணி இரவு ஏழை நெருங்கி இருந்தது. மழை துளிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக விழ தொடங்கியது குளிர் காற்று வேக மெடுக்க தொடங்கியது. மிகவும் பலமாக வீசிய காற்றில் ஒன்றாய் இருந்த மேக கூட்டங்களில் பிளவு ஏற்பட்டது. பிரிந்த மேகங்களுக்கு நடுவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரங்கள் தென்பட்டன. அனைவருக்கும் அப்பாடா என்றிருந்தது. மீட்பு பணி வேகமெடுக்க தொடங்கியது.

மருத்துவமனையில் படுத்திருந்த அமுதனின் விழிகளில் இருந்து விழிநீர் வழிந்துகொண்டு இருந்தது. அவன் வாய் திறந்து எதுவும் பேசவில்லை. அவன் தந்தை அவனருகில் அவனுக்கு கவலைபடாதப்பா பாப்பாவ அந்த முருகன் காப்பாத்துவாரு என்று ஆறுதல் கூறிகொண்டிருந்தார். மருத்துவர்கள் கொடுத்த மருந்துகள் வேகமாக வேலை செய்ய தன்னை அறியாமலே தூங்கி போனான் அகிலன். அவன் கட்டிலின் அருகில் தன் தோளில் இருந்த துண்டை விரித்து தூங்கினார் அகிலனின் தந்தை.

அதிகாலை மெல்ல விடிய தொடங்கியது. ஆங்காங்கே குருவி சத்தமும் காக்கை சத்தமும் கேட்க தொடங்கியது. மங்கையர்கள் தங்கள் வாசல்களில் நீர் தெளித்து கோலம் போட ஆரமித்திருன்தனர். உலகமே அயர்ந்து மெல்ல சோம்பல் முறிக்கும் நேரத்தில் கொஞ்சமும் ஓய்வே இல்லாமல் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பனி படு வேகமாக நடந்து கொண்டே இருந்தது. அனைவரின் உள்ளத்திலும் ஜெஸிக்கா தான் இருந்தாள்.

ஒரு ஓரத்தில் கையில் வைத்திருந்த தேநீரை அலப்பி அலப்பி குடித்துகொண்டிருந்த தலைமை அதிகாரியிடம் வந்த முரளி,''சார் இன்னும் எவளோ தூரம் சார் தோண்டனும். ஆறாவது மாடி வரை தோண்டியாச்சா சார்?'' என்றான்.

''டோன்ட் வொரி முரளி வீ ஆர் அல்மோஸ்ட் நியர். இன்னும் கொஞ்சம் தான் எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்தில கண்டுபுடிச்சுரலாம். ஷி வில் பீ ஆல்ரைட். கண்டிப்பா காப்பாத்திரலாம்''. என்று தேற்றி அனுப்பினார்.

அங்கிருந்து நகர்ந்த முரளி அருகில் இருந்தவரிடம் சார் மணி என்ன என்று கேட்டான். 6:40 சார் என்று பதில் வந்தது.  தன் மகள் மீட்க பட்டுவிட்டாள் என்ற செய்தி வந்துவிடும் என்று 7:40க்காக ஆவலோட காத்திருந்தான். 7:40 ஆனது ஒரு செய்தியும் வரவில்லை 8:40, 9:40, 10:40 என ஒவ்வொரு மணி நேரமும் ஒரு யுகமாக கழிந்தது. 11 மணியளவில் கையிலும் தலையிலும் கட்டு போட்டுகொண்டு கண்ணத்தில் ஏற்பட்டிருந்த சிராய்பில் மருந்து தடவிய நிலையிலும் அகிலன் கட்டிட இடிபாடுகள் இருக்கும் இடத்திற்கு வந்தான்.

முரளி தன் தந்தையிடம் ''இவன ஏன்ப்பா இங்க கூட்டிட்டு வந்தீங்க. ரெஸ்ட் எடுக்க சொல்ல வேண்டியதானே. டாக்ட்டர் என்ன சொன்னாங்க?''

''எல்லாரும் எவளவோ சொல்லியும் கேக்காம வந்துட்டான்பா. ரொம்ப அழுதுகிட்டே இருந்தான் அதான் டாக்ட்டர் போயிட்டு சாயந்தரம் செக்அப்க்கு வந்திருங்கன்னு சொல்லி அனுப்பிவச்சாரு''.

திடீரென அந்த இடத்தில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது தலைமை அதிகாரி இடிபாடுகளின் மைய்யத்தை நோக்கி விரைந்தார்.

அவருடன் இரண்டு அதிகாரிகள் எதையோ விளக்கி கொண்டே செல்கிறார்கள். மருத்துவமனை முதலுதவி வண்டியிலிருந்து இருவர் தூக்கு படுக்கையை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள். அகிலனும் முரளியும் கூட அந்த இடத்தை நோக்கி நகர்ந்தார்கள் சில காவலர்கள் அவர்களையும் அவர்கள் பின் ஆர்வத்தில் இடிபாடுகளை நோக்கி வந்த மற்றவர்களையும் தடுத்து நிறுத்தினார்கள்.

''சார் சார் ப்ளீஸ் சார் ஏன் பொண்ணு சார் என்று முரளி ஒரு காவலரிடம் கெஞ்சினான்.

கொஞ்சம் பொறுமையா இருங்க சார் நீங்க கோவாப்ரேட் பண்ணினா தான் எங்களால வேலை செய்ய முடியும்'' என்று கூறி அனைவரையும் தடுத்து நிறுத்தினார் காவலர் ஒருவர்.

சற்று நேரத்திற்கெல்லாம் தூக்கு படுக்கையில் இருவர் ஒருவரின் உடலை முழுவதுமாக வெள்ளை துணியால் மூடி தூக்கிக்கொண்டு முதலுதவி வண்டியை நோக்கி சென்றார்கள். பெரிய ஆளாக இருந்ததால் அது தன் மகள் இல்லை என்பதை உணர்ந்த முரளி யாராக இருக்கும் என்று வெறித்து பார்த்துகொண்டிருந்தான்.

அது தன் நண்பன் ராம் என்பதை புரிந்துகொண்ட அகிலன் 'ராம் ராம்' என்று கத்திகொண்டே முதலுதவி வண்டியின் அருகில் ஓடி வந்தான்.

''சார் சார் என்னாச்சு சார்? இஸ் ஹீ ஆல்ரைட்? ப்ளீஸ் சார் சொல்லுங்க சார்?' என்று அங்கு இருந்த அதிகாரியிடம் கேட்டான் ராம்.

அந்த அதிகார் அகிலனை பார்த்து மிக வருத்தத்துடன் சாரி ஹீ இஸ் நோ மோர். இறந்துவிட்டார் என்று அறிவித்தார், ''அவங்க ரிலேடிவ்ஸ்வோட போய் பாடிய ஜி.எச்.ல அப்பறம் வாங்கிகோங்க'' என்றார்.

ராமின் உடல் ஏற்றப்பட்டு முதலுதவி வாகனம் புறப்பட்டு சென்றது. தன் தலையில் இடி இறங்கியது போல் எதுவும் அசைவற்று நின்றுகொண்டிருந்த அகிலனிடம் ராமின் மனைவி ரஞ்சனி ஓடி வந்து நின்றால்.

''என்னாச்சுண்ணா அது ராமா? அவரு நல்லா இருக்காரா? நீங்க பேசுனீங்களா? எனக்கு பயமா இருக்குண்ணா ப்ளீஸ் சொல்லுங்க'' என்று கண்ணில் நீர் போங்க கேட்டாள் ரஞ்சனி.

அகிலனால் எதுவும் பேச முடியவில்லை. உன் ஆசை காதல் கனவன் உனக்காக தன் வீட்டையே பகைத்துக்கொண்டு நீ தான் வாழ்க்கை என்று வந்தவன் இப்போது இல்லை என்று அவளிடம் எப்படி சொல்வது. ரஞ்சனியையும் அவள் பின்னே ஏக்கத்தோடு நின்றுகொண்டிருந்த அவளது பெற்றோர்களையும் பார்த்தான் அகிலன் ஏதோ சொல்ல வாய் திறந்தான் வார்த்தைகள் வரவில்லை மாறாக '' வென்ற சத்தமும் 'ஐயோ' என்ற அலறலுடன் அழுகை தான் வந்தது.

கண்களில் தாரை தாரையாக நீர் பெருக்கெடுத்து ஓடியது. நிற்க முடியாமல் தன் கைகளுக்குள் முகத்தை வைத்து புதைத்துக்கொண்டு அப்படியே குத்த வைத்து உட்காந்து கதறி கதறி அழுதான்.

ரஞ்சனி அப்படியே மயங்கி சரிந்தாள் அவளை அவளது தந்தையும் தாயும் தாங்கி பிடித்தார்கள். முரளியும் அவன் தந்தையும் அகிலன் அருகில் வந்தனர் முரளி நின்று கொண்டு சார் யாராவது கொஞ்சம் தண்ணி கொண்டுவாங்க ப்ளீஸ் என்று கத்தினான். அவன் தந்தை அகிலனை ஆதரவாக அனைத்து பிடித்துகொண்டார்.

அவன் இன்னுமும் குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தான்.

ரஞ்சனியின் முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது அவளிடம் எந்த அசைவும் இல்லை. அங்கிருந்த மருத்துவர் ஒருவர் அவளின் கைகளை பிடித்து சோதித்து நோ ப்ராப்ளம்! ஷி இஸ் ஓகே அதிர்ச்சில மயக்கமா ஆகிருக்காங்க ஹாஸ்பிடல் கொண்டு போங்க என்று கூறினார். ஒரு முதலுதவி ஊர்தியில் ஏற்றி அனுப்பிவைத்தார்கள்.

கைகளால் முகைத்தை அழுத்தி துடைத்துக்கொண்டு தன் அண்ணனை நிமிர்ந்து பார்த்த அகிலன் அவனிடம் ஜெஸிக்கா ராம்கிட்ட தான்ணே இருந்தா என்றான். அவர் தெரியும் என்பதை போல் தலையை அசைத்துவிட்டு வேறுபக்கம் திரும்பினான் கண்களில் நீர் பெருகியது.

இடிபாடுகளின் மையத்தில் இடுபாடுகளை அகற்றிக்கொண்டிருந்த வீரர் ஒருவர், ''சார் இங்க ஒரு பையன் இருக்கான் சார்'' என்று மேலே நின்றுகொண்டிருந்த அதிகாரியிடம் கத்தினார்.

மேலே இருந்த அதிகாரி ''எப்படி இருக்கான்? உயிர் இருக்கா?'' என்று கத்தினார்.

''ஆமா சார் உயிரோட தான் இருக்கான் துடிப்பு இருக்கு''.

''ஓகே காமன் குவிக் வெளில எடுங்க.''

''அவளோ ஈசி இல்லை சார் அந்த பையன் கால்ல ஒரு பெரிய சுவர் விழுந்து அமுக்கி இருக்கு சார். பையன் மயக்கத்துல தான் இருக்கான்.''

வேகமாக மேலும் இரண்டு வீரர்கள் சுவற்றை அறுக்கும் இயந்திரங்களுடன் உள்ளே இறங்கினர். உள்ளே இருந்த வீரர் முருகனின் முகத்தில் நீரை ஊற்றி அவன் முகத்தில் இருந்த மண்ணை நீக்கினார்.

நீர் ஏற்படுத்திய குளிர்ச்சியில் முருகன் கண்களை மெதுவாக திறக்க முற்பட்டான். ஆ ஆ என்று வலி தாங்க முடியாமல் முனங்கினான். அவனால் எதுவும் பேச இயலவில்லை.

வீரர்கள் சுவரை அறுத்து அவன் கால் மீது இருந்து அகற்றினார்கள் முருகனின் வலது கால் முற்றிலும் நசுங்கி செயல்படாத படி இருந்தது. அவனுக்கு சில முதலுதவிகளை செய்து தூக்கு படுக்கையில் கட்டி கயிறு மூலம் மேலே தூக்கினார்கள். அவன் கண்களில் நீர் ஒழுக பாப்பா பாப்பா என்று தன் வலது கையை மெதுவாக தூக்கி இடுபாடுகளை காண்பித்தான். அவன் சொல்ல வருவதை புரிந்துகொண்ட வீரர்கள் கவலை படாத நாங்க பாப்பாவ காப்பத்திருவோம் என்று சொல்லி அவனை மேலே ஏற்றிவிட்டு அவன் சுட்டிகாட்டிய இடத்தின் இடிபாடுகளை விரைந்து அகற்ற தொடங்கினர்.

இந்த முறை முதலுதவி ஊர்தி அருகில் காவலர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை முருகனின் தாயை மட்டும் கண்டறிந்து தனியாக அழைத்து விசயத்தை சொல்லி முருகனுடன் சேர்த்து வாகனத்தில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.

ரம்யாவும் அவர்கள் மற்ற சில உறவினர்கள் மற்றும் நண்பர்களும் இடிபாடுகள் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டிருந்தனர். வானில் கரு கருவென மேகக்கூட்டங்கள் ஒன்று கூடி மிரட்டி கொண்டிருந்தன. ஆங்காங்கே வானில் குமுறல்களும் சிறு மின்னல்களும் தோன்றி மறைந்தன. அனைவரும் இறைவா என பிராத்தித்து கொண்டிருந்தனர்.

தலைகவசத்தில் மாட்டி இருந்த மின் விளக்கை பயன்படுத்தி ஒரு தீயணைப்பு வீரர் ஒரு ஓட்டை வழியாக பார்த்துகொண்டிருந்தார்.
பெருமழை “சோ” வென பெய்து அந்த இடத்தை நிரைக்க தொடங்கியது.

''சார் ஒரு பொண்ணு இருக்கு சார்" என்றார் ஒரு தீயணைப்பு வீரர்.

''பாருங்க பத்திரமா எடுங்க"'

''மூச்சு இருக்கு சார்"

வெளியில் எடுத்தார்கள்.

அது ஜெஸிக்கா இல்லை.

அங்கே கீழே விளையாடிகொண்டிருந்த சித்தாள் ஒருவளின் மகள்.

மூச்சு இருந்தது.

அவளை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பினார்கள்.

அகிலன்,அண்ணன் முரளி,அண்ணி மூவரும் உறைந்த முகங்களுடன் தண்ணீரில் நின்றிருந்தார்கள்.

அந்த ஜில்லிப்பு மழை நீர் அவர்களின் இடுப்பைத் தாண்டியிருந்தது.

மழையும் விடாமல் பெய்து கொண்டிருந்தது.

''என்னங்க நம்ம பொண்ணு கிடைப்பாளா?''

''நிச்சயம் கிடைப்பா?'' என்ற முரளி அவளை தன் தோள் மீது சரித்துக் கொண்டான்.

அகிலன் தண்ணீரில் தூரத்தில் மிதந்து வந்து கொண்டிருந்த ஜெஸிக்கா எப்பொழுதும் வைத்திருக்கும் கரடி பொம்மையை சக்தியற்றவனாக கண்களின் ஓரத்தில் நீர் ஒழுக பார்த்துகொண்டிருந்தான்.


-முற்றும்.

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

ஜெஸிக்கா.... பாகம் 2

முதல் பாகத்தை படிக்காதவர்கள் கீழே உள்ள லிங்கில் படித்துவிட்டு இந்த பாகத்தை தொடரலாம்...

ஜெஸிக்கா பாகம் 1

பாகம் 2

காற்று வேகமாக வீசியதால் மழை எல்லா பக்கங்களிலும் இருந்து சுழன்று சுழன்று அடிக்க ஆரமித்தது கட்டிடம் முடியாமல் இருந்ததால் நாலா பக்கமும் இருந்து சாரல் உள்ளே புகுந்தது. வாரச்சம்பளத்திர்காக காத்திருந்த அனைவரும் மழையிடம் இருந்து தப்பித்து கட்டிடத்தின் மையப்பகுதிக்கு சென்றார்கள். அங்கும் விடாமல் சாரல் துரத்தியது குளிர் அடிக்க தொடங்கியது. சிலர் அப்படியே கட்டிடத்திற்குள் நுழைந்து ஆங்காங்கே அமர தொடங்கினார்கள். சிலர் மாடிப்படிகளில் அமர்ந்தார்கள். சிலர் மழையை ரசிப்பதர்க்காக மேலே சில மாடிகள் ஏறிச்சென்றார்கள்.

அடித்த காற்றில் அகிலன் பைக்கின் முன் வைக்கபட்டிருந்த கரடி பொம்பை பறந்து கட்டிடத்திற்குள் சென்றது. அதனை அங்கு வேலை செய்யும் சித்தாளின் மகள் எடுத்து கொண்டு அவள் அன்னையிடம் ஓடினாள்.

“இது அந்த பாப்பாவோடது அவகிட்ட குடுத்துரனும் சரியா” என்றாள் அன்னை.

“சரிம்மா எனக்கும் இதுமாதிரி ஒன்னு வாங்கித்தரியா.” அம்மா சரி என்பது போல் தலையசைத்தாள்.

மேலே ஏறிக்கொண்டிருந்த அகிலனும் முருகனும் ஐந்தாவது மாடியை அடைந்திருந்தார்கள்.

அவர்கள் பின்னாடியே மணியும் அங்கே வந்திருந்தது.

அங்கே அடுக்கி வைக்க பட்டிருந்த செங்கர்களின் மீது ராம் அமர்ந்திருந்தான்.

ராமை பார்த்த ஜெஸிக்கா,''ஐ ராம் அங்கிள்'' என்று கத்தினாள்.

'பொளபொள'வென வெளிய பெய்து கொண்டிருந்த மழையை பார்த்துகொண்டு அமர்ந்திருந்த ராம் ஜெஸிக்காவை பார்த்தவுடன் முகம் முழுவதும் புன்னகையோடு 'வாடா வாடா' என்று கையை நீட்டினான்.

அகிலனிடம் இருந்து இறங்கிய ஜெஸிக்கா குடு குடு வென ராமிடம் ஓடினாள்.

நீட்டிய கைகளில் அப்படியே அவளை தூக்கி முத்தம் கொடுத்தான் ராம்.

ஜெஸிக்காவும் பதிலுக்கு முத்தம் கொடுத்துவிட்டு 'க்கி க்கி'என ஒரு மழலை சிரிப்பு சிரித்தாள்.

அகிலன் ராம் அருகில் வந்து என்ன டா..., என்ன பிரச்சனை என்று அலுப்புடன் கேட்டான்.

''இல்லை மச்சி நாலு இத்து போன கம்பிய வாங்கி வச்சுகிட்டு மேல டாப் ரூப முடிச்சிருங்கறாரு இதுல சிமென்ட் வேற பத்தாது மண்ணை கலந்து முடிச்சு விடுங்கன்றாரு. எப்படி மச்சி நாளைக்கு மேல இருந்து தண்ணி லீக் ஆனா நம்மள தான் குறை சொல்லுவாங்க. இந்த இத்து போன கம்பிய வச்சு கட்டினா இடிந்து விழ கூட சான்ஸ் இருக்கு மச்சி.''

ராமிடம் இருந்து ஜெஸிக்கா மெதுவாக கீழே இறங்கி மணியுடன் விளையாட ஆரம்பித்தாள்.

முருகன் அங்கே அமர்ந்து கொண்டு ஜெஸிக்காவிடம் ஏதோ சொல்லிகொண்டிருந்தான்.

அகிலன் ராமை பார்த்து ''முடிச்சு விட சொன்னா முடிச்சு விட வேண்டியதானே மச்சி எதுக்கு நீ டென்சன் ஆகுற அவன் ஏற்கனவே ஏதோ பட்ஜெட் ப்ராப்லம்ன்னு சொல்லறான். இன்னும் மேல உள்ள வீடெல்லாம் விக்கவே இல்லையாம். அப்படியே ஏதாவது பிரச்னைனாலும் இன்னும் ஒரு ரெண்டு வருசமாவது ஆகும் அப்பறம் இவன் தான் செலவு பண்ணி வேலை பாக்க போறான் நமக்கு என்ன? சொல்றத சொல்லிட்டோம் கேக்காட்டி அது அவன் பிரச்னை ப்ரியா விடு மச்சி.''

ராம் சற்று கோபத்துடன், ''இல்லை மச்சி ஸ்டோர் ரூம்ல பாத்தையா அங்க இருக்க சாமான்கள வச்சு கட்டி முடிக்கனும்ன்னா ரொம்ப கஷ்ட்டம். ரெண்டு வருஷம் இல்லை ரெண்டே மாசத்தில் கிராக் விழ ஆரமித்துவிடும்''என்றான்.

பொறுமையுடன் கேட்டுகொண்டிருந்த அகிலன் ‘இத்தனை நாளும் இப்படி தானே மச்சி இருக்கத வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கோம். சரி மச்சி நீ ஒன்னும் கவலைபடாதே நான் போய் பேசிட்டு வரேன். பாப்பாவ பார்த்துக்கோ” என்று சொல்லிட்டு நடக்க ஆரம்பித்தான்.

மாடிப்படி அருகே சென்று ஒரு நாலு படி ஏறியவன் சட்டென திரும்பி ஜெஸிக்காவுடன் விளையாடி கொண்டிருந்த முருகனை பார்த்து ''பாப்பாவ பாத்துகோடா''என்றான்.

முருகன் 'சரி' என்று தலையாட்டினான்.

அகிலன் மேலே ஏற தொடங்கினான் மேலும் மூன்று மாடி ஏறி எட்டாவது மாடியை அடைந்தான். கீழே முருகன் கட்டிடத்தில் அங்குமிங்கும் ஓட அவனை துரத்திக்கொண்டிருந்தார்கள் ஜெஸிக்காவும் மணியும்.

ராம் ஒரு ஓரத்தில் மீண்டும் மழையை வெறித்தபடி அமர்ந்தான்.

எட்டாவது  மாடியை அடைந்த அகிலன் அங்கே நடுநாயகமாக  அமர்ந்திருந்த அந்த கட்டடத்திற்கான  மேனேஜெர் ராகுலை பார்த்து,''ஹாய் சார்''என்றான்.

அவனும் பதிலுக்கு,''வாங்க  மிஸ்டர் அகிலன்''என்றான்.

அங்கு  அவரை தவிர கணக்கபுள்ளை ரத்தினமும் மேஸ்திரி மற்றும் மேலும்  இருவர் அமர்ந்து ஏதோ கணக்கு வழக்குகளை பற்றி  பேசிகொண்டிருந்தார்கள்.

தான் நின்ற இடத்தில்  இருந்து  அவர்கள்  இருந்த  இடத்தை  நோக்கி அடுத்த  அடியை  எடுத்துவைத்தான் அகிலன்.

இன்னமும் ஜன்னல் கதவுகள் அமைக்கபடாத அந்த கட்டிடம் முழுவதும் ஒரு மிகப்ரகாசமான வெளிச்சம் ஆக்கிரமித்தது கண்ணிமைக்கும்  நேரத்தில் அந்த  வெளிச்சம் முடிவதற்குள் பலத்த சத்தத்துடன் இடி ஒன்று விழுந்தது.

'அது அணுகுண்டா' அல்லது 'மின்னலை தொடர்ந்து வந்த இடியா' என அனுமானிப்பதற்குள் அடுத்த மின்னலும் அதை தொடர்ந்து இடியும் அந்த கட்டிடத்தை இன்னுமும் பலத்த சத்தத்துடன் தாக்கியது.

பதினோரு மாடிகளை கொண்ட அந்த உயர்ந்த  கட்டிடம் 'சரசர'வென பூமிக்குள் புதைய தொடங்கியது புதைந்த வேகத்தில் கட்டிடம் இடிந்து நொறுங்கியது.

அந்த பகுதியில் மொத்தமாக மின் தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது.
இடியின் சத்தம் மற்றும் அதனூடே ஏற்பட்ட கட்டிடம் இடிந்த சத்தத்தில் மேலும் அந்த பகுதி மக்கள்  அனைவரும் என்ன நடந்தது என்றே அறியாமல் ஒருவகை பயத்தில் இருந்தார்கள்.

சில ஆண்கள் வீட்டை விட்டு வெளியே எட்டி பார்த்துகொண்டிருந்தார்கள். காபி வாங்கிவிட்டு வந்து தன் முன்னே கட்டிடம் சரிந்து புதைவதை பார்த்த கந்தசாமி சற்று நேரம் என்ன செய்வது என்றே புரியாமல் அதிர்ச்சியடைந்தவராய் அங்கே நின்று கொண்டிருந்தார். மழை கொஞ்சமும் குறையாமல் பலத்த காற்றுடன் அடித்து ஊத்திகொண்டிருந்தது.

ஸ்தம்பித்து நின்ற கந்தசாமி தன் கையில் இருந்த குடையையும் டீ கிளாஸ்களையும் நழுவவிட்டார்.

குடை காற்றில் பறந்து சென்றது அதற்கு எதிர் திசையில் கந்தசாமி ஐயோ! ஐயோ! என கத்திகொண்டே ஓட தொடங்கினார்.

ஓடியவர் அகிலனின் வீட்டு வாசலில் வந்து நின்றார்.

மின்வெட்டு ஏற்பட்டிருந்ததால் ஒரு சிறு சார்ச் லைட்டை வைத்துகொண்டு வீட்டின் வாசல்படியில் வந்து உட்காந்திருந்தார்கள் அகிலனின் அண்ணன் முரளியும் அவர் மனைவி ரம்யாவும்.

முழுவதும் தொப்பலாக நனைந்து வந்து முகம் முழுவதும் பதட்டமும் சொகமுகாக நின்றிருந்த கந்தசாமியை விரைவாக எழுந்து சென்று 'ஐயா உள்ளே வாங்க' என்று அழைத்து ஆசுவாச படுத்தினான்.

அழுகையை அடக்க முடியாதவராய் கந்தசாமி 'ஐயா ஐயா' என்று அலறினார்.

ரம்யாவும் எழுந்து ஓடி வந்து, ''ஐயா என்னங்கையா  ஆச்சு பதட்ட படாதீங்க'' என்று தேற்றினாள்.

அம்மா இடிவிழுந்து கட்டிடம் முழுசா இடிஞ்சு போச்சுமா என்று மீண்டும் அழ தொடங்கினார்.

முரளி அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்பது தெரியாமல் ஐயா ''கொஞ்சம் பொறுமையா இருங்க வாங்க'' என்று சொல்ல ஆரமித்த போதே...

''அந்த கட்டிடத்துக்குள்ள நம்ம அகிலன் தம்பியும் பாப்பாவும் இருக்காங்கய்யா'என்று கதறி அழுதார் கந்தசாமி.

அவரை நம்பாதவளாய்,''இல்லைங்க அவங்க ரெண்டு பேரும் போனிக்ஸ் மால் போனாங்க''என்றாள்.

''இல்லமா அவரு ராம் தம்பிய பார்க்க அங்க வந்தாரு என்னை பார்த்துட்டு தான் மாடில ஏறி போனாரு'' என்று அவர் சொல்லிகொண்டிருக்கும் போதே.

அவரின் பக்கம் நின்றிருந்த முரளி இப்போது அதிர்ச்சியில் உறைந்து நின்ற தன் மனைவியின் அருகில் சென்றான்.

அவனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் அங்கிருந்து ஓட துவங்கினால் ரம்யா.

மழை விடாமல் ஊத்திகொண்டிருந்தது. அவளை தொடர்ந்து முரளியும் கந்தசாமியும் ஓடினார்கள்.

இரண்டு கட்டிடங்களில் ஒன்று முற்றிலும் நொறுங்கி புதைந்து விட்டிருந்ததை அறிந்த அக்கம் பக்கத்து இளைஞர்கள் அங்கே வந்து என்ன செய்வதென்றே புரியாமல் நின்றுகொண்டிருந்தனர்.

அவர்களுள் சிலர் தீயணைப்பு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொண்டிருந்தனர். ரம்யா மற்றும் முரளி அங்கே வந்தார்கள் இடிபாடுகளை நோக்கி ஓடினார்கள் நின்றுகொண்டிருந்த இளைஞர்கள் சிலர் அவர்களை தடுக்க முற்பட்டனர் சிறு வெளிச்சமும் இல்லை பயங்கர இருட்டு ஒரு சில இளைஞர்கள் தங்கள் கையில் வைத்திருந்த டார்ச்சின் உதவியுடன் ரம்யாவையும் முரளியும் பின் தொடர்ந்து சென்றார்கள்.

மழை சற்றே தனிந்து காற்று இல்லாமல் மழை மட்டும் பெய்துகொண்டிருந்தது. டார்ச் வெளிச்சத்தில் ஒரு ஓரத்தில் கிடந்த அகிலனின் பைக்கை பார்த்த ரம்யா ஜெஸிக்கா ஜெஸிக்கா ஜெஸிக்கா! என்று கத்திகொண்டே இன்னுமும் வேகமாக இடிபாடுகளை நோக்கி ஓடினால். எங்கு தேடுவது எப்படி தேடுவது ஒன்றும் புரியவில்லை இங்கும் அங்கும் ஓடினாள்.

தன் மகளின் பெயரை கத்தினாள் கதறினாள்.

கீழே விழுந்தாள் கையில் ஒட்டியிருந்த சகதியுடன் தன் தலையில் அடித்து கதறி அழுதாள்.

முரளி அவள் அருகே வந்து அமர்ந்தவனாக அவளை ஒரு கையில் அணைத்துக்கொண்டு தன்னை கட்டுபடுத்த முடியாதவனாக அவனும் அழுதுகொண்டிருந்தான்.

அந்த இடத்தை அப்போது தான் வந்தடைந்திருந்தார் கந்தசாமி அங்கு என்ன நடந்தது என்றும் நிறைய பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கிறார்கள் என்றும் அங்கிருந்தவர்களிடம் சொல்லிகொண்டிருந்தார். ஏற்கனவே பலர் கூடியிருந்தனர் செய்தி பரவ தொடங்கியவுடன் மிக பெரிய இளைஞர் பட்டாளம் அங்கே வந்து கூடிவிட்டது. மின் தடை மற்றும் எப்படி எங்கிருந்து மீட்பு பணிகளை தொடங்குவது என்பதை புரியாமல் அங்கு கூடியிருந்த இளைஞர்கள் நின்றிருந்தார்கள்.

சைரன் ஒலி எழுப்பிய படி இரண்டு தீயணைப்பு வண்டிகள் வந்து நின்றன அதிலிருந்து ஒரு பத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து இறங்கினார்கள். அவர்களின் கேப்ட்டன் ஒரு டார்ச் லைட்டை எடுத்துகொண்டு இடிபாடுகளை நோக்கி சென்றார் அவர் பின்னே சில வீரர்கள்  சென்றார்கள்.

டார்ச் வெளிச்சத்தில் ரம்யாவை பார்த்த கேப்ட்டன் ''யாருமா அது அங்க இருந்து  தள்ளி போங்கமா'' என சத்தம் போட்டவாரே முன்னேறி சென்றார்.

ரம்யாவும் முரளியும் அந்த கேப்ட்டனை நோக்கி ஓடி வந்தார்கள் சார் ஏன் பொண்ணு உள்ள இருக்கா சார் காப்பாத்துங்க சார் ப்ளீஸ் என்று கதறினார்கள்.

அவர் தனக்கு பின்னே வந்த வீரர் ஒருவரிடம் இவர்களை அப்புற படுத்து என்ற விதத்தில் செய்கை கான்ப்பித்து விட்டு கட்டிட இடிபாடுகளை நோட்டமிட்டார். டார்ச்சுடன் இருந்த மற்ற சில வீரர்களை கட்டிடத்தை சுற்றி அனைத்து பக்கங்களிலும் சென்று நிலைமையை அறிந்து வரும்படியும்.

யாராவது அலறும் சத்தம் கேட்டால் உடனே தெரிவிக்கும் படியும் சொல்லிவிட்டு. தங்கள் வாகனகளை நோக்கி நடந்தார்.

அவர் வாகனத்தை அடைந்த நேரம் ஒரு போலிஸ் ஜீப் அங்கே நின்றிருந்தது சில போலிஸ்கார்கள் கூட்டத்தை ஒதுக்கிகொண்டிருந்தார்கள். கேப்டன்  அங்கிருந்த போலிஸ் உயரதிகாரியை பார்த்து,''சார் மொத்தமா கட்டிடம் புதைந்து இருக்கு. உள்ள எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியல . தெரிஞ்சவங்க யாராவது இருந்தா மொத்தம் எத்தனை பேர் எந்தெந்த மாடில எத்தனை பேர் அப்படிங்கற விசயங்களை கேட்டுவைங்க.  நாம லேட் பண்ண பண்ண ஒவ்வொரு உயிருக்கும் ஆபத்து இங்க உடனே சில டீசல் ஜெனரேட்டர்கள் தேவை மொத்தமா இருட்டா இருக்கு சுத்தி போக்கஸ் லைட் கட்டினா தான் முடியும். கட்டிட இடிபாடுகளை உடைக்க ட்ரிள்ளர்களும் தேவை. பொக்லின் இயந்திரங்கள் இருந்தாலும் பயன்படும். உடனே ஏற்பாடு பண்ணுங்க நாங்க இங்க பத்து பேர் தான் இருக்கோம் வேற தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்து வர சொல்லுங்க. இங்க இருக்க இளைஞர்கள் வாலண்டியர்ஸ் இருந்தா வர சொல்லுங்க''என்று சொல்லிக்கொண்டே தன் வீரர்கள் பக்கம் திரும்பி ஏதேதோ கட்டளைகள் இட தொடங்கினார்.

அந்த போலிஸ் உயரதிகாரி தன் அருகே இருந்த கான்ஸ்டபிளை பார்த்து சிலரை தொடர்புகொண்டு தேவையானவற்றை கொண்டு வர ஏற்பாடு செய்யும் படி சொல்லிவிட்டு தன் ஜீப்பின் மீது ஏறி நின்று அங்கு இருந்த இளைஞர்களை பார்த்து யாராவது வாலண்டியர்ஸ் வந்து உதவி செய்ய முடியுமா என்று கத்தினார்.

பல இளைஞர்கள் முன்வந்தனர்.

அவர்களை தீயணைப்பு வீரர்கள் தலைமையில் குழுக்களாக பிரித்தார் கேப்ட்டன். அவர்களில் எலக்டீர்சியன்கள் சிலர் இருந்தனர் அவர்களை அங்கு சூழ்ந்திருந்த இருளை போக்கும் படி கேட்டு கொண்டார். அவர்கள் விரைந்து செயல்பட தொடங்கினார்கள் அவர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த ஜெனரேட்டர்கள் லைட்டுகள் தேவையான உபகரணங்கள் எல்லாம் வர தொடங்கின. மேலும் பல தீயணைப்பு வீர்கள் போலிஸ் அதிகாரிகள் என பெரிய காக்கி கூட்டமே அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தனர். ஆம்புலன்ஸ்கள் வரவழைக்க பட்டு தயார் நிலையில் நிறுத்தி வைக்க பட்டிருந்தது.

ஆங்காங்கே மின் விளக்குகள் ஒளிர துவங்கின.

ஒரு இரண்டு மணி நேர அயராத உழைப்பில் அந்த இடத்தை சூழ்ந்திருந்த இருளை விரட்டியடித்தார்கள். மேலும் உதவிக்கு பல தீயணைப்பு வீரர்கள் போலிஸ் அதிரடிப்படை வீரர்கள் தன்னார்வ தொண்டு இளைஞர்கள் சில கருவிகள் ஜெனரேட்டர்கள் வந்த வன்னமும் இருந்தன.

கட்டிட இடிபாடுகளை ஆராய்ந்த சில அதிகாரிகளும் பொறியாளர்களும் கட்டிடம் புதைந்து இருக்கும் காரணத்தினால் அது முழுவதும் நொறுங்கி விட வில்லை என்பதை  உறுதிபடுத்தி கொண்டனர். மேலும் பலர் உள்ளே உயிருடன் இருக்க வாய்ப்பு  இருப்பதால் பெரிய இயந்திரங்கள் கொண்டு இடிபாடுகளை உடைத்தால் அது கீழ் உள்ள கட்டிடத்தை முற்றிலும் நொறுக்கி உயிருடன் இருப்பவர்களை நசுக்கிவிடும் என்பதால்.  பல குழுக்கள் அந்த காங்க்ரிட் குவியலை சுற்றிலும் மிகவும் எச்சரிக்கையுடன் மெதுவாக பெரிய அழுத்தம் கொடுக்காமல் காங்க்ரிட் சுவர்களை அறுத்து துண்டு துண்டாக எடுத்துக்க தொடங்கி இருந்தனர்.

வாட்ச்மேன் கந்தசாமியின் தகவல் படி எட்டாவது மாடிக்கு கீழ் தான் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்ட கேப்டன். காங்க்ரிட் இடுக்குகளிலும் பொந்துகளிலும் டார்ச் அடித்து "உள்ள யாராவது இருக்கீங்களா" என்று கத்தி கொண்டிருந்த வீரர்களை பார்த்து முதல் மூன்று மாடிகளில் ஆட்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆதலால் நேரத்தை வீனடிக்காமல் காங்க்ரிட்களை அறுத்து எடுங்கள் என்று கட்டளையிட்டார்.

அந்த நேரத்திலும் மக்களுக்கு சுட சுட செய்தி தருவதற்காக பல செய்தி சேனல்கள் மற்றும் பத்திரிக்கைகளின் நிருபர்கள் கேமராமேன்கள் அங்கு வந்து குவிந்திருந்தனர். அவர்களிடம் சிக்காமல் கந்தசாமி, ரம்யா மற்றும் முரளியை காவல்துறை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். நிருபர்கள் அங்கு வேடிக்கை பார்த்துகொண்டிருந்தவர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பி கொண்டிருந்தனர். அங்கிருந்த காவல்துறையினரை அனுகி விபரங்கள் சேர்க்க முயற்சி செய்தார்கள்.

எந்த காவலரும் இவர்களுக்கு பதிலளிக்கும் நிலையில் இல்லை. காவல்துறை ஆனையர் மட்டும் முன்னே வந்தார் அனைத்து நிருபர்களும் முந்தியடித்துகொண்டு மைக்குகளை நீட்டினார்கள்.

அனைவரும் பல கேள்விகளை கேட்டதில் அவருக்கு எதுவம் காதில் விழவில்லை. கைகளை உயர்த்தி அமைதியாகும் படி கேட்டார்.

சற்று அமைதியானார்கள் தயவுசெய்து எங்களை வேலை செய்யவிடுங்கள் நாளை உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறோம் என்று கூறிவிட்டு சட்டென திரும்பி நடக்க துவங்கினார்.

''சார் ஒரே ஒரு கேள்வி! ஒரே ஒரு கேள்வி!'' என கூவிகொண்டிருந்தவர்களை கொஞ்சமும் சட்டை செய்யாமல் ஒரு அதிகாரியை அழைத்து ''விக்டிம்ஸோட சொந்தகாரங்க யாராவது வந்தா இங்கே கொண்டு வந்திருங்க பத்திரிகைக்காரங்க கைல சிக்கிடாதீங்க பாவம்"என்று சொல்லிவிட்டு இடிபாடுகளை நோக்கி சென்றார்.

செய்திகள் காட்டு தீ போல தமிழகம் எங்கும் பரவ தொடங்கின.

நிருபர்களுக்கு தீனியாக தலைவிரி கோலமாக ஒரு பெண் ஓடி வந்துகொண்டிருந்தார்.

அத்தனை கேமராக்களும் மைக்குகளும் திடுமென அவளை சூழ்ந்துகொண்டனர். ஐயா ஏன் மவன்யா முருகன்யா உள்ள இருக்கான்யா ஐயா காப்பாத்துங்கயா காப்பாத்துங்கயா முருக முருக ஏன் ராசா என கத்திகொண்டிருந்தவளை ஓடி வந்த களைப்பும் திடிரென சூழ்ந்த மக்கள் கூட்டத்தால் ஏற்பட்ட வெக்கையும் மயக்கமுற செய்ததது.

பொழுது விடிந்தது அன்று காலையில் அத்தனை செய்திதாள்களிலும் இந்த செய்தியே முதல் பக்கத்தை ஆக்கிரமித்திருந்தது. ஆளும்கட்சியிலிருந்து மீட்பு பணிகள் துரிதமாக நடப்பதாகவும் எதிர்கட்சியில் இருந்து மீட்பு பணிகள் தாமதமாக தொடங்கி மிகவும் மந்தமாக நடப்பதாகவும் அறிக்கையும் வந்தது. காவல்துறை தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் என மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவரும் கொஞ்சமும் ஓய்வில்லாமல்  தங்கள் பணிகளை செய்து கொண்டிருந்தனர். சில இடிபாடுகள் அப்புறபடுத்த பட்டிருந்த  போதும் யாரும் இன்னும் மீட்க்கப்படவில்லை.

ஒரு ஓரத்தில் ரம்யா தலை கை கால்களில் காய்த்து போய்  இருந்த சேறும் சகதியுமாக இடிபாடுகளை வெறித்து பார்த்துகொண்டிருந்தாள் அவள் அருகில் முரளி அவளை அசுவாசபடுத்தி கொண்டிருந்தான்.

சற்று தொலைவில் ரம்யாவின் தாயும் தந்தையும் வந்துகொண்டிருந்தார்கள். ரம்யாவின் நிலையை கண்டு தாங்கமுடியாமல் அவளின் தாயார் ஐயோ என அழ தொடங்கினாள். அவளின் தந்தை தன் கைகளால் வாயை மூடிக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுதுகொண்டிருந்தார். கண்களில்  இருந்து  கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது.

அவரின் அருகில் வந்த முரளி அவரை தன் நெஞ்சோடு அனைத்து கொண்டார்.

சோகத்தை கட்டுபடுத்த முடியாதவராக மாப்ள! மாப்ள! என்று கூறிக்கொண்டே அழுதுகொண்டிருந்தார்.

''அழுகாதீங்க மாமா பாப்பாவுக்கு ஒன்னும் ஆகிருக்காது. இந்த வேலை செய்ற வாட்ச்மேன் கூடா பாப்பாவும் அகிலனும் எட்டாவது மாடிக்கு போனதா சொல்றாரு. கட்டடம் ரொம்ப உடையாம முழுசா புதைஞ்ச மாதிரி இருக்குறதால அவங்களுக்கு எதுவம் ஆகிருக்காது. இன்னைக்கு மதியத்துக்குள்ள எப்படியும் எட்டாவது மாடி வரை உடைச்சு போய்டுவாங்க. கண்டிப்பா பாப்பாவும் அகிலனும் பத்திரமா வந்துருவாங்க மாமா.''

''எப்படி மாப்ள அழுகாம இருக்க முடியும் சின்ன பொண்ணு எப்படி மாட்டிகிட்டு எப்படி தவிக்கிறாளோ?'' என்று சொல்லும் போதே. முரளியின் கண்கள் குளமாயின அழுகையை அடக்க வேறு பக்கம் முகத்தை திருப்பி முயற்சி செய்தான் முடியவில்லை. இரண்டு கைகளாலும் முகத்தை முடிகொண்டு அப்படியே உட்காந்து அழ ஆரமித்து விட்டான்.

அங்கு கூடி இருந்தவர்கள் அவர்களை சமாதனபடுத்தினார்கள். சற்று நேரத்தில் சமாதானமான முரளி தன் மாமாவை அழைத்து அத்தையையும் ரம்யாவையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு செல்லும்படி கூறினான். நகராமல் பிடிவாதமாய் அமர்ந்திருந்த ரம்யாவையும் ஒருவழியாக சமாதனபடுத்தி அவள் பெற்றோருடன் அனுப்பிவைத்துவிட்டு.

இடிபாடுகளை  நோக்கி ஓடினான்.

அங்கிருந்த ஒரு அதிகாரியிடம்,''எத்தனை மாடி சார் தோண்டிருக்காங்க என்று வினவினான்.

''இப்போ தான் சார் பத்தாவது மாடி முடிச்சு ஒன்பதாவது மாடியவே பார்த்திருக்காங்க, நைட்டு நிறைய ஆள் இல்ல தோன்றத்துக்கு தேவையான பொருளும் நிறைய இல்லை. கட்டடம் மொத்தமா அமுக்கிராம பார்த்து பார்த்து தான் உடைக்க வேண்டி இருக்கு, மழை வேற விடாம பேய் மாதிரி அடிக்குது" என்றார்.

''நைட்டு வேலை பார்த்துகிட்டு இருந்த யாரும் இப்ப வரை ஒரு டீ கூட குடிக்காம வேலை பார்த்துகிட்டே தான் இருக்காங்க. இன்னைக்கு காலைல இருந்து இப்போ நிறைய பயர் சர்வீஸ் ஆளுங்க நம்ம  பாதுகாப்பு படையோட சேர்ந்து தேசிய மீட்ப்புப்படை ஆளுங்க எல்லாம் வந்து ரொம்ப வேகமா வேலை பார்த்துகிட்டு இருக்காங்க. கவலை படாதீங்க அந்த வாட்ச்மேன் சொன்ன மாதிரி உங்க பொண்ணு எட்டாவது மாடில இருந்தா இன்னைக்கே காப்பாத்திருவாங்க.''

தன் மகளை காப்பாற்ற  தானும் ஏதாவது வேலை செய்யவேண்டும் என்பது போல் அங்கு கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட கற்களுடன் நின்றுகொண்டிருந்த ஒரு மூன்று சக்கர வாகனத்தை தள்ளி கொண்டு தூரத்தில் கொட்டிவிட்டு திரும்பி வந்தான் முரளி.

- தொடரும்