வியாழன், 1 அக்டோபர், 2020

பாபாவும் நானும் (4) - வேண்டுதல்

ஓம் சாய்ராம்


இதற்கு முந்தைய பதிவைப் படிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்

பாபாவும் நானும் - அறிமுகம்



ஓம் சாய்ராம்,

சென்ற வாரம் என் வேலை பறிபோனதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். எனக்கு வேலை பறிபோக முக்கியக் காரணம் எங்கள் அலுவலகத்தில் தலைமை நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றமே. நான் வேலையிழக்கும் முன்னரே சில தலைமை நிர்வாகிகள் மாற்றப்பட்டு ஒரு சீக்கியர் எங்கள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கு முன் ஒரு ஆஸ்திரேலியர் அந்தப் பொறுப்பில் இருந்தார்.

புதிதாக பொறுப்பேற்றிருந்த தலைமை நிர்வாகிக்கு என்னைப் பற்றி எதுவும் தெரியாது. அவர் என்னிடம் இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று மட்டுமே வாதாடிக்கொண்டிருந்தார். அவரிடம் வாதாடி ஒன்றும் செய்ய முடியாது என்று மட்டும் தெரிந்துகொண்டேன். அவர் தன்னால் முடிந்த உதவியைச் செய்வதாகக் கூறினார். என் வேலையைத் திருப்பித் தாருங்கள் என்பதைத் தவிர வேறு என்ன நான் கேட்க முடியும்?

எனக்கு இரண்டு மாதங்கள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அதைப் பணமாகக் கொடுத்து அன்றே என்னை வேலையை விட்டு நீக்கிவிடலாம். இல்லை மேலும் இரண்டு மாதங்கள் வேலை செய்து விட்டுச் செல்லலாம். நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன். காரணம் சிங்கப்பூரில் நான் எம்ப்ளாய்மெண்ட் பாஸ் என்று அழைக்கப்படும் வேலை அனுமதி விசாவில் வேலை செய்து வருகிறேன். அந்த வேலை அனுமதி விசா நான் வேலை செய்யும் நிறுவனத்தின் வழி தான் எனக்குக் கிடைக்கும். ஒருவேளை அன்றே என் வேலைப் பறிக்கப்பட்டால் நான் அந்த நிறுவனத்தின் ஊழியன் அல்ல. அப்போது என் விசா தானாக ரத்து செய்யப்பட்டுவிடும். வேலை அனுமதி விசா ரத்து செய்யப்பட்டுவிட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு சோசியல் விசிட் என்றழைக்கப்படும் சுற்றுலா விசா வழங்கப்படும். அந்த ஒரு மாதத்திற்குள் நான் வேலை தேடவேண்டும் இல்லாவிட்டால் இந்தியாவிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும்.

அதே நான் மேலும் இரண்டு மாதங்கள் இதே நிறுவனத்தில் இருப்பதன் மூலம் எனக்கு வேலை தேட மூன்று மாதங்கள் கிடைக்கும்.  தலைமை நிர்வாகியான அந்த சீக்கியர் உனக்கு என்ன உதவி வேண்டுமோ கேள் செய்கிறேன் என்ற அந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவரிடம் ஒரு விண்ணப்பம் வைத்தேன். அதாவது நான் இரண்டு மாதங்கள் இங்கே வேலை செய்கிறேன் அதே நேரம் எனக்கு இடையில் வேறு ஏதாவது வேலை வாய்ப்பு வந்தால் அதனை நான் உடனடியாக எடுத்துக்கொண்டு சென்றுவிடுவேன். இரண்டு மாதங்கள் முழுமையாக இருக்க மாட்டேன் என்றேன்.

அவரும் பதிலுக்கு நீ இரண்டு மாதங்கள் இங்கே முழுதாக வேலை செய்தால் நான் இரண்டு மாதங்களுக்கான சம்பளத்தைத் தருவேன் நீ இடையில் சென்றுவிட்டால் நோட்டீஸ் பீரியடுக்கான சம்பளத்தைத் தரமாட்டேன். நீ எப்போது வரை வேலை செய்கிறாயோ அதுவரை உள்ள சமபளத்தை மட்டுமே தருவேன் என்றார். அவர் சொன்னது எனக்கு ஏற்புடையதாகத் தானிருந்தது.  சில வேலை வாய்ப்புகள் உடனடியாக சேர்ந்துகொள்ளும் படியிருக்கும். நோட்டீஸ் பீரியடைக் காரணம் காட்டி அப்படிப்பட்ட வேலை வாய்ப்புகளை இழந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டேன்.

என்னுடைய வேலை தேடும் படலம் தொடங்கியது. அதுநாள் வரை தாடியோடு திரிந்த நான் முகத்தைச் சிரைத்துக் கொண்டேன். எங்கோ டப்பாவிற்குள் புதைந்து கிடந்த டையைத் தேடி எடுத்தேன். அழுக்கேறி இருந்து கருப்பு சப்பாத்துகளைத் துடைத்து கருமை பூசினேன். பொதுவாக நான் என் அலுவலகத்திற்கு டீ-சர்ட் ஜீன்ஸ் மற்றும் கேன்வாஸ் அணிந்து தான் செல்வேன். நேர்முகத்தேர்விற்கு அப்படிச் செல்ல முடியாது. 

அதுநாள் வரை வேலை தேடவேண்டும் என்ற எண்ணமே இல்லாமலிருந்ததால் ரெஸ்யும் (Resume - பயோட்டா) கூட தயாரித்து வைக்கவில்லை. அன்று இரவு தான் நான் இதற்கு முன் எத்தனை நிறுனங்களில் வேலை செய்தேன் என்னென்ன ப்ராஜெக்ட்கள் செய்திருக்கிறேன் என்று கணக்கெடுத்து ரெஸ்யுமை தயார் செய்தேன். உண்மையில் இந்த ரெஸ்யும் தயார்செய்வதென்பது மிகப் பெரிய வேலை. நாம் சொல்வது உண்மையாகவும் இருக்க வேண்டும் உண்மை போலவும் இருக்க வேண்டும் நேர்முகத் தேர்வில் பதில் சொல்லக்கூடியவற்றை மட்டும் போட வேண்டும் அதே நேரம் நம்முடைய விண்ணப்பத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கத் தேவையான அத்தனையும் போட வேண்டும். எப்படியோ ஒரு இரண்டு நாள் உழைப்பில் என் ரெஸ்யும் தயாரானது. 

அடுத்து விண்ணப்பிக்கத் தொடங்கினேன் கண்ணில் படும் வேலைகளுக்கெல்லாம் விண்ணப்பித்தேன். இரவு முழுவதையும் படித்தே கழித்தேன். புதிதுபுதிதாக நிறையக் கற்றுக்கொண்டதை விட மறந்து போன பலவற்றை மீண்டும் மீண்டும் படித்து ஞாபகப்படுத்திக் கொண்டேன். நான் டாட் நெட் வேலைக்கு விண்ணப்பித்திருப்பேன் அவர்கள் என்னை அலைபேசியில் அழைத்து ஜாவா தெரியுமா? டெல்பி தெரியமா? C++? என்பார்கள். எனக்குத் தெரியும் ஆனால் வேலை அனுபவம் இல்லை வாய்ப்புக் கொடுத்தால் வேலையைக் கற்றுக்கொள்வேன் என்பேன். சரி மீண்டும் அழைக்கிறேன் என்பார்கள். அப்படிச் சொன்ன எந்த அழைப்பும் அதன் பின் வந்ததேயில்லை. இங்கு யாருக்கும் வேலை பழக வாய்ப்பு கொடுக்கமாட்டார்கள். வேலை செய்யத் தெரிந்தால் மட்டுமே வாய்ப்பு. 

இப்படியே இரண்டு வாரங்கள் ஓடியது. ஒரேயொரு நேர்முகத்தேர்வு மட்டும் தான் வாய்த்திருந்தது அதிலும் எழுத்துத்தேர்வு. அதற்கு முன் பத்துவருட வேலை அனுபவம் இருந்தாலும் எழுத்துத்தேர்வு எழுதினால் தான் அடுத்த கட்ட நேர்முகத்தேர்விற்குச் செல்ல முடியும். நான் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டேன். ஆனால் எங்கோ ஏதோ சொதப்பிவிட்டது. நன்றாகத் தான் தயார் செய்திருந்தேன். கிட்டத்தட்ட நான் எதிர்பார்த்த கேள்விகள் தான் அத்தனையும் எனக்கு நன்றாக தெரிந்தவைகள் தான். ஆனாலும் திக்கித் திணறி கோட்டைவிட்டுவிட்டேன். அவர் வாயளவில் மீண்டும் அழைக்கிறேன் என்று கூறினாலும் அவர் அழைக்கமாட்டார் என்று என் உள்ளம் கூறியது. வாய் ஓயாமல் பாபாவின் நாமம் சொல்லிக்கொண்டிருந்தது.

மேலும் இரண்டு வாரங்கள் ஓடின அந்த அலுவகத்தில் இருந்து எந்த அழைப்பும் இல்லை. வேறு எந்த அலுவகத்தில் இருந்தும் சாதாரணமாக வரும் நேர்முகத் தேர்வுக்கான விசாரிப்பு அழைப்புகள் கூடயில்லை. என் நண்பர் சுதர்சன் அண்ணனுக்கு விசயத்தைக் கூறினேன். அவர் எனக்காக அவருக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டார். அவர் வழியில் சில நிறுவன மேலாளர்கள் என்னை அழைத்தனர் ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பும் என் வேலையும் ஒத்துப்போகவில்லை. அவர்களுக்கு கணக்கர்கள் (அக்கொண்ட்ஸ்) தேவையாக இருந்தார்கள்.  

"கவலைப்படாத தம்பி பாபா உன் கூட இருக்காரு." என்று சுதர்சன் அண்ணன் நம்பிக்கையூட்டினார்..

இந்தத் தருணத்தில் எனக்கு அழைத்து ஆறுதல் சொல்லி எனக்காக தன் நண்பர்களிடமெல்லாம் வேலை கேட்ட அண்ணன் ஸ்ரீகாந்த் மற்றும் பல நண்பர்களை நான் இங்கு நினைவு கூறுகிறேன். அவர்கள் அளித்த தன்னம்பிக்கையும் பிராத்தனையும் தான் என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது.

ஒவ்வொரு வியாழனும் தவறாமல் பாபாவைத் தரிசித்துக்கொண்டிருந்தேன்.
வேலை பறிபோன அந்தத் தம்பியைப் பேருந்தில் சந்தித்து நான்கு வாரங்கள் ஓடிவிட்டன. அவரை அதன் பின் நான் சந்திக்கவேயில்லை. இன்னும் ஒரு மாதம் தான் இந்த வேலையில் நான் ஒட்டிக்கொண்டிருக்க முடியும். ஒரு வேலை செய்யும் போதே இன்னொரு வேலை கிடைக்கும் பட்சத்தில் நம் சம்பளத்தைக் குறைக்க மாட்டார்கள். வேலையில்லாமல் சென்றோமானால் முடிந்தமட்டும் பேரம் பேசிக் குறைப்பார்கள். நமக்கும் வேறு வழியிருக்காது. 

பொதுவாக கணினித்துறையில் ஒரு நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்து அதன் பின் நேர்முகத்தேர்விற்கான தேதியைக் குறிக்கவே ஒரு வாரம் ஆகும் அதன் பின் அதற்கான முடிவு சில நேரம் ஒரு மாதம் கூட ஆகலாம். இப்போது வரை எனக்கு ஒரு அழைப்புகூட வரவில்லை. 

இப்படியாக ஒரு வியாழன் காலை என்ன செய்வது என்று குழம்பிக்கொண்டிருந்தேன். பொதுவாக கஷ்டங்கள் எதையும் வீட்டில் சொல்லக்கூடாது என்று நினைப்பேன் ஆனால் ஒருவேளை மொத்தமாக வேலையே கிடைக்காமல் ஊருக்குச் சென்றால் அவர்களுக்குப் பேரதிர்ச்சியாக இருக்குமே என்பதற்காக என் அம்மாவிடம் சொல்லி வைத்திருந்தேன். ஒவ்வொரு நாளும் மாலையில் தான் என் அம்மாவிற்கு அழைப்பேன். அன்று ஏனோ என் அம்மா அதிகாலையிலேயே என்னை அழைத்தார்.

"குமாரு ஒண்ணும் கவலை படாதப்பா. நல்லா சாமியக்கும்பிடு. நம்ம குல தெய்வம் உன்னை கைவிடமாட்டாரு. அப்படியே இங்க வந்தா கூட என்னடா இங்க ஒரு வேலையப் பார்த்து பொழச்சுக்கலாம். சும்மா கவலைப்படாம தைரியமா இரு..."

இப்படி எனக்குத் தைரியம் சொல்லிக்கொண்டே ஒரு கட்டத்தில் அவர் அழுது விட்டார். எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. என் அம்மாவிற்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. நான் என்னை கட்டுப்படுத்திக் கொள்வதே பெரும்பாடாக இருந்தது. ஒருவழியாக அப்படி இப்படி ஏதோ பேசி அவரே அறுதல் படுத்திக்கொண்டு எனக்கும் ஆறுதல் கூறினார். 

அழைப்பைத் துண்டித்துவிட்டு கண்ணாடி முன் மஞ்சள் துணியின் மீது இருந்த பாபா படத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். என் அம்மா அழுதது என்னை ஏதோ செய்தது என் இதயம் நெஞ்சாங்கூட்டின் மத்தியில் வந்து ஓங்கி ஓங்கி இடிப்பது போல் உணர்ந்தேன். உடலின் படபடப்பில் உஷ்ணம் ஏறி கண்ணீர் தாரை தாரையாக ஊற்றியது. 

"பாபா நீ தான் எனக்கு. உன்னைத் தவிர நான் உதவி கேட்க வேற யாருமில்லை. ஒரு மாசம் ஓடிடுச்சு வேலை கிடைக்கிறதுக்கு ஒரு அறிகுறி கூடயில்லை. இன்னைக்கு வியாழக்கிழமை. உன்னோட நாள். இந்தநாள்ல எனக்கு ஏதாவது ஒரு அறிகுறி காட்டு. குறைந்தபட்சம் ஒரு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாவது வரணும். இன்னைக்கு சாயங்காலம் உன்னை நான் பார்க்க வர்றதுக்கு முன்ன இது நடந்தே ஆகணும் ஆமா...."

கண்களைத் துடைத்துக்கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினேன். அந்த நாளில் எனக்கு என்ன நடந்தது. என் வேண்டுதலுக்கான பாபாவின் அருள் மழை எப்படிப் பொழிந்தது. அடுத்த வாரம் எழுதுகிறேன்.

ஓம் சாய்ராம். 

- சாயி நாமம் ஒலிக்கும்

ஜெயக்குமார்

வியாழன், 24 செப்டம்பர், 2020

பாபாவும் நானும் (3) - பாடமாய் வந்த பாபா




இதற்கு முந்தைய பதிவைப் படிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்

பாபாவும் நானும் - அறிமுகம்

பாபாவும் நானும்(2) - படமாய் வந்த பாபா

ஓம் சாய்ராம். கடந்த இரண்டு பதிவுகளில் பாபா என்னை எப்படி அவர்பால் ஈர்த்தார் என்பதைக் கூறியிருந்தேன். இந்த வாரம் அவர் எனக்குத் தந்த ஒரு பாடத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

பாபாவின் அறிமுகம் கிடைத்தப் பின் ஒவ்வொரு வியாழனும் தவறாமல் கோவிலுக்குப் போகத் தொடங்கிவிட்டேன். கோவிலுக்குச் செல்லும் நாள்களில் அசைவ உணவைத் தவிர்த்தேன். கூடுமானவரை கோவிலுக்குச் சென்று திரும்பும் வரை அசைவ உணவை உண்ணாமலிருந்தேன்.

நான் வேலை பார்த்துக்கொண்டிருந்த நிறுவனத்தில் என் மதிப்பு உயர்ந்துகொண்டே இருந்தது. நானும் கடுமையாக உழைத்து என்னை நிரூபித்துக்கொண்டிருந்தேன். 2014ம் ஆண்டுக்கான சிறந்த குழு (Best Team) விருது எங்கள் குழுவிற்குக் கிடைத்தது. எங்கள் குழுவில் நானும் என் நண்பர் ஒருவரும் தான் முக்கியப் புள்ளிகள். என் நண்பர் எனக்கு முன்பிருந்தே இந்த அலுவகலத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அவர் தான் என்னை இந்த வேலைக்குப் பரிந்துரை செய்தவர். முன்பு செய்துகொண்டிருந்த வேலையை விட இங்கே வேலை அதிகம் என்றாலும் சம்பளமும் அதற்கு ஏற்றாற்போல் கொடுத்தார்கள். கற்றுக்கொள்ளவும் நிறைய கிடைத்தது.

என் நண்பர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் அவர் ஆஸ்திரேலியா போய் அங்கே செட்டில் ஆகும் முயற்சியில் இருந்தார். காலம் கைக்கொடுக்க எங்கள் அலுவலகத்தின் ஆஸ்திரேலியக் கிளையில் அவர் பணிபுரியக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு அங்கே சென்றுவிட்டார். நான் சிங்கப்பூரை விட்டுக் கிளம்பினால் மதுரைக்குத் தான் திரும்ப வேண்டும் என்ற முடிவில் இருப்பதால் அந்த மாதிரி முயற்சிகளில் ஈடுபடவில்லை. சுற்றிப்பார்க்க வாவென்று நண்பர் அழைத்துக்கொண்டே இருக்கிறார். பாபாவின் அருளால் இந்தக் கொரோனாவும் திருகையில் அரைபட்ட கோதுமையாய் காற்றோடு கரைந்து காணாமல் போகும் நாள் வெகு விரைவில் வரும். அதன் பின் உலகைச் சுற்றலாம் என்று காத்துக்கொண்டிருக்கிறேன்.

நண்பர் ஆஸ்திரேலியா சென்ற பின், வேலை, வீடு. வியாழக்கிழமைகளில் பாபா கோவில் என்று நாள்கள் வேகமாக நகர்ந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு நடுத்தரக் குடும்ப இளைஞனின் கனவு போல நானும் என் கனவு இல்லைத்தைக் கட்டிக்கொண்டிருந்தேன். என் கல்லூரி நண்பன் ஒருவனிடம் ஒரு தொகையையும் வங்கியில் ஒரு தொகையையும் கடனாகப் பெற்று வீட்டைக் கட்டி முடித்திருந்தேன். பெண் பார்க்கும் படலத்தை என் அம்மா ஒரு பக்கம் தொடங்கியிருந்தார். என்ன தான் கனவு இல்லம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டாலும் வாங்கிய கடன் மூட்டையாக முதுகில் ஏறி அமர்ந்து சிரித்தது.

2014 டிசம்பரில் அந்த ஆண்டிற்கான செயல்திறன் மதிப்பீடு (performance appraisal) தொடங்கியது. என் மேலாளர் ஒரு மலாய் பெண்மணி பலமுறை அவரிடம் நல்ல பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறேன். நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக எனக்கு 4.3/5 மதிப்பெண் கொடுத்தார். இது அதற்கு முன் வரை வேறு எந்த நிறுவனத்திலும் நான் பெறாத மதிப்பெண். சம்பளம் கூடியது. ஜனவரி தொடக்கத்தில் ஒரு மாத போனஸ் லம்ப்பாக வந்து விழுந்தது. நான் பிப்ரவரி மாதம் ஊருக்குப் போக விண்ணப்பித்தேன். எந்தக் கேள்வியும் இல்லாமல் என் விடுமுறை விண்ணப்பத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பிப்ரவரி இரண்டாவது வாரம் ஊருக்குப் போக எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தேன்.

ஒரு வியாழக்கிழமை எப்போதும் போல அலுவகத்தில் இருந்து கிளம்பி பாபா கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்தேன். எனக்கு இரயில் பயணங்களை விட சிங்கப்பூர் பேருந்து பயணங்கள் மிகவும் பிடிக்கும். அதுவும் மாடியில் ஏறி அமர்ந்துகொண்டு குளுகுளுவென ஏ.சியில் செல்வதென்றால் ஒரு அலாதி இன்பம் தான். அன்று சிரங்கூன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 147 ஆம் எண்கொண்ட பேருந்தில் ஏறினேன். மாடியில்லாத ஒற்றைப் பேருந்து. கிட்டத்தட்ட காலியாகத் தானிருந்தது. பேருந்திற்குள் நுழைந்தவுடன் இருக்கும் மஞ்சள் இருக்கைகள் கர்ப்பிணிகள், வயதானவர்கள் அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கானது. அங்கே அமர்ந்தால் வயதானவர்கள் வரும்போது எழுந்து நிற்கும் சூழல் ஏற்படும். அதனால் நான் பின்னால் இருக்கும் இருக்கைகளுக்குச் சென்றேன். கதவுக்கு அருகில் முன்பக்கம் பார்த்திருக்கும் இரண்டு ஜோடி இருக்கைகள். அதற்கு பின் எதிர் எதிர் திசையில் இரண்டு இரண்டாக நான்கு இருக்கைகள் இருக்கும். நான் ஏறும் போது நான்கும் காலியாகத் தானிருந்தது. நான் ஒரு சன்னல் ஓர இருக்கையில் அமைந்துகொண்டேன்.

பேருந்து நகர்ந்து அடுத்த பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றது. ஒரு ஆறேழு பேர் ஏறினார்கள். அதில் ஒரே ஒரு இந்திய உருவமும் ஏறியது. நல்ல ஓங்கு தாங்கான உடல் வாகு. தமிழன் என்று அடையாளம் சொல்லும் நிறம். தொப்பை நெஞ்சு எல்லாமே அவரின் சட்டைப் பொத்தான்களைப் பிய்த்துவிட்டு வெளியே வரத் துடித்துக்கொண்டிருந்தன. அவரும் ஏதோ பரபரப்புக் குறையாதவராக மண்டையைச் சொரிவதும், கையை முறுக்குவதும், காதைத் தேய்ப்பதுமாக வித்தியாசமாக எதையோ செய்துகொண்டிருந்தார். அவரை நேருக்கு நேர் பார்ப்பதை நான் முடிந்தவரைத் தவிர்த்துகொண்டிருந்தேன். நான் மட்டுமல்ல பேருந்தில் இருந்த பலர் அவரை ஒரு வித்தியாசமான ஜந்துவாகத் தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அவரின் நடவடிக்கைகள் மேலும் மேலும் அவரின் மன அழுத்தத்தை வெளிக்காட்டிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு இருக்கையாக மாறி மாறி அமர்ந்துகொண்டிருந்தார். அவர் எங்கெல்லாம் சென்று அமர்கிறாரோ அங்கே அருகில் அமர்ந்திருப்பவர் முகம் சன்னலுக்கு வெளியே சென்றுவிடும். அவரைக் கண்ணோடு கண் பார்த்தாலே எதுவும் பேசிவிடுவாரோ என்ற அச்சத்தில் பார்க்காதது போலவே அத்தனை பேரும் நடித்திக்கொண்டிருந்தோம். அங்க சுத்தி இங்க சுத்தி அண்ணன் என் பக்கத்திலேயே வந்து அமர்ந்துவிட்டார்.

என்ன செய்வானோ ஏது செய்வானோ என்று நெஞ்சு படக் படக் என்று அடித்துக்கொண்டிருந்தது.

"அண்ணே... அண்ணே..." அவன் தான் என்னை அழைக்கிறான். மெதுவாக அவன் பக்கம் முகத்தைத் திருப்பி. உதடுகளைச் செயற்கையாக விரித்து. ஒரு இளிப்பு இளித்தேன்.

"அண்ணே.... எனக்கு வேலை போயிருச்சுண்ணே. என்ன பண்றதுன்னே தெரியலண்ணே? ஊர்ல நிறைய கடனை வாங்கி இந்த வேலைய வாங்கிட்டு வந்தேண்ணே. "

அவன் சொல்லச் சொல்ல எனக்கே என் மேல் ஒரு அருவருப்பு உண்டானது. 'ச்ச ஒரு மனுசன் அவனோட கஷ்டத்தைச் சொல்ல ஆள் கிடைக்காம அலைஞ்சிருக்கான். அதைப் புரிஞ்சுக்காம எவ்வளோ கேவலமா நடந்துக்கிட்டு இருந்திருக்கேன்' மனதிற்குள் என்னை நானே திட்டிக்கொண்டு அவன் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டேன்.

"ஊர்ல ரொம்ப கஷ்டம்ணே அதான் இங்க வந்து எப்படியாவது சம்பாதிச்சுரலாம்ன்னு வந்தேன். ஆறு மாசத்துல திடீர்னு வேலையில்லை. நீ கிளம்புன்னு சொல்லிட்டாங்கண்ணே"

"ஒண்ணும் கவலைப் படாதீங்க தம்பி. நீங்க காசு கொடுத்து வந்திருந்தா ஒரு ஏஜென்ட் வச்சுத் தானே வந்துருப்பீங்க? அவரை காண்டாக்ட் பண்ணுணீங்களா?"

"அவர்ட்ட கேட்டா நான் என்ன தம்பி பண்றது நல்ல கம்பெனில தான் சேர்த்துவிட்டேன். அவனுக ஏன் திடீர்ன்னு இப்படி பன்னுனானுகன்னு தெரியல. வேற வேலை வந்தா சொல்றேன்னு சொல்றாரு"

"வேற யாராவது ஏஜென்ட்டு கிட்ட கேட்டுப் பார்த்தீங்களா?"

"ஒரு ஏஜன்ட்ட தாண்ணே பார்க்க போய்கிட்டு இருக்கேன். ஆனால் மறுபடி வேலைக்கு காசு கட்ட சொல்லுவானுகண்ணே. என்ன பண்றதுன்னே தெரியல?"

"எனக்கு உங்க லைன் பத்தி அந்த அளவுக்குத் தெரியாது தம்பி. ஆனால் நீங்க இதை நினைச்சு ரொம்ப வருத்தப் படாதீங்க. மூணு லட்சம் நாலு லட்சம் பணம் கட்டி வர்றீங்க. இங்க என்ன கோடிக்கணக்காவா சம்பாதிக்கிறீங்க. ஒருநாளைக்கு பதினெட்டுல இருந்து இருபத்து நாலு வெள்ளி. மாசம் ஐநூறு அறநூறு வெள்ளி அதிகபட்சம் ஓவர் டைம் பார்த்தா எண்ணூறு வெள்ளி. இதுல தான் உங்க சாப்பாடு மற்றதெல்லாம் பார்க்கணும். தங்குறதுக்கு மட்டும் கம்பெனி இடம் தர்றான். எவளோ தான் கஷ்டப்பட்டுச் சேர்த்தாலும் வருசத்துக்கு ஒரு தடவை ஊருக்குப் போனா எல்லாம் காலியாகி மறுபடி வெறும்பயலா இங்க வந்து தொடங்கனும். ஊர்லையே நிறைய நல்ல தொழில் வேலை எல்லாம் இருக்குத் தம்பி. ஒரு கொத்தனார் மாசம் முப்பதாயிரம் சம்பாதிச்சுருறாரு திறமையும் உழைப்பும் இருந்தா எங்கன்னாலும் போய் பொழச்சுக்கலாம் தம்பி. ரொம்ப கவலைப் படாதீங்க."

"உண்மை தாண்ணே. தேவையில்லாம கடனை வாங்கி ஏஜென்ட்டுகிட்ட கொடுத்துட்டு அதுக்கு வட்டி கட்டத் தாண்ணே இங்க பாதிப் பேர் உழைச்சுகிட்டு இருக்கான். ஒரு ரெண்டு மூணு வருசமாவது உழைச்சாத்தான் இந்தக் கடன்லாம் அடைச்சுட்டு கொஞ்சம் காசு பார்க்க முடியுது. அதுலயும் தண்ணி தம்முன்னு கெட்ட பழக்கம் இருந்தா முடிஞ்சது"

"இவ்வளோ தூரம் தெளிவா பேசுறீங்க. அப்பறம் என்ன பயம். கவலைய விட்டுத்தள்ளுங்க. இந்தியாவுல இருந்து சிங்கப்பூர்ல இருக்க வேலைய கண்டுபுடிச்சு வந்துட்டீங்க. இப்போ சிங்கப்பூர்லையே இருக்கீங்க உங்களால நிச்சயம் முடியும். முயற்சி பண்ணுங்க. சீக்கிரமே நல்ல வேலை கிடைச்சு உங்க கடனெல்லாம் அடைச்சுருவீங்க. உங்க நம்பர் குடுங்க நான் யார்கிட்டயாவது விசாரிக்கிறேன். வாய்ப்பிருந்தா கால் பண்றேன்"

"அதல்லாம் வேண்டாமண்ணே. பரவால்லண்ணே. உங்க கிட்ட பேசுனதே எனக்கு தெம்பா இருக்குண்ணே. ரொம்ப நன்றிண்ணே."

நான் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தம் வந்தது. "சரிங்க தம்பி நான் இறங்குறேன். கவலைப்படாதீங்க கடவுள் உங்களைக் காப்பாத்துவாரு" என்று சொல்லிவிட்டு இறங்கினேன். "ரொம்ப நன்றிண்ணே.... ரொம்ப நன்றிண்ணே..." என்று அவர் ஒரு நான்கு முறை கூறினார்.

பாபா கோவிலுக்குச் சென்றேன். அந்த பெயர் தெரியாத தம்பிக்காவும் வேண்டினேன். மனத்தை ஒரு நிம்மதி நிறைத்தது.

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் அலுவலகம் சென்றேன். ஒரு அரைமணி நேரத்தில் என் மேலாளர் என்னை அழைத்தார். மிகவும் அமைதியான குரலில் உன்னை வேலையில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். இது ஆஸ்திரேலியாவில் இருக்கும் தலைமை அலுவலகத்தின் முடிவு. நான் உனக்காக எவ்வளவோ போராடிப் பார்த்தேன் ஒன்றும் செய்ய முடியவில்லை. உன்னைத் தவிர ஆட்குறைப்பு நடவடிக்கையில் மேலும் சிலரும் வேலை இழக்கிறார்கள் என்றார். ஒரு வாரத்திற்கு முன் நான் சிறப்பாக பணியாற்றுவதாக எனக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்த அதே மலாய் மேலாளர் இப்போது வேலை பறிபோன கடிதத்தைக் கொடுக்கிறார். எனக்கு அவரிடம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவர் கொடுத்த கடிதத்தைப் பெற்றுக்கொண்டு என் இருக்கையில் வந்தமர்ந்தேன்.
கண்களை மூடிக்கொண்டு பாபா என்றேன். நேற்று நான் சந்தித்த அதே தம்பி என் கண்களுக்குள் வந்தான். அவனுக்கு நான் வழங்கிய அத்தனை அறிவுரைகளும் என் கண்களுக்குள் எனக்கே எனக்காக மறுஒளிபரப்பு செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. உண்மை தான் அந்த தம்பிக்கு நான் வழங்கிய அத்தனை அறிவுரைகளும் எனக்குத் தெம்பூட்டிக் கொண்டிருந்தன. ஒருவேளை அவனை நான் நேற்று சந்திக்காமல் இருந்திருந்தால் ஆறுதல் சொல்ல ஆளின்றி நொறுங்கிப் போயிருப்பேன். இப்போது எனக்கான ஆறுதலை என் மனமே எனக்குச் சொல்லியது.

வீடு கட்ட வாங்கிய கடன்கள் என் முன்னே வந்து அச்சுறுத்தின. திருமணம் போன்ற எதிர்காலக் கனவுகள் ஒரு கானல் நீராய் கண் முன்னே அலையாடின. எத்தனை வந்தாலும் என்னோடு பாபா இருக்கிறார் என்று நம்பினேன். நம்பினோர் நிச்சயம் கைவிடப்படார். அவரின் கைகளையை இறுகப் பற்றிக்கொண்டிருக்கும் என்னை எப்படி அவரால் விட முடியும்?

ஓம் சாய்ராம்.

- சாயி நாமம் ஒலிக்கும்

ஜெயக்குமார்

அடுத்த பதிவைப் படிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்

வியாழன், 17 செப்டம்பர், 2020

பாபாவும் நானும் (2) - படமாய் வந்த பாபா

பாபா


இதற்கு முந்தைய பதிவைப் படிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்

பாபாவும் நானும் - அறிமுகம்

சென்ற வாரம் பாபா எனக்கு எப்படி அறிமுகமானார் என்பதைப்பற்றி எழுதியிருந்தேன். அதன் பின் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் பாபாகோவிலுக்குச் செல்வதை வழக்கமாக்கிக்கொண்டேன். பக்திக்கு பக்தியுமாச்சு சாப்பாடும் ஆச்சு.

இரண்டாவது வாரம் கோவிலுக்குச் செல்லும் வழியில் லிட்டில் இந்தியாவில் உள்ள பஃபலோ சாலை (Buffalo Road) சென்று கொஞ்சம் காய்கறிகள் வாங்கிக்கொள்ளலாம் என்று பஃபலோ சாலையில் அலைந்துகொண்டிருந்தேன். 'பஃபலோ ரோட்' இதை அப்படியே தமிழ்ப்படுத்தினால் எருமைச் சாலை எனலாம். இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் கால்நடை வளர்ப்பு சிறப்பாக நடைபெற்றதாம். அதிலும் குறிப்பாக இந்த 'பஃபலோ ரோட்' பகுதியில் எருமைச் சந்தை இருந்ததால் இந்தச் சாலைக்கு இந்தப் பெயர் வந்துவிட்டது. இப்போது இந்தச் சாலையில் மட்டுமல்ல சிங்கப்பூரில் எருமையை நான் விலங்கியல் பூங்காவில் கூட கண்டதில்லை.

இந்தச் சாலையின் ஒரு புறம் இந்தியக் காய்கறிக் கடைகள் என்றால் மறுபுறம் தேக்கா மார்க்கெட். ஒன்றிரண்டல்ல இருபது கடைகளுக்கும் மேல் வரிசையாக இருக்கும். லிட்டில் இந்தியா பகுதி முழுவதும் பல காய்கறிக் கடைகள் நிறைந்துகிடந்தாலும் இந்தப்பகுதியில் தான் பெரும்பாலும் மக்கள் கூட்டம் அலைமோதும்.

நான் காய்கறிகளை வாங்கிக்கொண்டு பஃபலோ ரோட்டிற்கு இணையாக அதன் பின்புறம் செல்லும் கெர்பாவ் சாலையில் (Kerbau Road) சென்று கொண்டிருந்தேன். வேடிக்கை என்னவென்றால் கெர்பாவ் (Kerbau) என்றாலும் எருமை என்று தான் அர்த்தம் மலாய் மொழியில். சிங்கப்பூரில் இருப்பவர்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டுமானால் லிட்டில் இந்தியா ரயில் நிலையத்திற்குப் பின்புறம் உள்ள சிறிய சாலை. வட இந்தியர்கள் வழிபடும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் கோவில் இந்தப் பகுதியில் தான் இருக்கிறது.

என் நண்பர் சுதர்சன் அலைபேசிக்குள் வந்தார்.

"என்ன ஜெய், பாபா கோயிலுக்கு போறீயா?"

"ஆமாண்ணே நடந்து போய்க்கிட்டு இருக்கேன்."

பஃபலோ ரோட்டிலிருந்து பாபா கோவில் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு மேல் இருக்கும். இரண்டு பேருந்துநிறுத்தங்களைக் கடக்க வேண்டும். அலுவலக நேரங்களில் கணினி முன் அமர்ந்தே இருப்பதால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நடந்து போவதை பழக்கமாகக் கொண்டுள்ளவன் நான். அன்றும் அப்படித்தான் போய்க்கொண்டிருந்தேன்.

"பாபா போட்டோ எதுவும் வீட்ல வச்சிருக்கியா ஜெய்?"

"இல்லையேண்ணே"

"பாபா படம் ஒண்ணு கிடைச்சா வாங்கி வீட்ல வச்சு கும்பிடு தம்பி. ஒரு மஞ்சள் துணிய விரிச்சு அதுக்கு மேல பாபா படத்தை வச்சு கும்பிடுறது ரொம்ப விசேசம். கிடைக்கலைன்னா எங்கயாவது ஒரு சின்ன காலண்டர் படம் கிடைச்சாலும் வாங்கி வச்சுக்க."

அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கெர்பாவ் சாலையில் பிரேம் போட்டு கண்ணாடி அடைக்கப்பட்ட பல சாமிப்படங்கள் என் கண்களில் பட்டன. பாபாவும் இருந்தார் மிகப்பெரிய படமாக இருந்தார். இவ்வளவு பெரிய படத்தை வாங்கி நான் தங்கியிருக்கும் அறையில் வைப்பது சிரமம். யோசித்துக்கொண்டே ஒவ்வொரு படமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

"இங்க ஒரு கடை இருக்குண்ணே. இருங்க கேட்டுப் பார்க்குறேன்" என்று கூறிவிட்டு. கடைக்காரரிடம் பாபா படம் சிறியதாக இருக்கிறதா என்று கேட்டேன். அவர் கண்ணாடி அடைக்கப்பட்ட சிறிய மேசை மீது வைத்துக்கொள்ளக் கூடிய அழகான படத்தை எடுத்துக் காண்பித்தார். அதில் பாபா வெண்தாடியோடு காவி உடையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி என்னை ஆசிர்வதித்துக்கொண்டிருந்தார். பத்து வெள்ளியைக் கொடுத்து வாங்கிக்கொண்டேன்.

"எப்படிண்ணே நீங்க சொல்றீங்க. பாபா அப்படியே கண்ணுல வந்து சிக்கிட்டாரு?" என்று சொல்லிச் சிரித்தேன்.

"தம்பி பாபா உன்கிட்ட சிக்கல நீ தான் பாபாகிட்ட சிக்கிருக்க. அவர் அருள் உனக்கு இருக்கதால தான் உன்கிட்ட வந்திருக்காரு" என்று கூறி அவரும் சிரித்தார்.

அவரே தொடர்ந்து "அப்படியே ஒரு மஞ்சள் துணி இருந்தா பாரு. ஒருவேளை கிடைக்கலைன்னா வெள்ளைத் துணிய எடுத்து மஞ்சள்ள நனைச்சு வச்சுக்கோ."

"இது என்ன நம்ம ஊராண்ணே. வெள்ளைத் துணி மஞ்சள் துணிக்கெல்லாம் நான் எங்க போவேன்? நான் தான் பாபாகிட்ட சிக்கிருக்கேனே அவரையே கொடுக்க சொல்லுங்க பார்ப்போம்."

"அவர் நினைச்சா உனக்கு எல்லாம் கொடுப்பாரு தம்பி. ஆஃப்ட்ரால் மஞ்சள் துணி கொடுக்காமாட்டாரா?"

"அப்படியா அப்போ கொடுக்க சொல்லுங்க" என்று சிரித்துக்கொண்டே கெர்பாவ் சாலையைத் தாண்டி பீர்த் தோட்டம் என்றழைக்கப்படும் நம்மூர் இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து சரக்கடிக்கும் கடையைத் தாண்டினேன். அங்கே பீர் மட்டுமல்ல சூடான மிளகாய் பஜ்ஜி, வடை, டீ எல்லாம் குறைந்த விலையில் கிடைக்கும். உட்கார்ந்து சாப்பிட ஏதுவாக வெளியில் இருக்கைகளும் மேசைகளும் போட்டிருப்பார்கள். நான் எதுவும் சாப்பிடவில்லை சுதர்சன் அண்ணனுடன் பேசிக்கொண்டே அந்த இடத்தைக் கடந்தேன்.

"தம்பி நீ சும்மா விளையாட்டுக்குப் பேசுற. ஆனால் நீ உண்மைலையே பாபா மேல நம்பிக்கை வச்சுக் கேளு உனக்கு கிடைக்கும்"

"சத்தியமா நம்புறேண்ணே. நம்பாட்டி இந்த முறை நான் கோயிலுக்கே போயிருக்க மாட்டேண்ணே."

"அப்போ உனக்கு நிச்சயமா உன் மஞ்சள் துணி கிடைக்கும்"

அவர் சொல்லி வாய் மூடவில்லை. அங்கே ஒரு கடையின் வெளியே பல வண்ணங்களில் தொங்கிக்கொண்டிருந்த கைக்குட்டைகளில் ஒரு மஞ்சள் நிறக் கைக்குட்டை மட்டும் காற்றில் பறந்து என்னை வா வா என்றழைத்தது. எனக்கு ஒரு நிமிடம் பகீரென்றிருந்தது. எதிர்பாராமல் நடந்ததா? அல்லது இத்தனை நாள்கள் மஞ்சள் துணிப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் இந்தப் பகுதியைக் கடந்ததால் அதில் என் கவனம் செல்லவில்லையா? ஒரு சில நொடிகளில் மின்னல் போல் பல எண்ணங்கள் தோன்றி மறைந்தன.

"இங்க ஒரு மஞ்சள் கலர் கர்ச்சிஃப் தொங்குதுண்ணே"

"கர்ச்சிஃபோ என்னும்மோ. உனக்குத் தேவை மஞ்சள் துணி கிடைச்சிருச்சுல. அதான் பாபா" என்றார்.

இது நடந்து ஆறு வருடங்களுக்கு மேல் ஆன பின்னும் இந்த நினைவுகள் எல்லாம் என் நெஞ்சில் அப்படியே இருக்கிறன. இதை இங்கே எழுதிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கூட அந்த மஞ்சள் நிறக் கைக்குட்டை என் கண் முன் நினைைவுகளில் ஆடிக்கொண்டிருக்கிறது. இப்போது வரை அதே மஞ்சள் கைக்குட்டையில் அதே பாபா அப்படியே என் வீட்டில் இருக்கிறார். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படம் அந்தப் படம் தான்.

பாபா படத்தில் ரஜினிகாந்த் போல ஒரு வரத்தை வீணடித்துவிட்டோமா என்று கூடத் தோன்றியது. ஆனால் இது சினிமா பாபா அல்ல உண்மை பாபா அள்ள அள்ளக் குறையாத ஆயிரமாயிரம் வரங்களை கொடுத்துக்கொண்டே இருக்கக்கூடிய கருணைக் கடல் என்பதைப் பிற்காலத்தில புரிந்துகொண்டேன்.

அந்தக் கருணைக் கடல் என் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை வரும் வாரங்களில் கூறுகிறேன்.

ஓம் சாய்ராம்

- சாயி நாமம் ஒலிக்கும்

ஜெயக்குமார்

அடுத்த பதிவைப் படிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

காக்காய் பார்லிமெண்ட்-மகாகவி பாரதியார்



காக்காய் பார்லிமெண்ட்

-மகாகவி பாரதியார்

பொதுவாக பாரதியார் என்றாலே முறுக்கிய மீசை, முண்டாசு, கொப்பளிக்கும் நெருப்புக் கவிதைகள் என்று மட்டுமே உணர்ந்திருந்த எனக்கு இந்த "காக்காய் பார்லிமென்ட்" சிறுகதை அவரின் மீசைக்குப் பின் மறைந்திருக்கும் குறும்புக்காரரைக் காண்பித்தது. அதிகாரவர்க்கத்திற்கு எதிராக தன்னுடைய பகடிகளால் சாட்டையை எடுத்துச் சுழற்றியிருக்கிறார்.

நாராயண பரம ஹம்ஸர் என்பவர் கதை சொல்லியான பாரதியைக் காண வருகிறார். வருகையின் நோக்கம் பாரதிக்கு பறவைகளின் மொழியைக் கற்றுத்தருவது. முதல் பாடமாக காக்கைகளின் மொழியைக் கற்றுத்தருகிறார்.

கா’ என்றால் ‘சோறு வேண்டும்’ என்றர்த்தம். ‘கக்கா’ என்றால் ‘என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே’ என்றர்த்தம். ‘காக்கா’ என்றால் ‘எனக்கு ஒரு முத்தம் தாடி கண்ணே’ என்றர்த்தம்.

இப்படியாக காக்கை பாஷையைக் கற்று முடித்த கதைசொல்லி அதைச் சோதிக்க தன் வீட்டு மாடிக்குச் செல்கிறார். அங்கே நாற்பது காக்கைகள் இருக்கின்றன. இந்த இடத்தை பாரதியார் எழுதும் போது "அங்கே நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கிறது" என்று எழுதிவிட்டு அடுத்த வரியில், "உட்கார்ந்திருக்கின்றன" என்று தானே வரவேண்டும் என்று சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும் ஆனால் அதில் பயனில்லை ஏனென்றால் நான் சொன்னது சரிதான் அதை நான் போகர் இலக்கணத்தில் படித்திருக்கிறேன். அதை நீ எப்போது படித்தாய் என்று கேட்பீர்கள் அதை சொல்ல இப்போது எனக்கு நேரமில்லை என்று நழுவி கதையைத் தொடர்கிறார்.

பன்மை வரும்போது "உட்கார்ந்திருக்கின்றன" என்பது தானே சரி? பாரதிக்கு இது தெரியாமல் இருந்திருக்குமா? மரபுக்கவிதையும் புதுக்கவிதையும் அடித்துக்கொண்டிருந்த அந்தக் காலத்தில் யாரையோ சாடியே இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறார். இப்போது இந்தச் சண்டையில் புதிதாய் நுழைந்திருக்கும் நவீனம் பின்நவீனம் எல்லாவற்றிகும் சேர்த்து அன்றே குத்திய கும்மாங்குத்து தான் அது. ஆனாலும் சண்டை ஓய்ந்தபாடில்லை.

சரி நாம் கதைக்கு வருவோம். அந்த காக்கைகளில் ராஜா மந்திரியெல்லாம் இருக்கிறார்கள். அதில் ஒரு காக்கை, தான் சந்தித்த ஒரு ருஷ்ய கொக்கைப் பற்றியும் அங்கே ஜார் மன்னர்களுக்கு எதிரான புரட்சியைப் பற்றியும் சொல்கிறது. இதைக் கேட்ட ராஜகாகம் இதே போலத்தான் நம்நாட்டிலும் சாமானிய மக்கள் உழைக்க அரசர்கள் சொத்து சேர்க்கிறார்கள். ஆதலால் இனிமேல் ராஜகாகமாகிய நான் எங்கும் சென்று கல்லெறி வாங்க மாட்டேன் நீங்கள் சம்பாதிப்பதில் ஆறில் ஒரு பங்கு எனக்குக் கொடுக்க வேண்டும் என்று ஆணையிடுகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மந்திரிக்காகம் எல்லாம் சரிதான் நீங்கள் ஒன்றை சிந்திக்காமல் விட்டுவிட்டீர்கள் என்று ஞாயம் கேட்பது போல் தொடங்கி எல்லாக் காக்கைகளிடமிருந்தும் பன்னிரண்டில் ஒரு பாகம் வசூலித்து அதை மந்திரிமார்களான எங்களின் செலவுக்கு வழங்க வேண்டும் என்று விண்ணப்பிக்கிறது.

நூறு வருடங்களுக்கு முந்தய இந்தக்கதையை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது நக்கலும் நையாண்டியும் சீண்டலும் நிறைந்த நகைச்சுவைக் கதைபோலத் தெரிந்தாலும், அடித்தட்டு மக்களின் அவலங்களையும் கண்ணீரையும் இயலாமையும் அதிகாரவர்க்கத்தினரின் நரித்தனத்தையும் அப்படியே எடுத்துக்காட்டுகிறது.

என்னதான் நகைச்சுவைக் கதையாக இருந்தாலும் பாட்டன் பாரதி கதையை எழுதிய போது கண்ணீர் மல்கவே எழுதி முடித்திருப்பார். இக்கதை இன்றும் அப்படியே பொருந்திப்போவது தான் வேதனையின் உச்சம்.

 - ஜெயக்குமார்

புதன், 9 செப்டம்பர், 2020

பாபாவும் நானும் - அறிமுகம்




ஓம் சாய்ராம், இந்த மந்திரத்தை நான் எப்போதிருந்து சொல்ல ஆரம்பித்தேனோ தெரியவில்லை. ஆனால் இன்று வரை ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். சீரடி சாய்பாபா எப்படி என் வாழ்வில் நுழைந்து என்னை அவர்பால் ஈர்த்து அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இதை நான் எழுதுகிறேன். ஒருவேளை நீங்கள் கடவுள் நம்பிக்கையற்றவராகக் கூட இருக்கலாம். ஒரு சுவாரசியத்திற்காக தொடர்ந்து படித்துப்பாருங்கள். சுவாரசியமாக இருந்தால், இல்லை என்றால் விட்டுவிடுங்கள். நான் இதை எழுதுவதால் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் பயனடைந்து பாபாவின் பரிபூரண அருளைப் பெற்றால் கூடப் போதும் நான் எழுதியதின் நோக்கம் நிறைவேறிவிடும். நிச்சயம் இதை நான் விளம்பரத்திற்காகவோ இல்லை மார்க்கெட்டிங் செய்து பாபாவிற்கு ஆள் பிடிப்பதற்காகவோ எழுதவில்லை. அது என் வேலையும் இல்லை. பாபா அவர் விரும்பிய ஆட்களை குருவியின் காலில் நூலைக் கட்டி சுண்டியிழுப்பதைப் போல இழுத்து அவர் அருகில் வைத்துக்கொள்வார் என்னை இழுத்தது போல. 

இந்த உலகில் நடக்கும் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு காரண காரியத்திற்காகத் தான் நடக்கின்றது என்பதை நான் நம்புகிறவன். இப்போது நான் எழுதுவது நீங்கள் படிப்பது கூட ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான் நடக்கிறது. இது என் நம்பிக்கை. இங்கே நான் எழுதப் போகும் அத்தனையும் என் நம்பிக்கை சார்ந்தது மட்டுமே. மற்றவர்கள் நான் நம்பியதை அப்படியே நம்பித்தான் ஆக வேண்டுமென்ற கட்டாயமில்லை. உங்கள் நம்பிக்கையோடு எது பொருந்திப்போகிறதோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். 

பாபா எனக்கு எப்படி அறிமுகமானார்?

சிறுவயதிலிருந்தே கடவுள் நம்பிக்கை கொண்டவன் நான். என் பள்ளி நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் எங்கள் ஊர் முத்தி விநாயகர் முன் உக்கி போடாமல் நான் எந்த ஒரு நாளையும் தொடங்கியதேயில்லை. அதற்காக மூடநம்பிக்கைகளில் எனக்கு கொஞ்சமும் நம்பிக்கையில்லை. விரதம் இருப்பதைக் கூட விரும்பாதவன் நான். ஒரு முழுநாள் அசைவம் சாப்பிடாமல் இருக்கச்சொன்னால் அன்று முழுவதும் கோழிப் பிரியாணியின் ஞாபகத்திலேயே தானிருப்பேன். கடவுள் நம்பிக்கை என்பது முழுக்க முழுக்க மனம் சார்ந்தது. கடவுளுடன் நாம் நம்முடைய மனதால் மட்டுமே பேச முடியும் உடலை வருத்திக்கொள்ள வேண்டியதில்லை கடவுளே அதை விரும்பமாட்டார் என்பதும் என் நம்பிக்கை தான். 

கல்லூரிப்படிப்பை முடித்து சென்னையில் இரண்டு வருடம் வேலை செய்தேன். பின் என் மாமாவின் புண்ணியத்தில் சிங்கப்பூர் வந்து சேர்ந்தேன். அப்போது வரை எனக்கு பாபா என்றால் யாரென்று தெரியாது எங்கோ ஏதோ கேள்விப்பட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை கடவுள்கள் என்றால் கோவில் சிலைகள் அல்லது அதே உருவில் இருக்கும் படங்கள் தான். முருகன், பிள்ளையார், கிருஷ்ணன், இராமன், ஐயப்பன் போன்ற என் குழந்தைப் பருவத்தில் என் பெற்றோர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கடவுள்கள் மட்டுமே. கிறிஸ்தவ பள்ளியில் படித்ததால் கிறிஸ்துவும் அன்னை மரியாளும் கூட எனக்குக் கடவுள் தான். 

கடவுள் உருவமற்று எங்கும் நிறைந்திருக்கிறார் என்று அறிந்திருந்தாலும் அந்த எங்கும் நிறைந்தவனை என் மனதிற்குள் அடக்க. அவனோடு உரையாட அவனை நினைத்து தியானிக்க எனக்கு ஒரு உருவம் தேவையாகத் தானிருந்தது. உருவமில்லாமல் கடவுளை கண்டடைவது என்பது என்னைப் போன்ற சிறியவனுக்கு மிகவும் கடினம் என்றே நினைக்கிறேன். பாபாவின் கருணையால் வாழ்வில் ஒருநாள் அந்த நிலையையும் அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஆனால் மனித உருவில் ஒருவரை சாமியார் போன்ற தோற்றமுடைய எவரையும் என்னால் கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியாது. இன்னும் சொல்லப்போனால் சாமியார் என்று சொல்லிக்கொண்டு வரும் எவரையுமே எனக்குப் பிடிப்பதில்லை.

இப்படிப்பட்ட நான் எப்படி பாபாவின் பக்தனானேன்! 

"என்னக்கா இவரே ஒரு முஸ்லீம் அவர் போட்டாவ வச்சு கும்பிட்டுக்கிட்டு இருக்கீங்க?" இது என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்த போது அவர் மனைவியிடம் நான் சொன்னது. 

"அப்படியெல்லாம் பேசகூடாது. வாயைமூடு" அந்த அக்கா அதட்டிய பின் நான் பாபா பேச்சை அவர்களிடம் எடுப்பதில்லை. இது நடந்தது 2013.

அடுத்த வருடம் எனக்கு பேஸ்புக்கில் ஒரு நண்பர் ஒரு செய்தி அனுப்புகிறார். "தம்பி உங்க பதிவெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. நகைச்சுவையா போட்டு பின்றீங்க உங்ககிட்ட பேசணும்." நான் பெயரைப் பார்த்தேன் சுதர்சன் என்றிருந்தது 'டிப் டாப்பா டீசன்ட்டா' புகைப்படம் போட்டிருந்தார். சரி யாரென்று பேசித்தான் பார்ப்போமே என்று "சரி பேசுங்க" என்றேன். பேஸ்புக்கில் அழைத்தார். பேஸ்புக்கில் எவ்வளவோ எழுதித் தள்ளி எத்தனையோ நாள்களை வீணடித்திருக்கிறேன். அதெல்லாம் வீண் இல்லை அதில் கூட உனக்கு ஒரு பயன் இருக்கு என்பது போல நண்பர் சுதர்சன் வந்து சேர்ந்தார். வயதில் என்னைவிட மூத்தவர் என்பதால் "அண்ணா" என்று அழைத்துப் பழகிவிட்டேன். அதன் பின் அடிக்கடி உரையாட ஆரம்பித்தோம். தமிழக அரசியல் இந்திய அரசியல் சினிமா என ஏதேதோ பேசியிருக்கிறோம். 

எல்லா நாளும் அவருடன் பேச முடியும் ஆனால் வியாழக்கிழமைகளில் பிடிப்பது கொஞ்சம் சிரமம். நடிகர் திரு.விவேக், செல் முருகன் எல்லாரும் அவருடைய நண்பர்கள் என்று கேள்விப்பட்டேன். அவர் மூலமாக நானும் கூட விவேக் அவர்களை சிங்கப்பூரில் ஒருமுறையும் மதுரை விமானநிலையத்தில் ஒரு முறையும் சந்தித்தேன்.

"ஆமாண்ணே... அவரு எல்லாப் படத்துலயும் மூட நம்பிக்கைய ஒழிக்கணும்ன்னு சொல்றாரு. அப்பறம் எப்படி சாய்பாபா பக்தரா இருக்காரு?

இப்படித்தான் பாபாவைப் பற்றிய எங்கள் உரையாடல் தொடங்கியது.  

"மூடநம்பிக்கை வேற பக்தி வேற அவர் மூட நம்பிக்கை கூடாதுன்னு சொல்றாரு. யாரையாவது சாமி கும்பிட வேண்டாம்ன்னு சொல்லிருக்காரா? உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?"

"இருக்குண்ணே வாரத்துல ஒரு நாள் எப்படியாவது கோயிலுக்கு போவேன்."

"அப்போ சரி, இனிமேல் வியாழக்கிழமை வியாழக்கிழமை நீ பாபா கோயிலுக்கும் போ"

"அட போங்கண்ணே சிங்கப்பூர்ல நான் பாபா கோயிலுக்கு எங்க போவேன்" சொல்லிட்டு சிரிச்சேன்.

"சிங்கப்பூர்ல தானே. எங்க இருக்குன்னு நான் சொல்றேன் நீ போற" எனக்கு சிங்கப்பூர்ல பாபாவைக் கண்டுபிடித்துக் கொடுத்தது அவர் தான். சிங்கப்பூருக்கு அவர் இதுவரை வந்ததேயில்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் அங்க இங்க விசாரித்து எனக்கு முகவரி அனுப்பிவிட்டார். 

"அட போங்கண்ணே. அதெல்லாம் போக முடியாதுண்ணே."

"நீ உனக்காகப் போக வேண்டாம் எனக்காகப் போ. போய் பாரு பிடிக்கலன்னா அப்பறம் போக வேண்டாம்." 

எனக்கு கொஞ்சம் பயம். அங்கே சென்றால் ஏதாவது சொல்லி பணம் கேட்பார்களோ என்று யோசித்தேன். சரி பணம் எதுவும் கேட்டால் திரும்பி வந்துவிடலாம் என்று முடிவு செய்து ஒரு வியாழக்கிழமை சென்றேன். அது சிங்கப்பூர் சிரங்கூன் சாலையில் வடபத்திர காளியம்மன் கோவில் வளாகத்தில் மூன்றாவது மாடியில் இருந்தது. 

வடபத்திர காளியம்மன் கோவிலே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. பிள்ளையாரில் தொடங்கி கோவிலை சுற்றினேன். வலது பக்கம் பிரமாண்டமாக பத்தடிக்கு மேல் பெரியாச்சியம்மன் எட்டுக் கைகளோடு இருந்தாள். இரண்டு கைகள் ஒரு பெண்ணின் வயிற்றைக் கிழித்துக் கொண்டிருக்கும் இரண்டு குடலை உருவி மாலையாகப் போட்டிருக்கும் ஒரு கையில் குழந்தையும் மற்ற மூன்று கைகளில் ஆயுதங்களும் இருக்கும். காலுக்கடியில் ஒரு அரசனைப் போட்டு மிதித்திருப்பாள். பார்க்க கொஞ்சம் அச்சமாக இருந்தாலும் கற்பவதிகளாய் இருக்கும் பல பெண்கள் தங்களுக்கு சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்று இந்த தாயாரிடம் தான் வேண்டிக்கொள்வார்கள். சுகமாக குழந்தைகளைப் பெற்றடுத்த தாய்மார்கள் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையைக் கொண்டு வந்து போட்டு அம்மனுக்கு படையலிடுவார்கள். அந்த நாள்களில் கோவிலுக்கு வரும் அத்தனை பேருக்கும் விருந்து சாப்பாடு தான். பெரியாச்சியின் வலப்புறம் மதுரைவீரன் பொம்மி மற்றும் வெள்ளையம்மாளுடன் இருப்பார். இடப்புறம் முனீஸ்வரன். 

கோவிலின் பின்புறம் பத்தடி உயரத்தில் நான்கு கைகளோடு நாகேஸ்வரியம்மன் ஐந்து தலை நாகத்தின் மீது கம்பீரமாக அமர்ந்திருப்பாள். பெண்கள் வரிசையாக நின்று அந்த பெரிய சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருக்கும் சிறிய கரிய அம்மனின் கற்தலைக்கு பாலாலும் நீராலும் அபிசேகம் செய்துகொண்டிருப்பார்கள். அது போக சிவலிங்கம், அகிலாண்டேஸ்வரி, நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி, துர்கை அம்மன், நரசிம்ம லட்சுமி, குபேர லட்சுமி, ஸ்ரீ ராமர், அனுமான், கால பைரவர், முருகன், வடபத்திர காளியம்மன் என தெய்வங்களின் வரிசை என்னை பிரம்மிப்பூட்டியது. நான் இப்போது சொன்ன இந்த வரிசை பிள்ளையாரில் தொடங்கி கோயிலை நான் வலப்புறமாக சுற்றி வந்த வரிசை. மேலும் கோயில் சுற்றுச் சுவரில் தன் பத்துத் தலையில் ஒன்றைப் பிய்த்து வீணை வாசிக்கும்  இராவணன், முருகனின் அறுபடை வீடுகள், அம்மன், முனிவர்கள், கோவில் உயரத்திற்கு வாயிலில் நிற்கும் பிரமாண்டமான பச்சை நிற ஆஞ்சிநேயர், கருடாழ்வார் என அந்தக் கோயில் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.

சாமி கும்பிட்டுவிட்டு சிறிது நேரம் அமர்ந்து பின் மின்தூக்கியில் ஏறி மூன்றாவது மாடிக்குச் சென்றேன். நீண்ட வரிசை ஒன்று, முதலும் முடிவும் தெரியாமல் நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு முப்பதடி நீளமும் பன்னிரண்டடிலிருந்து பதினைந்தடி அகலமும் கொண்ட சிறிய அறை தான் பாபா கோயில். வெள்ளைப் பளிங்குச் சிலை முழுவதும் மலர் மாலைகள் போர்த்தியிருந்தன. தலையில் பல வண்ணக் கற்கள் பதிக்கப்பட்ட ஒரு தங்க கிரீடம் இருந்தது. அந்தச் சிலையை நோக்கி வரிசை வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது. வரிசையில் நானும் சேர்ந்துகொண்டேன். வரிசை செல்லும் வழியில் எட்டடி உயரத்தில் தாடை வரை வளர்ந்திருக்கும்  வெண்தாடியோடு காவி உடையில் கைகளை உயர்த்தி ஆசிர்வதித்துக்கொண்டு ஒரு பாபா புகைப்படத்தில் நின்றிருந்தார். அவரின் அந்தக் கண்களும் சிரிப்பும் என்னை ஏதோ செய்தன. எனக்கு முன் சென்றவர்கள் அந்த புகைப்படத்தின் அருகில் சென்றவுடன் வரிசையிலிருந்து விலகி மண்டியிட்டு பாபாவின் பாதம் பணிந்து சென்றார்கள். சில பெண்கள் தங்கள் கைகளைத் தூக்கி பாபாவின் கைகளோடு வைத்து நின்று பின் விழுந்து வணங்கினார்கள். நானும் அருகில் சென்றவுடன் மண்டியிட்டு பாதம் பணிந்தேன்.

வரிசை ஒருவழியாக வளைந்து முடித்து நேராகியது இன்னும் பத்து பேர் என் முன்னே நின்றுகொண்டிருக்கிறார்கள். என் அலைபேசியை எடுத்து அதில் பாபாவை பதிந்து கொண்டேன். எனக்காக இல்லாவிட்டாலும் என்னை கோவிலுக்கு செல்லச் சொல்லி அனுப்பியவருக்கு ஒரு ஆதாரம் அனுப்பலாமே என்று. வரிசை முடிந்து என் முறை வந்தது பூக்களால் மூடி மறைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளிப் பாதணிகள் இருந்தது. பாபா ஒரு மூன்றடி தூரத்தில் அமர்ந்திருந்தார். மண்டியிட்டு அந்தப் பாதணிகளைத் தொட்டு வணங்கினேன். ஓரத்தில் அமர்ந்திருந்த வடஇந்தியப் பெண்மணி ஒரு சிறிய கரண்டியில் சிறிது பொரியையும் பாதாம் முந்திரிப்பருப்பு கலந்த கலவையை அள்ளிக்கொடுத்தார். கையில் வாங்கிக்கொண்டு அங்கே மற்றொரு பாபாவின் படத்திற்கு கீழ் வைக்கப்பட்டிருந்த சாம்பலை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டேன். பாபாவின் ஆடை அலங்காரங்கள் நீக்கப்பட்டு ஒரு காவித் துணியை மட்டும் தலையோடு சேர்த்துப் போர்த்தி அமர்ந்திருந்தார். ஆரத்தி தொடங்கப் போவதாகச் சொன்னார்கள். நான் கூட்டத்தோடு சேர்ந்து அமர்ந்துகொண்டேன். ஆரத்தி முடியும் வரை கண்களை மூடி தியானித்தேன் ஆரத்திப் பாடல் இந்தியில் புரியாமல் இருந்தாலும் ஏதோவொரு உணர்வு மனம் முழுவதையும் ஆட்கொண்டிருந்தது. ஆரத்தி முடிந்து மெல்ல கண்விழித்தேன் என் கால்களில் இரத்தம் கட்டி மரத்துப்போயிருந்தது. தூக்கமுடியாமல் தூக்கித் தட்டி அவற்றை எழுப்பினேன். என்னை போலவே ஒரு நாலு பேர் எழுந்திரிக்க முடியாமல் அமர்ந்திருந்தனர். கால்கள் விழித்த பின் எழுந்து சென்று விளக்கை தொட்டு வணங்கிவிட்டு கீழே சென்றேன்.

ஒரு நீண்ட வரிசை வடபத்திர காளியம்மன் கோவிலைச் சுற்றிக்கொண்டிருந்தது. பிரசாதம் வழங்குவதாகக் கூறினார்கள். அங்கே ஏற்கனவே பிரசாதம் பெற்று உண்டுகொண்டிருப்பவர்கள் தட்டைப் பார்த்தேன். சாம்பார் சாதம், கேசரி, வடை, சோன்பப்டீ, பொங்கல் என செவ்வக வடிவ வெள்ளை தெர்மாக்கோல் தட்டில் வைத்து உண்டுகொண்டிருந்தார்கள். பார்ப்பதற்கே நாக்கு ஊறியது. திருமணம் ஆகும் முன் தனியாக அறை எடுத்து தங்கியிருந்த காலம் அது. நல்ல சாப்பாடு கிடைக்காதா என்று தேடிக்கொண்டிருப்பவனுக்கு இப்படி ஒரு விருந்து சாப்பாடு கிடைத்தால் விடுவேனா? வரிசையில் நின்று வாங்கி ஒரு கட்டுக் கட்டினேன். வரிசையில் நிற்பவரிடம் கேட்டேன் இப்படித்தான் தினமும் சாப்பாடு தருவார்களா என்று. அவர் எனக்குத் தெரியாது ஆனால் வியாழக்கிழமை நிச்சயம் கிடைக்கும் என்றார். அப்போது முடிவு செய்தேன் இனி ஒவ்வொரு வாரமும் பாபாவை தரிசிக்காமல் விடக்கூடாது என்று. இதை வெறும் நகைச்சுவைக்காக கூறவில்லை. அன்றைய என் மனநிலை அப்படித்தான் இருந்தது. அங்கிருந்து எப்படி இங்கு வந்தேன் என்பதை அடுத்தடுத்த வாரங்களில் எழுதலாம் என்றிருக்கிறேன். வாருங்கள் என்னோடு சேர்ந்து நீங்களும் நான் தரிசித்த பாபாவை தரிசிக்கலாம்.

ஓம் சாய்ராம்

- சாயி நாமம் ஒலிக்கும்

ஜெயக்குமார்

அடுத்த பதிவைப் படிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்



ஞாயிறு, 28 ஜூன், 2020

வீரயுக நாயகன் வேள்பாரி




தொடக்கத்தில் இத்தனைப் பக்கங்களா என்று மலைப்பாகத் தான் இருந்தது. படிக்கத் தொடங்கியவுடன் தூக்கம் வர மறுத்தது அடுத்து என்ன அடுத்து என்ன என பாரியோடு கைகோர்த்து ஓட வைத்தது.

உலகம் போற்றும் கவிஞரான கபிலர் காட்டிற்குள் சென்றவுடன் குழந்தையாகி காட்டை நமக்குக் காட்சிப் படுத்திருக்கிறார். காட்டிற்குள் வாழ்பவர்கள் பாவம் காட்டுவாசிகள் ஏதும் அறியாதவர்கள் என்பது போன்ற சிற்றறிவு கொண்ட என்னைப் போன்றோருக்கு. கானகங்களில் இருப்பவர்களின் பேரறிவை எடுத்துரைக்கிறது இந்தக் கதை. காட்டிற்குள் இருக்கும் ஊருக்குள் காட்டு விலங்குகள் அண்டாத வகையில் இயற்கையாக அவர்கள் அமைத்திருக்கும் நாகப்பச்சை வேலிக்கு சமமான அறிவு இப்போதும் நம் எவரிடமும் இல்லை என்பதே உண்மை. காட்டில் ஒளிந்துகிடக்கும் ஒவ்வொன்றும் ஆச்சரியம் தான். அதிலும் கதையினூடே பாரியோடு பயணம் மேற்கொள்ளும் போது அவன் வாய்மொழியில் அதைக் கேட்கும் போதும் அந்த உணர்சிகளை வெறும் வார்த்தைகளில் வடித்துவிட முடியாது என்றே எண்ணுகிறேன்.

எத்தனை வகையான செடிகள், கொடிகள், மரங்கள், பாம்புகள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள். அத்தனையும் உண்மையா இல்லை சு.வெ.வின் கற்பனையில் உதித்ததா தெரியவில்லை. ஆனால் அத்தனையையும் பார்க்கும் அனுபவம் படிக்கும் நமக்குக் கிடைத்துவிடுகிறது.

காட்டில் இருக்கும் தேவவாக்கு விலங்கைக் கொள்ளையடித்துச் செல்லும் திரையர்களை தேக்கனும் பாரியும் விரட்டும் போதெல்லாம் என்னால் நிலைகொள்ள முடியவில்லை. ஒரு கையில் வேலை ஏந்திக்கொண்டு நானும் திரையர்களை விரட்டிக்கொண்டிருந்தேன். என்ன ஒரு ஓட்டம்! என்ன ஒரு காட்சியமைப்பு! இறுதியில் திரையர் குலத் தலைவன் காலம்பனும் பாரியும் சந்தித்துக்கொள்ளும் காட்சியெல்லாம் உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சம். எவ்வளவு கல்நெஞ்சக்காரராக இருந்தாலும் உங்கள் விழிகள் கசியாமல் இருக்காது.

முருகனின் காதல் தொடங்கி பாரியின் காதல், நீலனின் காதல், செம்பா தேவின் காதல் என காதல் கதைகளுக்கும் பஞ்சமில்லாமல் காதலையும் சொக்க வைக்கும் சோமபானத்தில் கலந்து நம்மைக் கிறங்கடிக்கிறார் கதையின் ஆசிரியர். முருகனைக் கடவுளாகவே பார்த்துப் பழகிய எனக்கு அவன் காதல் கதைகள் அவனை உலகின் முதன்மையான காதல் அடையாளச் சின்னமாக மாற்றியது. பெண்கள் இப்பகுதியைப் படிக்கும் போது கவனமாகவே படியுங்கள். முடிந்தால் படிக்காமல் தவிர்த்துவிடுங்கள். இல்லையேல் முருகனின் சொக்குப்பொடியில் மயங்கி அவன் சோமபானத்தில் வீழ்ந்துவிடுவீர்கள்.

கார்த்திகை நட்சத்திரத்திற்கு முருகன் சொல்லும் விளக்கம். திசைவேழர் மற்றும் அவரின் சீடர் அந்துவனின் வானியல் அறிவு. ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கண்ணாலேயே அளந்து அவரவர் பிறந்ததினதிற்கேற்ப கணக்கட்சிதமாக  மாளிகளைகளின்  மேற்கூரையில் வரைவது. என்று கதையில் சொல்லப்பட்டிருக்கும் வானியல் சார்ந்த அறிவு நம்மை திகைக்கவைத்துவிடுகிறது.

பாண்டியனின் செல்வச் செழிப்பு, சோழனின் யானைகள், சேரனின் தந்திரங்கள். அவர்களுக்குள் இருக்கும் போட்டி, பகை ,யார் பெரியவர் என்ற அகங்காரம். இத்தனையும் மீறி பாரி என்ற சிற்றசு கூட இல்லை மலைவாழ் மக்களில் ஒரு குடியின் தலைவன். அவனை எதிர்த்து மூன்று பேரும் வெவ்வேறு காரணங்களுக்காக போர் புரிந்தாலும் தனியே வெல்லமுடியாது என்ற ஒரே காரணத்தில் ஒன்று சேர்கிறார்கள். அவர்களோடு வஞ்சமும் துரோகமும் தந்திரமும் கூட கைகோர்க்கிறது.

மூவேந்தர்கள் மட்டுமல்ல முன்னூறு வேந்தர்கள் வந்தாலும் காட்டில் பாரியை ஒன்றும் செய்துவிட முடியாது. அங்கு ஒரு புல் கூட அவனுக்காகப் போர் புரியும். சூழ்ச்சியால் பாரியை கீழே இறக்கிப் போர் புரிகிறார்கள். அப்படியும் வென்றார்களா? என்ற கேள்வியின் விடை தான் கதையின் முடிவு.

இதுவரை எந்தச் சினிமாவிலும் காட்ட முடியாத மிகப் பிரமாண்டமான போரை நமக்குள் நிகழ்த்தி முடித்துவிடுகிறார் சு.வெ. எத்தனை எத்தனைப் போர்த் தந்திரங்கள். எவ்வளவு பெரிய படையையும் இயற்கையின் உதவிகொண்டு சின்னஞ்சிறு படையோடு நுங்கு சீவுவதைப் போல் சீவித் தள்ளிவிடுகிறார்கள் பாரியின் படையினர். கதையைப் படித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது இப்போதும் கண்களை மூடி யோசித்தால் தீக்களிப் பூசி நெருப்பிற்குள் இருந்து வெளி வந்து வாள் வீசும் நீலனின் ஒளிவீசும் மேனி என் கண்களுக்குள் எரிந்து அணைகிறது. சின்னஞ்சிறு படையோடு நீலனை மீட்கச் சென்று மடியும் இராவதன். அவனை கையில் ஏந்தி வரும் முடியன். பழையன், பழைச்சி, கூழையன், குலநாகினி, எவ்வி, ஆதினி, தேக்கன், உதிரன் என பறம்பின் ஒவ்வொரு உயிரும் என் உறவினர்களாகி இன்னும் வாசம் செய்கிறார்கள்.

நாவாய்களை அழித்து திரையர்களை மீட்டு வருவது, சோழனின் யானைகளைக் கொண்டே சோழனை விரட்டுவது. நீள் வாய் நாய்களை நம்பி வந்த சேரனுக்கு பதிலடி தந்தது. ஈக்கிகள் செறிந்த போர்களத்தில் பின்வாங்கி மூவேந்தர் படைகளைச் சிக்க வைப்பது. என போர் தந்திரங்களுக்கான அகராதியாகவே இந்தப் புத்தகம் இப்போது காட்சியளிக்கிறது. ஒருவேளை வருங்காலத்தில் முன்காலத்தைப் போல் ஆயுதம் ஏந்திப் போர் புரியும் சூழல் வந்தால் இந்தக் கையேடு ஒன்றை வைத்தே எந்த எதிரியையும் வென்றுவிடலாம்.

கதையில் வீரம், காதல், வானியல், இயற்கை பற்றிய பேரறிவைப் போல தியாங்களுக்கும் இடம் அதிகமாகவே ஒதுக்கப்பட்டிருக்கிறது. மூவேந்தர்களின் கோள்சொல்லியாக வந்து தர்மம் மீறமுடியாமல் துடிக்கும் திசைவேழர், இளவரசி பொற்சுவை, தேக்கன், காலம்பனின் மகன் என இவர்கள் ஒவ்வொருவர் இறக்கும் போதும். அவர்களின் தியாகங்களால் நம் முன் வானளவு உயர்ந்து நிற்கிறார்கள்.

போரை நிறுத்த கபிலர் எவ்வளவோ முயல்கிறார் ஆனால் பேராசை கொண்ட மூவேந்தர்கள் பறம்பின் சொத்துகள் மீது கொண்ட வெறியாலும் தங்களிடம் இருக்கும் பெரும் படையை நம்பியும் கபிலரை நிராகரிக்கிறார்கள். கபிலர் மூவேந்தர்களைப் பார்த்து "அதோ அந்த யாழை எடுத்துக்கொள்ளுங்கள். நான் பண் பாடுகிறேன். நான்கு நடன மங்ககைகளை அழைத்துச் செல்வோம். பாரியைப் பாடி விட்டு. பாரி உன் மலையைத் தா என்றால் தந்துவிடுவான்" என்று சொல்லும் காட்சியெல்லாம் திரையரங்காக இருந்திருந்தால் கைதட்டி விசிலடித்திருப்பேன். பாரியின் வள்ளல் தன்மையை எவ்வளவு அழகாக கூறிவிட்டார் சு.வெ.

எத்தனை எத்தனை சிற்றசுகளையும் சிறுகுடிகளையும் வேந்தர்கள் அழித்து ஒழித்துள்ளார்கள். கொற்றவைக் கூத்தில் வேந்தர்களிடமிருந்து தப்பிய ஒவ்வொரு குடியின் எஞ்சிய வாரிசுகள் வெஞ்சினம் வைத்து ஆடும் காட்சிகள் இன்றளவும் ஆங்காங்கே அழிந்துகொண்டிருக்கும் சிறுகுடிகளின் கடைசி வாரிசுகளை நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.  கதையின் ஒவ்வொரு பகுதியும் விளக்க வருடங்கள் கூடப் போதாது. அவரவர் வாசிப்பனுபவத்தில் உண்மையில் பாரியோடு வாழலாம். அப்படி என்னை சிலகாலம் வாழ வைத்த சு.வெங்கடேசனுக்கு நன்றி.


நீங்களும் வாசித்து பாரியோடு வாழ்வீர்கள் என்று நம்புகிறேன் நன்றி.