திங்கள், 31 ஜூலை, 2017

ஜெஸிக்கா.... பாகம் 1

பொறியாளன் அகிலன் ஒரு கட்டிட கலை நிபுணன் கடந்த 4 வருடங்களாக அதே தொழிலில் தான் இருக்கிறான், வயது 29.

அவனின் தொழில் அனுபவத்தை விட காதல் அனுபவ வருடங்கள் தான் அதிகம் கடந்த 6 வருடங்களாக அவன் வீட்டில் இருந்து நாளாவது வீட்டில் இருக்கும் அமுதாவை காதலிக்கிறான்.

அமுதாவும் அவனை காதலிக்கிறாள்.

அவள் B.Sc படித்துவிட்டு இப்போது M.Sc இறுதியாண்டு படித்துகொண்டிருக்கிறாள்.

எப்படியும் அவளுக்கு படிப்பு முடிந்து அவள் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரமித்தவுடன் முதல் ஆளாக தான் செல்லவேண்டும் என்பதற்காகவே மிகவும் கடினப்பட்டு உழைத்துகொண்டிருகிறான்.

கிடைக்கும் அத்தனை வீடுகளையும் இரவு பகல் பார்க்காமல் ஓடி ஓடி கட்டி முடிப்பான்.

அவனின் திட்டங்கள் அதை நிறைவேற்றும் விதமும் வீடு கட்டுபவர்களுக்கு அதிகம் பிடித்து போனதால் அவன் ஒரு நல்ல பெயர்பெற்ற பொறியாளனாக வெற்றிப் பெற்று விட்டான்.

அவன் மூலம் வீடுகளையும் அலுவலகங்களையும் கட்டியவர்கள் மற்ற நண்பர்களுக்கு சிபாரிசு செய்ய அவன் தொழில் வட்டம் பெருகியது.

அவனின் இந்த நல்ல பெயர் மற்றும் திறமையின் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு அடுக்குமாடி வீடு கட்டும்  கம்பெனியில் அருகருகில் மிகப்பெரிய இரண்டு 11 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்டும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பு இவனுக்கு கிடைக்க முழுமுதற் காரணம் இவன் நண்பன் ராம்.

அவனும் பொறியாளன் தான் செல்வந்தரான இவன் தந்தையின் மூலம் ஏற்பட்ட சிலர்களின் பழக்கத்தின் மூலம் இந்த கட்டிடத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெற்றான். அங்கு அவனுடன் பணி புரிய தெரிந்த  பொறியாளன் தேவை இருந்ததால் அகிலனின் திறமைகளை எடுத்து சொல்லி அவனையும் சேர்த்துகொண்டான்.

இந்த இரண்டு கட்டிடங்கள் தன் வீட்டுக்கு மிக அருகில் இருப்பதால் அங்கு சென்று வேலை செய்யவும் தன் காதலியை அடிக்கடி அங்கு வரச்சொல்லி சந்திக்கவும் அகிலனுக்கு வசதியாகவும் இருந்தது.

அகிலன் அனைவரிடமும் மிக எளிதாக பழகிவிடக்கூடியவன் அவனின் இந்த குணத்தினால் அங்கு வேலை செய்யும் கொத்தனார் மேஸ்த்ரி. சித்தாள் என அனைவருக்குமே அவனை மிகவும் பிடிக்கும்.

அமுதா அவனை பார்க்க வரும் போது 'அண்ணே அண்ணி வந்திருகாங்கண்ணே' என்று கீழ் மாடியில் இருந்து மேல் மாடிக்கு கேட்டுக்கும் படி கத்துவான் அங்கு சிமெண்ட் கலக்கும்  வேலை செய்யும் முருகன்.

முருகன் 15 வயது சிறுவன் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த வேலைக்கு வந்திருக்கிறான்.

அகிலன் அடிக்கடி,''டேய் முருகா போய் படிடா நான் உனக்கு பணம் கட்றேன்'' என்பான்.

ஆனால் முருகன், "இனிமேல் எங்கண்ணே 10 வயசுல இருந்து வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டேன் படிப்பலாம் நமக்கு வராதுன்னேன்னு'' சொல்லி மறுத்துவிடுவான்.

சிறுவன் ஒருவன் இப்படி வேலை செய்வது அகிலனுக்கு சுத்தமாக பிடிக்காது ஆனால் இவனை வேலையை விட்டு நீக்கிவிட்டால் இவன் வேறு எங்காவது வேலைக்கு போவானே தவிர பள்ளிக்கு செல்ல மாட்டான் என்பதை நன்கு தெரிந்ததால் எதுவும் சொல்லாமல் அவனை தனியாக அழைத்து அடிக்கடி அறிவுரை மட்டும் கூறுவான்.

இரண்டு கட்டிடங்களும் இரண்டு வருடங்களில் பல நூறு பேர்களின் அயராத உழைப்பினால் அப்படியே எழுந்து விஸ்வரூபமாக நின்றது. அந்த ஊரில் வேறு எந்த பெரிய கட்டிடமும் இல்லாததால் ஊரின் எந்த வீட்டு மாடியில் நின்று பார்த்தாலும் பிரம்மாண்டமாக தெரியும். ஒரு கட்டிடம் கட்டுமான பணி முழுமையாக முடிக்கப்பட்டு  வெளிபூச்சு வரை முடிக்கபட்டிருந்தது. மற்ற கட்டிடத்தில் 11 வது மாடி கட்டப்பட்டு கொண்டிருந்தது அதே நேரத்தில் வெளிபூச்சு முக்கால் வாசி முடிக்கப்பட்டு இருந்தது.

ஒரு சனிக்கிழமை சாயுங்கால வேளையில் முழுவதுமாக முடிக்கப்பட்ட கட்டிடத்தின் நாளாவது மாடியில் அகிலன் தனியாக அமர்ந்திருந்தான். அவன் காதலிக்காக காத்துகொண்டிருந்தான். அப்பொழுது அமுதா மெதுவாக அங்கு வந்தாள் அடுக்கிவைக்க பட்டிருந்த செங்கற்களின் மீது அகிலன் எதிரில் அமர்ந்தாள்.

அகிலன் 'சிடு சிடு' என்ற முகத்துடன்,''ஏண்டி லேட்டு?''

''இந்த டீ போட்டு பேசற வேலையெல்லாம் வேண்டாம்,எவ்வளவு அழகா பேர் வச்சிருக்காங்க அமுதான்னு''என்று செல்லமாய் கடிந்து கொண்டாள்.

''சரி சாரி அமுதா அமுதை தா''என்றான் சிரித்துக் கொண்டே.

''தர்றேன் தர்றேன் கல்யாணம் ஆகட்டும் அமுது என்ன அமுதாவையே தர்றேன்''என்றாள்.

தொடர்ந்து,''உங்களுகென்ன சைட்டுக்கு போறேன்னு உங்க அண்ணன் அண்ணிகிட்ட சொல்லிட்டு என்ன சைட்டு அடிக்க வந்துருவீங்க. நான் ஏதாவது பொய் சொல்லிட்டு வர வேண்டாமா. என சொல்லி செல்லமாக சொன்னாள்.


''ஹேய் சும்மா சொன்னேண்டி இதுகேல்லாமா கோவிச்சுக்குவா?''

''நீங்க தான் முதல்ல கோவபட்டீங்க.''

இப்படியாக இவரகள் உரையாடல் நகர்ந்தது கோபமாக ஆரமித்த உரையாடல் பின்பு சிரிப்பு பாசம் அப்பறம் கொஞ்சலாக மாறியது. இடையில் ஒரு 5, 6  அடி செல்லமாக விழுந்தது அகிலனுக்கு மட்டும்.

''இப்படி பெரிய பெரிய அப்பார்ட்மெண்ட் எல்லாம் கட்றீங்களே நமக்கு எப்போ வீடு வாங்க போறீங்க, பேசாமா இந்த அப்பார்ட்மெண்ட்லையே ஒரு வீடு வாங்கிட்டா எங்க வீடும் பக்கத்துல தான் இருக்கு எப்படி'' என்றாள் அமுதா.

''போச்சுடா காதலிக்கும் போதே ஃப்ளாட் வாங்கற சிந்தனை வந்துடுச்சா உனக்கு"

''நான் மட்டும் குடியேறவா கேட்கறேன்"

''புரியுது புரியுது, இந்த அப்பார்மென்ட்டா வேணாம் வேணாம் நமக்கு வேற ஒரு நல்ல இடத்துல தனிவீட கட்டிக்குவோம்ன்''னு சொல்லி சிரித்தான் அகிலன்.

மணி ஐந்து அடித்தது.

"ஐயோ நான் வீட்டுக்கு போகனும் அப்பா தேடுவார்" என்றாள் அமுதா.

''ஐயோ வீடா"

''ஐயோ வீடு இல்லே அப்பா வீடு, அதாவது உங்க வருங்கால மாமனார் வீடு"என்றாள் நகைப்புடன்.

''இப்போ தானேடி வந்த அதுக்குள்ள உங்க அப்பா தேடுவாரா நீ என்ன சின்ன குழந்தையா?''

''ஆமாம் அவரைப் பொறுத்த வரை நான் சின்ன குழந்தை தானே"

''சர்தான் குழந்தை தானே, வா மடியில போட்டு தாலாட்டுறேன்"

இப்படி அகிலன் பேசிக்கொண்டு இருக்கும் போதே,'' அமுதா சரி சரி நான் கிளம்புறேன்,உங்க சேட்டை இனி தாங்காது'' என்று சொல்லிவிட்டு ஓட ஆரமித்தாள்.

''ஏய்! ஏய்!'' என்று பின்தொடர்ந்து வந்த அகிலன் கதவு வைப்பதற்காக வைக்கபட்டிருந்த நிலையில் சாய்ந்துகொண்டு கீழே படியில் இறங்கிகொண்டிருக்கும் அமுதாவையே பார்த்துகொண்டிருந்தான்.

முருகன் மாடி படிகளில் கையில் இரண்டு டீ க்ளாஸ்களுடன் மேலே ஏறி வந்துகொண்டிருந்தான். எதிர்த்தாப்பில் இறங்கி கொண்டிருக்கும் அமுதாவை பார்த்து,''அண்ணி டீ சாப்ட்டு போங்க.''

''என் டீயையும் சேர்த்து நீயே குடி இல்லை உங்க அண்ணனுக்கு கொடுன்னு'' சொல்லிட்டு கீழே இறங்கி ஓட்டினாள்.

முருகன் மேலே சென்றான்.

 அகிலனிடம்,'' இந்தானே டீ ன்னு'' சொல்லி கொடுத்துவிட்டு இன்னொரு டீயை அண்ணி என்னை குடிக்க சொல்லிட்டாங்க'' என்று சொல்லி குடிக்க ஆரமித்தான்.

அகிலன் அவனை பார்த்து லேசாக ஒரு புன்முறுவல் பூத்தான்.

'ச்ச! இப்படி தெரிஞ்சிருந்தா உங்க கணக்குல வடையும் சேர்த்து வாங்கிட்டு வந்திருப்பேன்' என்றான் முருகன்.

''உனக்கு இல்லாதாடா நீ தான் நான் சொல்றத கேட்க்க மாற்ற போய் படி நான் ஸ்கூல்ல சேர்த்து விட்டு பணம் கட்டுறேன்.''

''ஐயோ ஒரு வடை கேட்டது தப்பா ஆளா விடுங்கண்ணே படிக்கனுமாம்லன்னு சொல்லி விட்டு குடித்த முடித்த டீ கிளாஸ்களை எடுத்துகொண்டு அங்கிருந்து சென்றான்.

அகிலன் கீழே இறங்கி வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான் ஒரு பெரிய இயந்திரம் சுத்திகொண்டிருந்தது அதன் அருகில் ஒருவர் நின்றுகொண்டு சில பெண்கள் கொண்டுவரும் மணல் ஜல்லி சிமென்ட் போன்றவற்றை கொட்டிகொண்டிருந்தார்.

அகிலன் அங்கு வருவதை அங்கு உள்ள மல்லிகா என்ற பெண் பார்த்தார்.

இவருக்கு ஒரு 37 லிலிருந்து ஒரு 40 வயதிருக்கும். சற்று குண்டான பெண்மணி. இங்குள்ள வயதில் மூத்த அத்தனை பெண்களயுமே அக்கா என்று அழைப்பது தான் அகிலனின் வழக்கம்.

அகிலன் அருகில் வந்தவுடன் மல்லிகா "என்ன தம்பி, பாப்பா வந்திருந்துச்சு போல" என சொல்லி சிரித்தார் அங்கு இருந்த மற்ற பெண்களும் சற்று சத்தமாகவே சிரித்தார்கள்.

அகிலன் அவர்களை பார்த்து லேசாக சிரித்தான்.

''மல்லிகா எப்ப தம்பி கல்யாணம் எங்கள எல்லாம் கூப்பிடுவீங்கல்லன்னு கேட்க, பக்கத்திலிருந்த ராசாத்தி,''நம்மள எல்லாம் கூப்பிடமாட்டாரு தம்பி பெரிய இடம்லன்னு'' சொல்ல மறுபடி சிரிப்பு.

அகிலன், ''கண்டிப்பா உங்க எல்லாத்தையும் கூப்பிடுவேன் உங்க தலைமைலயே கல்யாணத்த நடத்துறேன் இப்போ வேலைய பாருங்க சரியா?'' என சொல்லி லேசாக சிரித்தான்.

இதை பார்த்து கொண்டிருந்த முத்துவேல் மேஸ்த்ரி, ''கொஞ்சம் இடம் கொடுத்தா போதுமே உடனே பேச ஆராம்ச்சுறது போங்க போய் வேலைய பாருங்க.''என்றார் தன் பங்கிற்கு.

''என்ன மேஸ்த்திரி? வேலை பாக்காமலா இருக்கோம் கையி பாக்குது வாய் பேசுது உனக்கு என்னவாம் உன் மேட்டரு வெளிய வந்திரும்ன்னு பயப்புடுறியான்னு'' காமாட்சியக்கா கேட்க மீண்டும் அனைவருக்கும் சிரிப்பு.

அகிலனும் தன் கையால் வாயை மூடிக்கொண்டு சிரித்துகொண்டிருந்தான்.

இதை கவனித்த முத்துவேல,''சார் வாங்க சார் இதுக இப்படிதான் ஏதாவது பேசிக்கிட்டு இருக்குங்க நாம போய் சைட்ட பார்ப்போம்ன்னு'' சொல்லி அழைத்துக்கொண்டு சென்றான்.

மேல் தளத்தில் வேலை மிக மும்மரமாக நடந்துகொண்டிருந்தது. கீழ் இருந்து மேலே ஒரு மின்தூக்கியில் பல கட்டுமான பொருட்க்கள் அப்படியே நான்கு கம்பிகளுக்கு நடுவில் ஒரு மிதவை பறந்து செல்வது போல சென்றது.

அந்த மின்தூக்கியில் ஏறி மேல் தளத்திற்கு மேஸ்த்திரி முத்துவேலுடன் சென்றான். அங்கு நடைபெற்ற வேலைகளை பார்வையிட்டுவிட்டு முத்துவேலிடம் தான் வீட்டுக்கு போவதாகவும் சற்று நேரத்தில் ராம் வந்துவிடுவதாகவும் கூறினான்.

முத்துவேல், சார் இன்னைக்கு சம்பளநாள் வாரச்சம்பளம் போட மேனேஜர் வந்திருவார்ல'' என்று நெளிந்தான்.

''கவலைபடாதீங்க மேஸ்த்திரி மேனேஜரும் கணக்கபுள்ளையும் ஒரு 7 மணி போல வந்திருவாங்க நான் ஏற்கனவே பேசிட்டேன்'' சொல்லிட்டு மின்தூக்கியில் இறங்கினான்.

அகிலனின் வீடு வெளிப்புற சுற்று சுவருடன் கூடிய ஒரு அழகான வீடு. வீட்டிற்கு மேலும் அழகு சேர்ப்பதற்கு வீட்டை சுற்றி அழகழகான செடிகள் வைக்கபடிருந்தன. வீட்டின் முன் ஆறடி உயரத்தில் பெரிய இரும்பு கதவு. அகிலனின் பைக் வந்து அந்த கதவின் முன் நின்றது சைடு ஸ்டாண்டை போட்டு நிறுத்தி விட்டு கேட்டை திறந்து பைக்கை உள்ளே கொண்டு ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு பைக்கை பார்த்தான் ஒரே சேரும் சகதியுமாக இருந்தது.

முந்தின நாள் மழையில் பைக்கை ஓட்டி வந்த விளைவு.

'அண்ணி அண்ணி' என்று கதவை தட்டினான் கதவு திறந்தது ஆறு வயது ஜெஸிக்கா, நின்று அகிலனை முறைத்து பார்த்துகொண்டிருந்தாள்.

''என்னடா குட்டிமா சித்தப்பாவ முறைக்கிறன்னு'' சொல்லி அப்படியே ஜெஸிக்காவை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றான்.

''போங்க சித்தப்பா இன்னைக்கு புல்லா ஒரே போரு நீங்க வந்து என்னை எங்கயாவது கூட்டிட்டு போய் இருக்கலாம்ல''.

''சாரிடா செல்லம் சித்தப்பாவுக்கு கொஞ்சம் வேலை இருந்துச்சுடா இப்போ சித்தப்பா பைக்க ரெண்டு பேரும் சேர்ந்து கழுவிட்டு அப்பறமா வெளிய போவோம் டீல் ஓகேவா'' என்றான் அகிலன்.

''ஐ ஜாலி! ஹை பை'' என்று கூறி அகிலன் கையை உயர்த்த தன்னுடைய கையால் அவன் கையில் தட்டினாள்.

''தாங் யூ சித்தப்பா'' என்று கூறி கன்னத்தில் ஒரு முத்தமும் கொடுத்தாள்.

''சித்தப்பா கூட சேர்ந்து என்னடி ப்ளான் போடுறன்னு'' சொல்லிகிட்டே அகிலனின் அண்ணி ரம்யா அறைக்குள் இருந்து வந்தாள்.

''சித்தப்பா என்னை வெளில கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்காரே.''

''உன்னை வெளில கூட்டிட்டு போற அளவுக்கு சித்தப்பாக்கு டைம் இருக்கா சித்திய பார்க்க போகலியா'' என்று சிரித்தாள்.

''எந்த சித்தி அண்ணி'' என்று ஒன்னும் தெரியாதவன் போல கேட்டான் அகிலன்.

''எல்லாம் தெரியும் தம்பி உங்க அண்ணனுக்கும் தெரியும் பொண்ணு படிச்சு முடிக்கட்டும் பேசி முடிச்சுரலாம். அதுக்கு முன்னாடி நீங்க எதுவும் வேற ப்ளான் பண்ணிராதீங்கன்னு'' சொல்லி சிரித்தாள்.

''ஊருக்கே தெரியுது எனக்கு தெரியகூடாதா தம்பி'' என்றாள்.

''உங்களுக்கு யார் சொல்லிருப்பா'' என்று கேட்டு யோசித்தான்.

ஜெஸிக்கா,''நான் தான் சொன்னேன் சித்தப்பா எனக்கு முத்தம் குடுத்து அந்த அக்காக்கு குடுக்க சொன்னீங்கள்ள அப்போவே சொல்லிட்டேன்னு'' சொன்னாள்.

வெகுளி தனமாக குழந்தை பேசியதை கேட்ட ரம்யாவும் அகிலனும் சத்தமாக சிரித்தார்கள்.

''உன்னை சின்ன பொண்ணுன்னு நினச்சது தப்பா போச்சே போட்டு குடுத்துடைல'' என்றான் அகிலன்.

''சித்தப்பா நான் சின்னபுள்ளை இல்லை பிக் ஆகிட்டேன்''.

''சரி சரி பிக் கேர்ள்ன்னா வா வந்து சித்தப்பாவுக்கு ஹெல்ப் பண்ணு'' என்று கூறிக்கொண்டே ஒரு வாளியில் தண்ணீரை எடுத்துகொண்டு ஜெஸிக்காவை அழைத்துக்கொண்டு பைக்கை கழுவ வெளியே சென்றான்.

ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தார்கள் ஓரளவுக்கு துடைத்து முடித்துவிட்டு உட்காந்திருந்தனர். ஒரு கார் வரும் சத்தம் கேட்டது


''ஐ அப்பா வந்தாச்சு'' என்று ஜெஸ்சிக்கா கத்தினாள்.

அகிலன் எழுந்து போய் முன் கதவை திறந்துவிட்டான். ஒரு சிவப்பு நிற ஸ்விப்ட் கார் உள்ளே நுழைந்தது. காரில் இருந்து கருப்பான சற்று தடித்த உருவம் கொண்ட அகிலனின் அண்ணன் முரளி இறங்கினான் அப்பா என ஜெஸிக்கா ஓடிப்போய் கால்களை கட்டி அனைத்துகொண்டாள்.


''நீ எப்படா வந்தன்னு''
அகிலனிடம் கேட்டுவிட்டு ஜெஸிக்காவை தூக்கினான்.

அகிலன் இப்போ தாண்ணே ஒரு ஒருமணிநேரம் இருக்கும் என்று பதில் அளித்தான்.


என்னடா தங்கம் அப்பாக்கு ஒரு முத்தம் கொடு'' என்று ஜெஸிக்கவிடம் தன் கன்னத்தை காண்பித்தான்

அவளும் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு,'' சித்தப்பா என்னை வெளிய கூட்டி போகுறேன்னு சொல்லிருக்காரேன்னு'' சொல்லி சிரித்தாள்.

''அப்படியா எங்க போகபோறீங்கன்னு'' கேட்டுகொண்டே வீட்டிற்குள் சென்றான்.

''ஜெஸிக்கா இங்கே அங்கே'' என ஏதேதோ சொல்லிகொண்டிருந்தாள்.

இப்படியாக அன்று சாயுங்காலம் மணி 7 அடித்தது தன்னை வெளிய கூட்டிபோக வேண்டும் என ஜெஸிக்கா அகிலனிடம் வந்து கூறினாள்.

''சரி நீ நியூ ட்ரெஸ் போட்டு கிட்டு வா சித்தப்பாவும் குளிச்சுட்டு வரேன்னு

சொல்லிட்டு குளிக்க சென்றான் அரை மணியில் ஜெஸிக்கா ஒரு குட்டி தேவதை போல ஜொலிக்கும் ஆடையில் வந்து நின்றாள்.

கையில் அகிலன் எப்பொழுதோ வாங்கித் தந்திருந்த கரடி பொம்மையை எடுத்துக் கொண்டாள்.

''இது எதுக்கு இப்போ?''

''இது என் கையில இருந்தா தான் ஜாலியா இருக்கும்"

'சரி சரி'என்றார் அண்ணி.

அகிலனும் அவளை அழைத்து செல்ல தயாராக இருந்தான்.

முரளி,''மழை பெய்யும் போல காரை எடுத்துகிட்டு போடா''என்றான்.

''இல்லை அண்ணா எனக்கு பைக் தான் ஓகே. மழை எல்லாம் வராது வந்த மானேஜ் பண்ணிக்கிறோம்'' என்றான்.

ஜெஸிக்காவும் ''ஆமா ஆமா பைக் தான் எனக்கு புடிக்கும்'' என்றாள்.

''பார்த்து டா பாப்பாவ நனைய விட்றாத ஸ்கூல் போறப்போ உடம்பு சரியில்லாம ஆகிட போகுது. பார்த்து போயிட்டு வாங்கன்னு'' சொல்லி வழியனுப்பி வைத்தான்.

அகிலன் ஜெஸிக்காவை முன்னே வைத்துகொண்டு சென்று கொண்டிருந்தான்.

அவன் அலை பேசி அழைத்தது.

வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு யாரென்று பார்த்தான்.

அது அவன் நண்பன் ராம்.

அழைப்பை ஏற்று 'என்ன ராம்' என்று கேட்டான்.

''என்ன மச்சி எங்க இருக்க?''

''ஜெஸிக்காவ போனிக்ஸ் மால் வரை கூட்டிட்டு போறேன் மச்சி.''

''ரொம்ப தூரம் போயிட்டீயா?''

''என்ன மச்சி எதுவும் பிரச்சனையா?''

''ஆமா மச்சி ஒரு சின்ன பிரச்சனை தான். இந்த கான்ட்ரெக்ட்காரன் ஒரு சின்ன கம்பிய வாங்கிட்டு வந்திருக்கான். அதுவும் பாதி பில்டிங்கு தான் வரும் போல. மேல் தளம் தானே சும்மா போட்டு விடுங்கன்றான். நானும் கொத்தனாரும் முடியாதுங்கன்னு சொன்னா நான் அகிலன்ட்ட பேசிக்கிறேன், இவளோ தான் பட்ஜெட் இதுக்குள்ள முடிங்குறான், நீ இங்க வந்தால் கரெக்டா இருக்கும்ன்னு நினைக்கிறேன் ஒரெட்டு வந்துட்டு போ. நானும் உன் கூட மாலுக்கு வர்றேன் ரஞ்சனிக்கு பிறந்தநாள் வருது கிப்ட் வாங்கனும்.''

“ஏன்டா நீ தான் முக்கியம்ன்னு குடும்பத்தையே விட்டுட்டு வந்த என் சிஸ்ட்டர விட இப்போ இது முக்கியமா?”

(ரஞ்சனி ராமின் காதல் மனைவி உயிருக்கு உயிராக காதலித்து இரு குடும்பங்களிலும் ஏற்பட்ட பல பிரச்சனைகளை சமாளித்து கைபிடித்த மனைவி.

இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் அன்பானவர்கள்.)

“முதல்ல நீ இங்க வா மச்சி” இந்த பிரச்சனையை முடிச்சுட்டு போவோம்”

''சரி பக்கத்துல தான் இருக்கேன் ஒரு பத்து நிமுசத்துல வந்துறேன்.''

என்று சொல்லிட்டு தன்னுடைய பைக்கை தன் வேலை செய்யும் கட்டிடம் இருக்கும் திசையில் ஓட்டினான்.

மெதுவாக ஜெஸிக்காவிடம்,''நாம சித்தப்பாவோட சைட்டுக்கு போய் ராம் அங்கிள கூட்டிகிட்டு மாலுக்கு போவம்,சரியா'' என்றான்.

அதற்கு ஜெஸிக்கா,''சரி சித்தப்பா அங்க மணி இருக்கும்ல நான் அது கூடா கொஞ்ச நேரம் விளையாடவா? அம்மா வந்தா விளையாடவே விட மாட்டாங்க திட்டுவாங்க.''

''சரி நீ விளையாடலாம்ன்னு'' பதில் சொன்னான் அகிலன்.

மணி அந்த கட்டிடத்தில் பணிபுரியும் காவலாளி கந்தசாமியின் நாய். கந்தசாமி, மணி இருவருமே அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர்கள். குறிப்பாக மணிக்கு குழந்தைகள் என்றாலே அலாதி பிரியம். வாலை ஆட்டிக்கொண்டு அருகில் வந்து முகத்தோடு முகத்தை தேய்க்க ஆரம்பித்து விடும். ஜெஸிக்காவும் ஒரு விலங்கு பிரியை தான் செல்லும் வழியில் ஏதேனும் நாய்க்குட்டி பூனைக்குட்டி போன்றவற்றைப்பார்த்தால் அங்கேயே அமர்ந்து அவற்றை கொஞ்ச ஆரம்பித்து விடுவாள்.

அகிலனின் பைக் கட்டிடத்தையடைந்தது ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு ஜெஸிக்காவை கீழே இறக்கி தன்னுடன் அழைத்துக்கொண்டு கட்டிடத்திற்குள் சென்றான். கீழ் தளத்தில் வாரச்சம்பளம் வாங்குவதற்காக தொழிலாளிகள் அனைவரும் வரிசையாகவும் ஆங்காங்கே சிறு சிறு குளுக்களாகவும் அமர்ந்திருதந்தார்கள்

ஜெஸிக்கா ஒரு குட்டி தேவதை போல நடந்து வருவதை அத்தனை பேரும் கண்கொட்டாமல் பார்த்துகொண்டிருந்தார்கள்.

அங்கு ஓரமாக வரிசயாக அமர்ந்திருந்த சிலர் 'ஹாய் பாப்பா ஹாய் பாப்பா' என்று அழைத்தார்கள்.

அவள் வெட்கத்தில் அகிலனின் கையை இருக்க பிடித்துகொண்டு அவனுடன் நடந்து சென்றாள்.

அகிலன் ஜெஸிக்காவை அவங்களுக்கு 'ஹாய் சொல்லுன்னு' சொன்னான்.

ஜெஸிக்கா 'ஹாய்' என்று சொல்லிவிட்டு வெட்கத்தில் வாயை மூடிக்கொண்டே சிரித்தாள்.

அகிலனும் அங்கு அமர்ந்திருந்தவர்களிடம் ஒரு புன்னகையை பூத்துவிட்டு நடக்க தொடங்கினான் கும்பல் கும்பலாக ஒரு மூன்று கும்பல் பெண்கள் ஆங்காங்கே அமர்ந்து எதோ பேசிகொண்டிருந்தார்கள் அந்த இடத்திற்கு அகிலனும் ஜெஸிக்காவும் வருவதை பார்த்த மல்லிகா அக்கா

இங்க பாருங்கடி என் தங்கம் வருதுன்னு சொல்லி எழுந்து அகிலனை நோக்கி நடந்தாள் இதை பார்த்த மற்ற பெண்களும் அங்கு சென்று அகிலனையும் ஜெஸிக்கவாவையும் சூழ்ந்துகொண்டு ஜெஸிக்காவை கொஞ்சினார்கள்.

அகிலனை பார்த்து சில பெண்கள், என்னப்பா அண்ணன் குழந்தையா? உனக்கு எப்போ கல்யாணம்? உன் குழந்தைய எப்போ இப்படி கூட்டிட்டு வர போற? சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு போன்ற பல கேள்விகளை கேட்டு துளைத்தார்கள்.

அவற்றில் சில கேள்விகளுக்கு பதில் அளித்த அகிலன் மற்றவைகளை புன்னகையால் மழுப்பினான். ஒருவழியாக அவர்களிடம் இருந்து மீண்டு அவர்களை கடந்து சென்றான்

முருகன் அண்ணே என்று ஓடி வந்தான்.  

ஜெசிக்காவை தூக்கிக்கொண்டு,''பாப்பா எப்படி இருக்க?''என்றான்.

அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு செல்வதால் ஜெஸிக்காவிற்கு முருகன் மிகவும் பரிச்சிகம் ஆனவன்.

''நல்ல இருக்கேண்ணே, நாங்க இப்போ போனிக்ஸ் மாலுக்கு போறோமே, நீங்களும் வரீங்களா?''என்று கேட்டாள்.

முருகன்,''நீ போய்ட்டு வா அண்ணனுக்கு வேலை இருக்கு வரும் பொது எனக்கு என்ன வாங்கிட்டு வருவ?".

ஜெஸிக்கா சற்று யோசித்துவிட்டு,''ம்ம்ம் உங்களுக்கு சாக்லேட் வாங்கிட்டு வரேன்.''  

பேசிக்கொண்டே அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்து சென்றார்கள் எதிர்த்தாப்பில் காவலாளி கந்தசாமியும் அவர் வளர்ப்பு நாய் மணியும் வந்தார்கள்.

மணியை பார்த்தவுடன் ஜெஸிக்கா,''ஐ மணி'' என்று கூறி முருகனிடமிருந்து கீழே இறங்கி ஓடிப்போய் அதன் தலையை கட்டி அணைத்துகொண்டாள்.

மணியும் வாலை ஆட்டிக்கொண்டு ஜெஸிக்காவுடன் மிகவும் அன்புடன் விளையாட ஆரம்பித்தது.

அகிலன்,''என்ன கந்தசாமி ஐயா நல்லா இருக்கீங்களா?'' என்று கேட்டான்.

நான் நல்லா இருக்கீங்கயா நீங்க சவுக்கியமா என்றார் கந்தசாமி.

"நல்ல சவுக்கியம்யா என்ன நைட் டூட்டியா? அதான் பார்க்கவே முடியல"என்றான் அகிலன்.

"ஆமாங்க்யா இந்த கணக்கபுள்ளை டீ வாங்கியார சொன்னாரு நான் போய் வாங்கியாந்திறேன்.''

சொல்லிட்டு அங்கிருந்து கந்தசாமி நடக்க தொடங்கினார்.

மணியின் கழுத்தில் இருந்த பெல்ட்டை ஜெஸிக்கா விடாமல் பிடித்துகொண்டாள். கொஞ்ச நேரம் அங்கே விளையாடிகொண்டிருந்தாள். அகிலன் ஜெஸிக்கா  வா நாம போய் ராம் அங்கிள பார்க்கலாம் என்று தூக்கிகொண்டு படிக்கட்டுகளில் ஏறி மேலே நடக்க தொடங்கினான். முருகனும் அவர்களுடனே மேலே ஏறினான்.

பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பித்தது. 


 - தொடரும்