ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

தர்மதுரை

தர்மதுரை - நல்ல படம் பார்த்த திருப்தி இருந்தது...

                          

சமுத்திரகனி மட்டும் தான் கருத்து சொல்வாரா நாங்களும் சொல்வோம்லன்னு அழகா சொல்லிருக்காரு சீனு ராமசாமி.

கவலைபடாதீங்க கதை சொல்லமாட்டேன் ஆனால் படத்துல வர்ற கருத்துகள தொகுத்து எழுதனும் நிறைய பேர் படிக்கணும்னு எழுதுறேன்.

ரஜினியோட தர்மதுரைல படிச்ச தம்பிங்க படிக்காத அண்ணன ஏமாத்துவாங்க இங்க படிக்காத  சகோதரர்கள் டாக்டருக்கு படிச்ச சகோதரன வச்சு பணம் பார்க்கலாம்னு நினைக்குறாங்க. உண்மை தாங்க பணத்தாசை புடிச்ச சகோதரனுகளுக்கு ஒரு நல்லா படிச்சோ படிக்காதோ உள்நாட்டுலையோ வெளிநாட்டுலையோ ஒரு தம்பி இருந்தா அவனுக கண்ணுக்கு ஒரு பணம் காய்க்கிற மரமா தான் தெரிவாங்க. பணம் விழுந்துகிட்டே இருந்தா மரம் தப்பிச்சுரும் இல்லைனா கல்லாலையே அடிப்பாங்க.

அதுலையும் குறிப்பா அப்படி பணம் சம்பாதிக்கிற அந்த பையனுக்கு பொண்ணு பார்க்குறேன்னு சொல்லி பேரம் பேச ஆரமிப்பானுக பாருங்க அப்போ தான் நீங்க அவனுக முழு சுயரூபத்தையும் பார்க்கலாம். அந்த பையன் எவளோ தான் நல்லவனா எனக்கு இந்த வரதட்சனை எல்லாம் வேண்டாம் அந்த பொண்ணே போதும்ன்னு கெஞ்சி கால்ல விழுந்தாலும். எல்லாம் உன் நல்லதுக்கு தான் செய்றோம், நாங்களா இதை வச்சுகிற போறோம், நாளைக்கு உன் புள்ளகுட்டிகளுக்கு வேணாம், நம்ம குடும்ப கவுரவம் என்ன ஆவுறது. இப்படி எதையாவது சொல்லி சொல்லி அந்த பொண்ணு அந்த பையன் வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி அவங்க அப்பாவ கடன்காரனா நோயாளியா  மாத்திடுவானுக. இப்படி பட்டவனுகளோட கதை தான் இது.

அடுத்து மருத்துவத்துறை - ஒருகாலத்துல ஒரு சேவை துறையா இருந்துச்சு ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மருத்துவனோ மருத்துவச்சியோ இருப்பாங்க யாருக்கு உடம்பு சரியில்லைனாலும் வந்து பார்ப்பாங்க பெருசா காசெல்லாம் வாங்க மாட்டாங்க அந்த வருடம் விளைச்சல்ல அந்த கிராமத்துல ஒவ்வொரு வீட்ல இருந்தும் நெல்லு கொடுப்பாங்க அவளோ தான். இன்னைக்கு நிலைமைக்கு மருத்துவ கல்லூரி வச்சு நடத்துறத விட மருத்துவ கல்லூரில சேர்த்து விடுறேன்னு ஒரு ப்ரோக்கர் கும்பல் அலையுது பாத்தீங்களா அதுகளுக்கு தான் வியாபாரம் ஜாஸ்த்தி ஏன்னா  எல்லா பக்கமும்  கமிசன்  அடிக்கலாம். சைனால படிக்க 25 லட்சம் ரஷ்யாவுல படிக்க 25 லட்சம் பாண்டிச்சேரில படிக்க 60 லட்சம் தமிழ்நாட்டுல படிக்க 80 லட்சம். இன்னும் ஒரு கும்பல் படிக்காமலே சர்டிபிகேட் வாங்கி தரானுகளாம் அந்த அமோன்ட் தெரியல.

இப்படி இவளோ பணம்  செலவழித்து  படித்து  வெளியே  வரும்  டாக்ட்டர  போயா  போய்  ஒரு  கிராமத்துல  சேவை  செய்ன்னு  எப்படி  சொல்ல  முடியும் . சரி  அவங்களுக்கு  தான்  சேவை  செய்ய  எப்படி  மனசு  வரும். வியாபாரத்தில்  போட்ட  முதலை  எப்படி  எடுப்பது  என்று  தானே  யோசிப்பார்கள்.  வசதியான  குடும்பமாக  இருந்தால்  சொந்தமாக  மருத்துவமனை  கட்டுவார்கள்  இல்லை  அவங்க  அப்பா  அம்மா  தாத்தா  பாட்டி  எல்லாரும்  ஏற்கனவே  மருத்துவர்களா  இருந்து  கட்டிய  மருத்துவமனையில்  சேர்ந்துருவாங்க இல்லை  ஒரு  தனியார்  மருத்துவமனைல  சேர்ந்துருவாங்க . அரசு  மருத்துவர்கள்ன்னு  சொல்ல  வரீங்களா அவங்கள்ள  எத்தனை  பேர்  சொந்தமா  கிளினிக் வைக்காம  இருக்காங்கன்னு  சொல்லுங்க  பார்ப்போம்.  

இப்படி தானியார் மருத்துவமனைகள கட்டி வச்சுட்டு சும்மா இருப்பாங்களா அடுத்தடுத்து மருத்துவமனைய நவீன படுத்துறேன்னு நிறைய  இயந்திரங்கள் கருவிகள வாங்கி  போடுவாங்க. நாவீன  மருத்துவ  வசதிகள் தேவை தான் ஆனால் அதை  தேவையானவர்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் சும்மா போறவன் வரவன எல்லாம்  வாயா வந்து படுன்னு ஒரு டெஸ்ட் எடுத்து அனுப்பக்கூடாது. சமீபத்தில் நான் கேள்விப்பட்ட  ஒரு செய்தி சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் வேலை செய்யும் ஒவ்வொரு மருத்துவரும் ஒரு மதத்திற்கு இத்தனை எம்ஆர்ஐ ஸ்கேன் அனுப்பனும் இத்தனை எக்ஸ்ரே அனுப்பனும் இத்தனை பேருக்கு இரத்த சோதனை சிறுநீர் சோதனை அனுப்பணும்ன்னு ஒரு கணக்கு இருக்காம் அப்படி அனுப்பலைன்னா அந்த மாதம் அந்த மருத்துவர் அவர் மருத்துவம் பார்க்கும் அறைக்கு வாடகை செலுத்த வேண்டுமாம்.

எப்படி இருக்கு பார்த்தீங்களா? இந்த மருத்துவமனைக்கு ஒருத்தர் கால்வலின்னு போனாகூட உங்க மண்டைல இருக்க ஒரு எலும்பு விலகிருக்கு அதான் கால்ல வலி போய் மண்டைல ஒரு ஸ்கேன் எடுத்துட்டு வாங்கன்னு சொன்னா கூட எடுக்குறத தவிர வேற வழியில்லை நமக்கு. மருத்துவருக்கும் அந்த மாத வாடகையில் இருந்து  தப்பிக்க வேறு வழியில்லை. என்ன தான் நம்ம மருத்துவர்கள் ஞாயமா இருக்கனும்ன்னு நினைத்தால் கூட  நம்ம எம்.பி.ஏக்கள் விடுவதில்லை பாவம் அவங்க என்ன  செய்வாங்க அந்த மாத டார்க்கெட் கொடுத்தா தான் அவங்க வீட்ல அடுப்பெரியும். முதலாளிகள் சொல்வதை தானே நாம கேட்டாகணும். இந்த கதை இப்படி பட்ட ஒரு மருத்துவரின் கதை அல்ல. மாறாக ஒழுங்காக படித்து கிராமங்களில் சேவை செய்ய துடிக்கும் ஒரு துடிப்பான இளைஞரின் கதை.

அடுத்து மருந்து சீட்டு -  நம்ம எத்தனை பேருக்கு ஒரு டாக்கடர் எழுதி கொடுக்கும் மருந்து சீட்டு புரியும் சொல்லுங்க பார்ப்போம்.  அது அந்த பார்மஸிகாரனுக்கு மட்டும் புரிவது பெரிய ஆச்சரியம் தான். நான் என்ன  நினைக்கிறேன் ஒவ்வொரு முறையும் நாம பார்மஸிகாரர்ட்ட சீட்ட கொடுத்தவுடனே என்னண்ணே என்ன செய்துன்னு எதார்த்தமா கேட்டு அதுக்கு ஏத்த மாதிரி ஒரு யுகத்துல கொடுப்பாரோ? இல்லை நான் எழுதுறத எழுதிட்டேன் எந்த மருந்துக்கு அதிக கமிஷனோ அதை கொடுத்துடுன்னு அர்த்தமா? ஒன்னும் புரியல வெளிநாடுகள்ள நான் சிங்கபூர்ல இருக்குறதால இதை வச்சு சொல்றேன் எந்த டாக்கடர் மருந்து எழுதினாலும் அதை அழகா பிரிண்ட் பண்ணி எல்லோருக்கும் புரியுற வகைல கொடுப்பாங்க. மேலும் நாம அதை வாங்க மருந்துகடைக்கு போன அந்த மருந்த எடுத்து கொடுத்து ஒவ்வொரு மருந்தும் எதுக்கு அந்த மருந்து சாப்பிட்டா தூக்கம் வருமா வயித்துல வாயு வருமா கர்ப்பிணிகள் சாப்பிடலாமான்னு தெளிவா பிரிண்ட் பண்ணி ஓட்டுவாங்க ஒட்றது மட்டுமில்ல நம்ம கைல கொடுக்கைலையே அதை சொல்லி தான் கொடுப்பாங்க. இதெல்லாம் நம்ம ஊர்ல நடக்குமா? என்ன கருமத்தை திண்கிறோம் இதை திண்ணா என்னென்ன கேடு வரும் எதுவும் தெரியாம வேற வழியே இல்லாம கொடுக்குறத திண்ணு தான் ஆகனும் அதான் நம்ம தலைவிதி. இது இந்த மாதிரி ஒரு மருத்துவரோட கதையும் அல்ல குறைந்தபட்சம் மருந்து பேரு நமக்கு புரியுற மாதிரி எழுதுற ஒருத்தரோட கதை.

என்ன படிப்பு படிச்சிருந்தாலும் எவ்வளவு பணம் இருந்தாலும் இன்னுமும் நாம வாழ்க்கைல செட்டில் ஆகல இன்னும் பணம் சம்பாதித்துவிட்டு புள்ளை பெத்துக்கலாம்ன்னு இருக்கவனும் இருக்கான். அட அவசர பட்டுடோமே இந்த கருவ கலைச்சிரு நாலு வருஷம் கழிச்சு அமெரிக்காவுல புள்ளை பெத்துகுவோம்ன்னு பொண்டாட்டிய வற்புறுத்தி கருக்கலைப்பு செய்றவனும் இருக்கான். முடியாதுன்ற பொண்டாட்டிக்கு தெரியாம சாப்பாட்டுல கலக்கவேண்டியாத கலந்து  கருக்கலைப்பு செய்றவனும் இருக்கான். அப்படி பட்டவனோட கதை தான் இது.

கருத்து போதும் படத்தை பத்தி கொஞ்சம் பார்ப்போம்....

ஒரு குடிகாரனா நல்ல கல்லூரி மாணவனா நல்ல மருத்துவரா நடிப்புல பின்னி எடுத்திருக்காரு நம்ம விஜய் சேதுபதி. படத்தில் மூன்று கதாநாயகிகள் தமன்னா, சிருஷ்டி டாங்கே கல்லூரி தோழிகளாகவும் பின் காதலிகளாகவும் அவர்கள் வேலையை கனக்கட்சிதமாக செய்துள்ளனர். கிராமத்து பெண்ணாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் மனதில் நின்றுவிடுகிறார். அருமையான அழகான நடிப்பு.

படத்துல காமெடிக்கு பெரிய வேலையில்லைனாலும் கிடைத்த இடத்துல எல்லாம் கஞ்சா கருப்பு நம்ம சிரிக்க வச்சிருறாரு. இசை அந்த மக்கலங்குதப்பா மடிபுடிச்சு இழுக்குதப்பா பாட்ட இன்டர்நெட்ல பார்த்துட்டு தான் இந்த படத்த பார்த்தே ஆகனும்ன்னு முடிவு பன்னுனேன் செம குத்து மற்ற பாடல்களும் அருமை. கலக்கிடீங்க யுவன்.

இது போக பாராட்டனும்ன்னா கிராமங்கள அழகா ஒளிபதிவு பண்ணின  கேமராவையும் அதுக்கும் மேல அம்மாவா நடிச்சு நம்ம முன்னாடி ஒரு நிஜ கிராமத்து தாயாவே நின்ன ராதிகாவ சொல்லலாம். அப்பறம் ஒரு ஏழை தந்தையா கொஞ்சம் நேரம் வந்தாலும் நம்மை கலங்க வைத்துவிட்டு போகும் எம்.எஸ் பாஸ்க்கர், மருத்துவ கல்லூரி பேராசிரியர வரும் ராஜேஷ், சகோதரர்களாக நடித்தவர்கள்ன்னு எல்லாரையும் பாராட்டியே ஆகனும். அதனால மொத்தமா இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள பாராட்டிருவோம்.

மேலும் படத்தில் ஒரு கோயில் காளையை காண்பித்திருந்தீர்கள் அதை ராதிகா வந்து என்ன சின்ன பிள்ளைங்க இருக்க இடத்துல என்று அதட்டுவதும் அதற்கு  தண்ணி வைப்பதும். பிறகு இறுதி காட்சியில் தன் மகனுக்கு ஒரு தீங்கு நேரபோகிறது என்பதை அந்த கோயில் காளை வந்து நின்றவுடன் குறிப்பில் ராதிகா அறிவதும் அருமை. கிராமங்களில் காளைகளை எப்படி மதிக்கிறார்கள் அவைகளின் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்று சீல கூமுட்டைகளுக்கு எடுத்து சொன்னதற்கு நன்றி.

இன்னுமும் இந்த படத்தை பற்றி நிறைய எழுத தோன்றுகிறது ஆனாலும் இதுக்கு மேல உங்கள போர் அடிக்க விரும்பாததால் இத்துடன் முடித்துகொள்கிறேன். தயவு செய்து தியட்டரில் போய் பாருங்கள் காபாலிக்கு கொடுத்ததை விட இதற்கு மிகவும் குறைவாக தான் கொடுப்பீர்கள் ஆனால் நிறைவாக பெறுவீர்கள்.

மொத்தத்தில் தர்மதுரை தன்னமில்லா தரமான துரை.....

- ஜெயக்குமார்